பட்டாசுத் தடையை முறையாக அமல்படுத்தாத தில்லி அரசுக்கும், தில்லி காவல்துறைக்கும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தில்லியில் தீபாவளி உள்ளிட்ட தொடர் பண்டிகைகளை ஒட்டி வருகிற ஜன.1, 2025 வரை பட்டாசுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான பட்டாசுகள் இருப்பு வைப்பது, விற்பது, பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் தீபாவளிக்கு மறுநாள் (நவ.1) தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமானது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கில், தில்லியில் பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை ஏன் சரியாக அமல்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பியதுடன், தில்லியில் காற்று மாசு குறித்து கவலை தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி பட்டாசு வெடிக்க தடை விதித்த உத்தரவுகள் மற்றும் அதை அமல்படுத்த எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு தில்லி அரசுக்கும், தில்லி காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.
பட்டாசுகளுக்குத் தடை என்ற விதிமுறை பின்பற்றப்படவில்லை என ஊடகங்களில் பரவி வரும் செய்திகளைக் கவனித்த உச்ச நீதிமன்றம், தானாக முன்வந்து கண்டனம் தெரிவித்துள்ளது.