ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 28 சுற்றுலாப் பயணிகள் காட்டுமிராண்டித்தனமாகக் கொல்லப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
"ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 28 சுற்றுலாப் பயணிகள் காட்டுமிராண்டித்தனமாகக் கொல்லப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வன்மையாகக் கண்டிக்கிறது.
தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களின் குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளனர்; அவர்கள் விரைவில் குணமடைய விழைகிறது.
இந்தக் கொடூர தாக்குதலை நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் ஒன்றிய அரசின் கீழ் உள்ள நிலையில், இந்த கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்த ஒன்றிய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்துகிறோம். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் நமது நாட்டின் எதிரிகள் மட்டுமல்ல, காஷ்மீர் மக்களின் எதிரிகளும்தான். மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டு தாக்குதல் நடந்தப்பட்டிருப்பது உட்பட அனைத்து கோணங்களையும் விசாரிப்பது ஒன்றிய அரசின் கடமையாகும்.
இந்த துயர நேரத்தில், தீவிர அடிப்படைவாத சக்திகளுக்கு எதிராக இந்திய மக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிற்கும்." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.