states

img

ஆயுள் தண்டனையில் இருந்து சஞ்சீவ் பட் விடுவிப்பு!

குஜராத் மாநிலத்தில், கடந்த 1997-ஆம் ஆண்டு போலீஸ் காவல் துன்புறுத்தல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு எதிராக அரசு தரப்பு போதிய ஆதாரம் வழங்காததால், இவ்வழக்கில் இருந்து அவரை விடுவித்து போர்பந்தர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் 2002-ஆம் ஆண்டு மத வன்முறை நடந்தபோது, அங்கு ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் சஞ்சீவ் பட். பின்னாளில் குஜராத் வன்முறை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டபோது, 2002 கலவரத்திற்கு அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி உடந்தையாக இருந்ததாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக 2011 ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்தார். வகுப்புவாதக் கலவரம் நடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று, காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டிய பிரதமர் மோடி, “வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது” என்று மாநில காவல்துறைக்கு அறிவுறுத்தியதாகவும், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் தானும் ஒருவர்  என்று தெரிவித்தார். எனினும், விசாரணை முடிவில், சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்த நீதிமன்றமே, பிரதமர் மோடியை குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கிவிட்டது. இதனால் சஞ்சீவ் பட்  கூறியவை அனைத்தும் ஒன்றுமில்லாமல் போனது. 
வழக்கிலிருந்து பிரதமர் மோடி விடுக்கப்பட்டுவிட்ட பின்னணியில், மோடிக்கு எதிராக சாட்சியம் அளித்த ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியது. அவர் மோடிக்கு எதிராக போலி ஆதாரங்கள் சமர்ப்பித்தாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2015-ஆம் ஆண்டில், சஞ்சீவ் பட் காவல்துறை சேவையிலிருந்து நீக்கப் பட்டார்.  அதுமட்டுமல்லாமல், 30 ஆண்டுகளுக்கு முன்பு 1990-ஆம் ஆண்டு நிகழ்ந்த பிரபுதாஸ் மாதவ்ஜி வைஷ்ணானி என்பவரின் காவல் நிலைய மரணத்திற்கு சஞ்சீவ் பட் காரணமாக்கப்பட்டு கைது நடவடிக்கைக்கும் உள்ளாக்கப்பட்டார். இவ்வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மேலும், ராஜஸ்தானைச் சேர்ந்த வழக்கறிஞரை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்க முயன்றதாகவும்,  கடந்த 1997-ஆம் ஆண்டு ஜதாவ் என்பவரை போலீஸ் காவலில் வைத்து  துன்புறுத்தியதாகவும் அவர் மீது அடுக்கடுக்காக வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்குகளில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. 
இந்த சூழலில், தற்போது ராஜ்கோட் சிறையில் இருக்கும் சஞ்சீவ் பட்டுக்கு எதிராக அரசு தரப்பு போதிய ஆதாரம் வழங்காததால், போலீஸ் காவல் துன்புறுத்தல் வழக்கில் இருந்து அவரை விடுவித்து போர்பந்தர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.