“தில்லிக் காவல்துறை, வடகிழக்கு தில்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நடத்திடும் பாரபட்சமான விசாரணையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது, அமைதியான முறையில் நடைபெற்ற அரசியல் கிளர்ச்சிப் போராட்டங்களை, கிரிமினல்மயமாக்கிடும் இத்தகைய நடவடிக்கைகளிலிருந்து அரசாங்கம் தன்னைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.”
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் (டிசம்பர் 9) புதன்கிழமையன்று வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கையானது, இந்த ஆண்டின் துவக்கத்தில் வட கிழக்கு தில்லியில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே பொறுப்பு என்று கூறியிருக்கிறது. பிப்ரவரியில் நடைபெற்ற கலவரங்களில் 53 பேர் உயிரிழந்தனர், இவர்களில் 40 பேர் முஸ்லீம்கள், 13 பேர் இந்துக்கள். வன்முறை “விரிவானதற்கும்”, இது தொடர்பாகக் காவல்துறையினரின் விசாரணை பாரபட்சமான முறையில் நடைபெறுவதற்கும், அமித் ஷாவே பொறுப்பு என்று அறிக்கையில் குறிப்பாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
‘வட கிழக்கு தில்லியில் மத வன்முறை, பிப்ரவரி 2020’ என்று தலைப்பிட்டுள்ள அறிக்கையானது, “வன்முறை விரிவானதற்கு அமித் ஷாவின் கீழ் இருந்துவரும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பங்கு கணிசமாக இருந்தது,” என்று கூறுகிறது.
தில்லிக் காவல்துறை இதுவரை குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிவந்த முன்னணி செயற்பாட்டாளர்கள் மற்றும் மாணவர்கள் பலரை, கலவரங்கள் ஏற்பட “சதி” செய்தார்கள் என்று கூறி கைது செய்திருக்கிறது. பிப்ரவரி கலவரங்கள் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள துணைக் குற்ற அறிக்கை ஒன்றில், ஒரு சாட்சியின் வாக்குமூலத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பெயரும் இடம் பெற்றிருக்கிறது. இவர் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடுபவர்களைத் “தூண்டிவிட்டதாகவும் அணிதிரட்டியதாகவும்” அதில் கூறப்பட்டிருக்கிறது. எனினும் சீத்தாராம் யெச்சூரி குற்றஞ்சாட்டப்பட்டவராக இணைக்கப்படவில்லை.
குடியுரிமைத் திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டங்களைக் குறிப்பிட்டு, இவ்வாறு “அமைதியான அரசியல் கிளர்ச்சிப் போராட்டங்களை” கிரிமினல்மயமாக்கியிருப்பதை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்பே கண்டித்திருக்கிறது. ஓர் அறிக்கையில், “தங்களுடைய அரசியல் எஜமானர்கள் அளித்திடும் சரடுகளுக்கேற்ப தில்லிக் காவல்துறையினர் அருவருப்பானமுறையில் செயல்படுவதை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. அமைதியான அரசியல் கிளர்ச்சிப் போராட்டங்களைக் கிரிமினல்மயப்படுத்திடும் இத்தகைய செயல்களை அரசாங்கம் தவிர்த்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது,”என்று கூறப்பட்டிருக்கிறது.
புதன் அன்று வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், தில்லிக் கலவரங்களை, மத வன்முறை என்று சித்தரிப்பது சரியல்ல. ஒரு சூழ்நிலையை ‘கலவரங்கள்’ என்று சித்தரித்தால் அங்கே இரு தரப்பினரும் சமமாகப் பங்கேற்றிருக்க வேண்டும். எனினும், இங்கே தாக்குதல் என்பது இந்துத்துவா கும்பலிடமிருந்தே இருந்தது. மறுபக்கத்திலிருப்பவர்கள், பிரதானமாகத் தங்களை இத்தகைய தாக்குதல்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவே கடும் முயற்சியில் ஈடுபட்டிருந்திருக்கின்றனர். .. அநேகமாக அனைத்துப் பகுதிகளிலும் காவல்துறையினர் இந்துத்துவா கும்பல்களுக்கு சார்பாக இருந்து வந்ததற்கு வீடியோ சாட்சியங்கள் இருக்கின்றன.”
மேலும், காவல்துறையினர் கட்டவிழ்த்துவிட்டுள்ள சரடுகளைப் பொய்ப்பிக்கும் விதத்தில், ஏராளமான நிகழ்வுகளும் இந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் பலரை, கலவரங்களைத் தூண்டினார்கள் என்பதற்காக, பயங்கரவாதத்துடன் இணைத்துக் குற்றஞ்சாட்டிப் பதிவுசெய்யப்பட்டுள்ள குற்ற அறிக்கையை மேற்கோள்காட்டி, அறிக்கையில் பிப்ரவரி 23க்கும் 27க்கும் இடையே 26 லட்சம் மக்கள்தொகை கொண்ட ஒரு மாவட்டத்தில் 1,393இலிருந்து 4,756 வரை காவல்துறையினர் பாதுகாப்புப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர் என்று காட்டப்பட்டிருக்கிறது.
