states

அணைகள் பாதுகாப்புச் சட்ட முன்வடிவு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது

புதுதில்லி, டிச.4- இந்தியா ஒரு மாபெரும் நாடு. பல்வேறு மக்கள் திரளினர் பல்வேறு வேற்றுமை களுடன் இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழும் நாடு. இத்தகைய கூட்டாட்சிக் கட்டமைப்பானது நம் அரச மைப்புச்சட்டத்தின் அடித்தளமாகும். இது நம் மக்களால் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது. இப்போது இங்கே கொண்டுவரப்பட்டிருக்கும் அணைகள் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு இதற்கு எதிரானது. எனவே இதனை அவை நிராகரித்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வி.சிவதாசன் கேட்டுக் கொண்டார். நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. வியாழன் அன்று 2019ஆம் ஆண்டு அணைகள் பாதுகாப்புச் சட்டமுடிவின் மீது நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு, டாக்டர் வி.சிவ தாசன் தன் முதல் பேச்சை  தொடங்கிப் பேசிய போதே இவ்வாறு கூறினார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தச் சட்டமுன்வடிவானது நம் காலத்தின் உணர்வுகளுக்கு எதிரான ஒன்று என்று கூறுவதற்கு மிகவும் வருந்துகிறேன். நம் காலத்தின் உணர்வு என்பது ஜனநாயகம். ஆனால் இந்தச் சட்டமுன்வடிவின் சாராம்சம் முற்றிலும் ஜனநாயக உணர்வுக்கு எதிரான தாகும். உங்களுக்கு அவையில் பெரும் பான்மை இருக்கிறது என்பதாலேயே, நீங்கள்  அரசமைப்புச்சட்டத்திற்கும், ஜனநாயகத்திற் கும் எதிராகப் போக முடியாது, விஷயங்க ளைத் திணிக்க முடியாது. நம் அரசமைப்புச்சட்டம் மாநிலங்களுக் குச் சில உரிமைகளைக் கொடுத்திருக்கிறது. தயவுசெய்து அவற்றைக் காலில்போட்டு மிதித்திடாதீர்கள். நம்முடைய சமூக அமைப்பிற்கும், பொரு ளாதார வளர்ச்சிக்கும் அணைகள் மிகவும் முக்கியமாகும். இந்தியாவில் எண்ணற்ற ஆறுகளும், அணைகளும் இருக்கின்றன. இந்தியாவில் 5,701 பெரிய அணைகள் இருக்கின்றன. இந்தச்சட்டமுன்வடிவில் காணப்படும் மிகவும் ஆபத்தான ஷரத்துக்கள் குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். அவை, மாநிலங்கள் தங்கள் நலன்களைப் பாது காப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுப்பதிலிருந்து அவற்றை பறித்துக்கொள் கின்றன.

அரசமைப்புச்சட்டம் கூறுவதென்ன?

இந்தச் சட்டமுன்வடிவானது நாடு முழு மைக்கும் பொருந்தும் என்று கூறுகிறது. ஆனால், நம் அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பதிவில் (entry) உள்ள இரண்டாவது பட்டியலின்படி, தண்ணீர் மாநிலப் பட்டியலில் வரக்கூடிய ஒன்றாகும். மேலும் 56ஆவது பதிவு ஒன்றாவது பட்டியலின்படி தண்ணீர்,  மாநிலங்களுக்கிடையேயான தண்ணீர் தாவாக்கள் குறித்ததாகும். 17ஆவது பதிவு என்ன கூறுகிறது? “தண்ணீர், அதாவது தண்ணீர் விநியோ கம், பாசனம் மற்றும் கால்வாய்கள் முதலான வையும், தண்ணீரைச் சேமித்து வைத்துப் பயன்படுத்துவதும்  தண்ணீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதும் 56ஆவது பதிவு முதலாவது பட்டியலுக்கு உட்பட்டதா கும்” என்று கூறுகிறது.     ஆனால் இந்தச்சட்டமுன்வடிவின் முகப்புரையும் மற்றும் ஷரத்துக்களும், அணைகளை இயக்குதல்  தொடர்பாக அரசமைப்புச்சட்டத்திற்கு எதிராகச் செல் கின்றன. ஆகையால் அணைகளை இயக்கு தல் தொடர்பாக இந்தச்சட்டமுன்வடிவில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் நீக்கப்பட வேண்டும்.

