states

img

சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸை விற்றது மோடி அரசு!

புதுதில்லி, டிச.2- ‘சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ்’ எனும் பொதுத்துறை பொறியியல் நிறுவனத்தை, ஒன்றிய பாஜக அரசானது, ‘நந்தால் பைனான்ஸ் மற்றும் லீசிங்’ என்ற தனியார் நிறுவனத்திற்கு 210 கோடி ரூபாய்க்கு விற்று முடித்திருக்கிறது. இதன்மூலம் ‘ஏர் இந்தியா’விற்கு அடுத்தபடியாக, முழுமையாக விற்று முடிக்கப்பட்ட இரண்டாவது பொதுத்துறை நிறுவனம் என்ற பெயரை ‘சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ்’ நிறுவனம் பெற்றுள்ளது. கடந்த 1974-ஆம் ஆண்டு, ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இந்நிறுவனம் துவங்கப்பட்டது. ‘சோலார் போட்டோவோல்டிக்’ பிரிவில் முன்னோடி நிறுவனமான சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ், இந்த தொழில்நுட்பத்தை, தனது சொந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் வாயிலாகவே உருவாக்கி சாதனை படைத்தது. ரயில்கள் பாதுகாப்பாக ஓடுவதற்கான ‘ஆக்சில் கவுண்ட்டர் சிஸ்டம்’ எனும் தொழில் நுட்பத்தையும் உருவாக்கியது.  

இத்தகைய முக்கியமான நிறுவனத்தைத்தான், ஒன்றிய பாஜக அரசு தனது தனியார்மய வெறியின் ஒருபகுதியாக விற்று முடித்துள்ளது.  சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்ற ‘நந்தால் பைனான்ஸ்’ மற்றும் ‘ஜே.பி.எம். இண்டஸ்ட்ரீஸ்’ ஆகிய இரண்டு நிறுவனங்கள் விருப்பத்தை தெரிவித்தன. இதில், ஜே.பி.எம். நிறுவனம் 190 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டிருந்தது. ஆனால், ‘நந்தால் பைனான்ஸ் அண்ட் லீசிங் நிறுவனம்’ சுமார் 210 கோடி ரூபாய்க்கு சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது.

இந்த ஏலத்திற்கு, பங்கு விலக்கல் தொழில்நுட்பக் (strategic disinvestment) குழுவில் இருக்கும் சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் இணைந்து ஒப்புதல் அளித்துள்ளனர்.  இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு வர்த்தகம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றியுள்ளதன் மூலம் நந்தால் பைனான்ஸ் அண்ட் லீசிங் நிறுவனம் நேரடியாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியிலோ அல்லது கூட்டணி முறையிலோ உற்பத்தியைத் துவங்கி பெரிய அளவில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தி லாபம் பார்க்கும் என்று கூறப்படுகிறது.