“பிப்ரவரி 24 அன்று வன்முறை வெடித்தபோது, ஏன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்பதே நாம் முன்வைக்கும் கேள்வியாகும். ஏன், ராணுவம் வரவழைக்கப்படவில்லை? அனுப்பிவைக்கப்பட்டிருந்த தில்லிக் காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படையினரின் எண்ணிக்கையும் மிகவும் குறைவு என்பது மட்டுமல்லாமல் அவர்கள் மிகவும் காலதாமதமாகவே அனுப்பி வைக்கப்பட்டனர்,” என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
மேலும், பாஜக தலைவர்கள், “துரோகிகளைச் சுட்டுத்தள்ளுங்கள்” என்றும், “சிறுபான்மை இனத்தவர்கள், இந்துக்களின் வீடுகளுக்குள் புகுந்து, வன்புணர்வு மற்றும் கொலை செயல்களில் ஈடுபடுகிறார்கள்” என்றும் பேசியவையெல்லாம் உள்துறை அமைச்சரால் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாகவும் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.
அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: “சம்பவங்கள் தொடர்பாக புலன் விசாரணை தொடங்குவதற்கு முன்பே, உள்துறை அமைச்சர் (மார்ச் 11 அன்று மக்களவையில்) சம்பவங்கள் தொடர்பாக தன் முடிபுகளை (findings) முன்வைத்தார். அவர் மக்களவையில் முன்வைத்த முடிபுகளின் அடிப்படையிலேயே, அவற்றை நிலைநாட்டும் விதத்திலேயே தங்கள் புலன்விசாரணைகளை, காவல்துறையினர் மேற்கொண்டனர். மேலும் அவர், அவருக்கு ‘வெறுப்பு உரைகள்’ என்று எதை நினைத்துக்கொண்டிருந்தாரோ அதையும் அவையில் அவர் விவரித்தார். காங்கிரஸ் தலைவர்கள் 2019 டிசம்பர் 14 அன்று, ஒரு பேரணியில் மக்களை வீதிக்கு வாருங்கள் என்று அழைத்ததாகவும், மேலும் இது ‘செய் அல்லது செத்து மடி’ போராட்டம் (do or die battle) என்று கூறியதாகவும் இவ்வாறு அவர்கள் “வெறுப்பு உரைகளை” அளித்தார்கள் என்றும் அவர் கூறினார். இவற்றின்மூலம் அவர் கட்டி எழுப்ப முயன்ற அம்சம் என்னவென்றால், உண்மையில் வன்முறையைத் தூண்டியது எதிர்க்கட்சியினர்தான் என்றும், அதிலும் குறிப்பாக வன்முறைக்கு சிறுபான்மையினரே காரணம் என்றும் குறைகூறினார்.
மார்ச் 11 அன்று மக்களவையில், அமித் ஷா, கலவரங்கள், “நன்கு திட்டமிட்ட சதி” என்று அழைத்திருந்ததுடன், 36 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் கலவரங்களைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதற்குப் பாராட்டுக்களையும் தெரிவித்தார். அவர் உரையாற்றுகையில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்கள்.
அமித் ஷாவின் அறிக்கைக்கு முற்றிலும் முரண்பட்டவிதத்தில், பிப்ரவரி 28 அன்றே தாக்குதல்கள் தொடங்கிவிட்டன என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பாஜக தலைவர்கள் கபில் மிஷ்ரா மற்றும் அனுராக் தாகூர் உரைகள் மற்றும் பிப்ரவரி 21 அன்று நடைபெற்ற சிவராத்திரி ஊர்வலத்தில் ஆத்திரமூட்டும் விதத்தில் முழக்கங்கள் மேற்கொள்ளப்பட்டதும் இவையே வன்முறைக்குக் காரணங்கள் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. மேலும் அறிக்கையில், தில்லி ஆம் ஆத்மி கட்சி அரசாங்கமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இழப்பீட்டில் ஒரு “பகுதியே” அளிக்கப்பட்டிருப்பதற்காகக் குறை கூறப்பட்டிருக்கிறது. இறுதியாக அறிக்கையில், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையின் கீழ் சுயேச்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டிருக்கிறது.
(நன்றி: தி ஒயர் இணைய இதழ்)
(தமிழில்: ச.வீரமணி)