இந்தச் சட்டமுன்வடிவு அணைப் பாது காப்பு தொடர்பாகக் கொண்டுவரப்படக்கூடிய முதல் சட்டமுன்வடிவு அல்ல. 2010இல் இதேபோன்று ஒரு சட்டமுன்வடிவு நாடாளு மன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டமுன்வடிவு மேற்கு வங்கம் மற்றும் ஆந்திரப்பிரதேச மாநில அரசுகளின் கோரிக்கைக்கு இணங்க அறிமுகப்படுத்தப் பட்டது. அந்தச் சட்டமுன்வடிவில், சம்பந்தப் பட்ட மாநிலங்கள் ஒரு தீர்மானத்தின்மூலம் ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் அது பொருந்தும் என்று அதில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தச் சட்ட முன்வடிவானது அதிகாரம் முழுவதையும் ஒன்றிய அரசுக்கு மாற்றிக்கொள்கிறது. இது நேரடியாகவே, நாட்டிலுள்ள சட்டங்களுக்கு எதிரானதாகும், அரசமைப்புச்சட்டத்தின் கூட்டாட்சி அடிப்படையிலான சட்டப்பிரிவுக ளுக்கும் எதிரானதாகும். இதற்குமுன் வேளாண்மையைப் பாதிக்கக்கூடிய விதத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் அனைத்துமே திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. ஏனெனில் அவை மாநிலங்களுக்கு ஏற்புடையதாக இருந்திடவில்லை.  அந்தச்சட்டங்கள் மேலே யிருந்து ஒரேமாதிரியான தன்மையைத் திணிக்க முயற்சித்தன. ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொருவிதமான பிரச்ச னைகள் இருந்ததால் அவை மாநிலங்கள் அனைத்துக்கும் ஏற்புடையதாக அமைந்திடவில்லை. எனவே இதில் மாநிலத் திற்கு மாநிலம் வித்தியாசமான அணுகு முறை தேவை.

முட்டாள்தனமான தெளிவற்ற வரையறை

இந்தச்சட்டமுன்வடிவில், ஒன்றிய அரசு தன் அதிகாரத்தை ஏதேனும் ஒரு காரணத்தை க்கூறிப் பயன்படுத்தக்கூடிய விதத்தில் தெளி வற்ற வரையறைகள் இருப்பதைக் காணமுடி கிறது. உதாரணமாக, “வழக்கமான வடிவத் தில் இல்லாத அணை” (“dam of unusual design”) என்று ஒரு வரையறை காணப்படு கிறது. இது முற்றிலும் முட்டாள்தனமான தாகும். நாட்டிலுள்ள ஒவ்வொரு அணையும் பல்வேறு தர நிர்ணயங்களின்படியும், தொழில்நுட்பங்களின் அடிப்படையிலும் கட்டப்பட்டிருக்கின்றன. இந்தியாவில், 5,701 பெரிய அணைகள் இருக்கின்றன. இவை  ஒவ்வொன்றும் வெவ்வேறான தொழில்நுட் பங்களுடன் கட்டப்பட்டவைகளாகும்.   இந்த நிலையில் அரசாங்கம் இந்தச்சட்ட முன்வடிவில் கூறப்பட்டுள்ள “வழக்கமற்ற ஒன்று” (“unusual”) என்ற சொல்லைப் பயன்படுத்த முடியுமானால், அநேகமாக அனைத்து அணைகளுமே இவர்கள் கூறு கின்ற பட்டியலுக்குள் வந்துவிடும். இவ்வாறு சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொண்டு, அவற்றைத் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதைக் கடந்த காலங்களில் நாம் பார்த்திருக்கிறோம். இது தொடர்பாக ஏராள மான உதாரணங்களை நாம் கூறமுடியும். எனவே இத்தகைய நிலையில் அணைப் பாதுகாப்பு தொடர்பான பலதரப்பட்ட நிலை மைகளை ஒன்றிய அரசாங்கம் கையாள்வ தற்கு அனுமதிப்பது புத்திசாலித்தனமல்ல.

 மாநிலங்களுக்குள் அமைக்கப்பட்டுள்ள அணைகளின் பாதுகாப்பு குறித்து உறுதி யான நடவடிக்கைகள் எடுப்பதற்கு சம்பந்தப் பட்ட மாநில அரசுகளுக்குச் சுதந்திரம் உண்டு. அத்தகைய மாநில அரசுகளின் சுயாட்சி உரிமையை பறித்தெடுத்துக்கொள்வ தற்கான சந்தர்ப்பத்தை இந்தச்சட்டமுன்வடிவு கொண்டுவருகிறது என்று நாங்கள் உறுதி யாக நம்புகிறோம். இத்தகைய வழியில் இந்தச்சட்டமுன்வடிவைக் கொண்டுவரா தீர்கள். நாளை நிலைமைகள் மாறலாம். ஏனெனில் வேளாண் சட்டங்கள் கொண்டு வந்தீர்கள், தொழிலாளர் சட்டங்கள் (Labour Codes) என்ற பெயரில்  தொழிலாளர் நலச் சட்டங்களை தொழிலாளர் விரோதச்சட்டங்க ளாக மாற்றினீர்கள். அதேபோன்று நம் அர சமைப்புச்சட்டத்தின் கூட்டாட்சிக் கட்டமைப்பின் மீதான தாக்குதல் இந்தச்சட்டமுன்வடிவிலும் தெளிவாகக் காணப்படுகிறது. அணைப் பாதுகாப்பு தொடர்பாக தேசி யக் குழு ஒன்று அமைக்கப்பட இருக்கிறது. அதில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் எண் ணிக்கை 10. ஆனால் அனைத்து மாநில அர சுகளுக்கும் சேர்ந்து அதிகபட்ச பிரதிநிதிகள் எண்ணிக்கை 7. அவர்களும் சுழற்சி முறை யில் நியமிக்கப்படுவார்களாம். அப்படியா னால் பிரதிநிதித்துவப்படுத்தமுடியாத மாநில அரசுகளின் நிலை என்ன? அந்த மாநிலங்க ளுக்கு ஒன்றிய அரசு அளித்திடும் உத்தர வாதம் என்ன?

அதிகாரங்களை பெருக்கிக் கொள்ளும் முயற்சி

மேலும் இந்தச்சட்டமுன்வடிவில் அவ்வப்போது ஒன்றிய அரசு தன் அதி காரங்களைப் பெருக்கிக்கொள்வதற்கும் ஏராளமான அதிகாரங்களை அளித்திருக்கி றது. இவை மிகவும் ஜனநாயகவிரோத நட வடிக்கையாகும். இந்தச்சட்டமுன்வடிவு அர சமைப்புச்சட்டத்தின் மீதான, நம் நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். நம் நாட்டில் மக்களிடையே காணப்படும் வேற்றுமையின் ஒற்றுமை யைக்காணும் பண்பில் மீதான தாக்குதலா கும். இத்தகைய வேற்றுமைப் பண்புகள்மீது தாக்குதல் தொடுக்கப்பட்டால், நாட்டின் பெரும் பான்மை மக்கள் விளிம்புநிலைக்குத் தள்ளப்படுவார்கள். இதன் பொருள் அவர்கள் தங்களின் அடையாளங்களை இழப்பார்கள். அவர்கள் தங்களின் மொழியை இழப்பார் கள், அவர்கள் தங்களின் கலாச்சாரத்தை யும், பண்பாடுகளையும், பழக்க வழக்கங்க ளையும் இழப்பார்கள். அவ்வாறு அவர்களு க்கு ஏற்படும் இழப்புகள் அவர்களுக்கு வளர்ச்சியை ஏற்படுத்த உதவாது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பே நம் நாட்டின் கூட்டாட்சி அமைப்பு முறையின் அடிப்படைக் கொள்கையாகும். நம் நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு என்பதே, இந்தியா என்பது மாநிலங்களின் ஓர் ஒன்றியம் (India is a union of states) என்பதேயாகும். இந்தியா என்பது  செங்கற்க ளாலோ, கற்களாலோ அல்லது துப்பாக்கிக் குண்டுகளாலோ, ஏவுகணைகளாலோ அல்லது வலுக்கட்டாயத்தாலோ உருவானது அல்ல. மாறாக பல்வேறுபட்ட இனத்தைச் சேர்ந்த மக்களின் அன்பாலும், அரவணைப் பாலும், பாசத்தாலும் நேசத்தாலும் கட்டி எழுப் பப்பட்டதாகும். விடுதலைப் போராளிகளின் சிந்தனைகளால் கட்டி எழுப்பப்பட்டதாகும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ரத்தத்தாலும், வியர்வையாலும் கட்டி எழுப்பப்பட்டதாகும்.

மாநில உரிமைகள் பறிப்பு

அவர்கள் மதத்தால் வேறுபட்டவர் கள்தான், மொழியால் வேறுபட்டவர்கள்தான், அடையாளங்களால் வேறுபட்டவர்கள்தான். ஆனாலும்கூட அவர்கள் அனைவரும் மனித குலத்தின் மாண்புகளை உயர்த்திப்பிடித்து, ஒற்றுமையுடன் இந்தியாவைக் கட்டி எழுப்பினார்கள். ஆனால் இப்போது நாம் என்ன பார்க்கி றோம்? மாநிலங்களின் உரிமைகள் நாளு க்கு நாள் ஒன்றிய அரசால் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மாநிலங்களின் உரி மைகள் மட்டுமல்ல, மாநிலங்களவையின் உரிமைகளும் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.  இதன் காரணமாக, மாநிலங்களின் பிரதிநிதிகளாகிய எங்களால் எங்கள் மாநி லத்தின் நலன்களைப் பாதுகாப்பதில் தோல்வி யடைய வேண்டியிருக்கிறது. ஒன்றிய ஆட்சியாளர்களால் கூட்டாட்சித்தத்துவத்தின் மாபெரும் விழுமியங்கள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இத்தாலி, ஜெர்மனிபோல்...

இதேபோன்று எதேச்சதிகாரிகள் இத்தாலி, ஜெர்மனி போன்று தங்கள் நாடுக ளில் ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணித்து, மக்களிடையே காணப்பட்ட வேற்றுமைப் பண்புகள் மீதுதான் முதலில் தாக்குதல் தொடுத்தார்கள் என்று உலக வரலாறு நமக்கு நினைவுபடுத்துகிறது. மாநிலங்களில் உள்ள மக்களின் பிரதிநிதிகள் என்ற முறை யில் மாநிலங்களின் மீதான தாக்குதல்களை எதிர்த்திட வேண்டிய நிலையில் இருக்கி றோம்.    நம்மை ஆண்ட பிரிட்டிஷ் ஆட்சியா ளர்கள் நம்மைப் பிரித்தாளும் சூழ்ச்சி மூல மாகவே ஆட்சி செய்து வந்தார்கள். இப்போது பெரும் கார்ப்பரேட்டுகள் எனவேதான் மக்க ளின் ஒற்றுமையின் பிரதான எதிரிகளாக இருக்கிறார்கள். அதனால்தான் ஆளும் வர்க்கம் அதேபோன்று பிரித்தாளும் சூழ்ச்சியை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

கெடுவாய்ப்பாக ஒன்றிய அரசாங்கம், கார்ப்பரேட்டுகளின் அரசாங்கமாக வேலை செய்து கொண்டிருக்கிறது. கார்ப்பரேட்டுகள் நாட்டை சூறையாட அனுமதித்துக்கொண்டி ருக்கிறது. மக்களின் ஒற்றுமை அதனைத் தடுத்து நிறுத்திடும். உலக வரலாறு அதனை மெய்ப்பித்திருக்கிறது. இது தொடர்பாக கடந்த காலங்களில் நாம் ஏராளமான அனுபவங்களைப் பெற்றிருக்கி றோம். பகத்சிங், சுகதேவ், ராஜகுரு, அசஃபுல்லா கான் போன்றவர்களின் வீரம் செறிந்த வரலாறுகளும், மகாத்மா காந்தி, சாவித்ரிபாய் புலே, ஜவகர்லால் நேரு, பி.ஆர்.அம்பேத்கர், ஏ.கே. கோபாலன் போன்ற எண்ணற்ற தலைவர்களும், இத்தகைய சுரண்டலுக்கு எதிராக மக்களின் ஒற்றுமை யை நம் பிரதான லட்சியம் என்று நமக்குப் போதித்திருக்கிறார்கள். எனவே, மக்களின் ஒற்றுமையுடன் இத்தகைய ஆளும் வர்க்கங்களின் கொள்கைகளை முறியடித்தி டுவோம் என நிச்சயமாக நம்புகிறேன்.

வரலாறு மெய்ப்பிக்கும்

ஆளும் வர்க்கம், நம்மை மொழியின் மூலமாகவும், வர்ணத்தின் மூலமாகவும், உணவின் மூலமாகவும், உடையின் மூலமா கவும் பிரிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இவற்றை எல்லாம் புறந்தள்ளி, நாம் முன்னேறுவோம். வரலாற்றின் பக்கங்கள் அதனைத்தான் நமக்கு மெய்ப்பித்துள்ளன.   “பாரத சமுதாயம் வாழ்கவே - முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை ஒப்பி லாத சமுதாயம் உலகத்துக் கொரு புதுமை” என்று மகா கவி பாரதியார் பாடினார்.  அதேபோன்று அவர் மேலும், “எல்லோரும் இந்நாட்டு மக்கள்” என்று மற்றொரு பாடலைப் பாடியுள்ளார்.(மலையாளம், கன்னடம், தெலுங்கு கவிஞர்க ளின் பாடல்களையும் கூறினர்)    இந்தியா என்பது ஒரு மாபெரும் நாடு. பல்வேறு மக்கள் திரளினர் பல்வேறு வேற்று மைகளுடன் இருந்தாலும் அவர்கள் அனை வரும் ஒற்றுமையுடன் வாழும் நாடு. இத்தகைய கூட்டாட்சிக் கட்டமைப்பானது நம் அரசமைப்புச்சட்டத்தின் அடித்தளமாகும். இது நம் மக்களால் பாதுகாக்கப்பட்டு வந்தி ருக்கிறது. இப்போது இங்கே கொண்டுவரப் பட்டிருக்கும் அணைகள் பாதுகாப்புச் சட்ட முன்வடிவு இதற்கு எதிரானது. எனவே இந்த அவை நிராகரித்திட வேண்டும்.இவ்வாறு டாக்டர் வி. சிவதாசன் பேசினார்.    

    - ச.வீ


 

;