states

img

கம்பீரமான வெற்றி

புதுதில்லி, டிச.10- பொது எதிரியை அடையாளம் கண்டு ஒற்றுமையாகப் போராடிய விவசாயிகளால் கம்பீரமான வெற்றியை பெறமுடிந்துள்ளது. முதலாவதாக, ஐக்கிய கிசான் மோர்ச்சாவால் விவசாயிகளின் விரிவான ஒற்றுமையைக் காக்க முடிந்தது. ஒரு நீண்ட, விரிவான மக்கள் போராட்டத்தால் ஏற்பட்ட சிறு இடையூறுகள் முடிவுக்கு வந்துவிட்டன. முக்கியமான பிரச்சனைகள் குறித்து நீண்ட விவாதங்கள் மூலம் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.

ஐநூறுக்கும் மேற்பட்ட அமைப்புகளின் பொதுத் தளமான ஐக்கிய கிசான் மோர்ச்சா எண்ணெய் தடவிய இயந்திரம் போல் செயல்பட்டது. அகில இந்திய விவசாயிகள் சங்க நிதிச் செயலர் பி.கிருஷ்ணபிரசாத் கூறுகையில், வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் ஒன்றிய அரசு முன்வைத்த வரைவு திட்டங்களுக்கு பதிலளிப்பதில் கிசான் மோர்ச்சா ஒற்றுமையின் பலத்தை வெளிப்படுத்தியுள்ளது. பயிர்களுக்கு நியாயமான விலை கிடைக்காததற்கு கார்ப்பரேட் சுரண்டல்தான் காரணம். இதற்கு அரசு வசதி செய்து தருகிறது. சுரண்டலை சட்டப்பூர்வமாக்க விவசாயச் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சாதி, மதம், இதர அடையாளம் என்ற வேறுபாடின்றி கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் தங்களின் பொது எதிரி என்பதை விவசாயிகள் உணர்ந்த நிலையில் விவசாயிகளை பிளவுபடுத்தும் சதிகள் தோல்வியடைந்தன. போராட்டத்தின் மிகப் பெரிய சாதனை, எதிர்காலப் போராட்டங்களுக்காக விவசாயிகள் மத்தியில் வலுவான வர்க்க உணர்வை உருவாக்கியது.

தோல்வியடைந்தது பாஜகவின் பிளவுபடுத்தும் முயற்சி

விவசாயிகளின் வெற்றியால் பாஜகவின் பிளவுபடுத்தும் முயற்சி தோல்வியடைந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் 56 அங்குல மார்பு மண்ணில் உழைக்கும் மக்களின் பார்வையில் மதிப்பற்று போனது. இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, விவசாயத் துறையை கார்ப்பரேட்மயமாக்குவதற்கான வாய்ப்பாக கோவிட் முழு அடைப்பை ஒன்றிய அரசு பயன்படுத்தியது. ஆத்மநிர்பர் தொகுப்பின் ஒரு பகுதியாக புதிய விவசாய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதலில் அறிவித்தார். விரைவில் அரசாணைகள் வெளியிடப்பட்டன. நாடாளுமன்றத்தில் அவசர அவசரமாக சட்டம் நிறைவேற்றப்பட்டது. கோவிட் காலத்தில் கூட, வளர்ச்சியடைந்து வரும் விவசாயத் துறையில் இருந்து பெரும் லாபத்தை அறுவடை செய்ய கார்ப்பரேட்டுகளுக்கு அரசாங்கம் கதவைத் திறந்தது.

பாஜகவின் தேர்தல் நிதிக்கு பணத்தை வாரி இறைத்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கைமாறுதான் விவசாயச் சட்டங்கள். இவை அமல்படுத்தப்படும் என்று பிரதமர் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறினார். விவசாயிகள் கேலிக்கும், அவமதிப்புக்கும் உள்ளாக்கப்பட்டதுடன் தாக்குதல்களையும் சந்தித்தனர். பிளவுபடுத்தும் முயற்சிகள் நடந்தன. ஆனால், அவற்றுக்கெல்லாம் சளைக்காமல் போராடிய விவசாயிகள் பாஜக அரசுக்கு பாடம் புகட்டினார்கள்.

அதே நேரத்தில், விவசாயத் துறையில் புதிய தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்துவதிலிருந்து பினவாங்கியிருப்பது மோடி அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் கோபத்தைத் தணிக்கும் அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியே விவசாயக் கடன்களை வழங்குவதற்கான ‘எஸ்பிஐ- அதானி மூலதன’ ஒப்பந்தம். விவசாயிகள் போராட்டம் பாஜகவின் அரசியல் தளத்திலும் பிளவை ஏற்படுத்தியது. வாக்குகளை வகுப்புவாதமயமாக்க மேற்கொண்ட முயற்சிகளும் விவசாயிகளின் ஒற்றுமையால் முறியடிக்கப்படும். முசாபர்நகர் உள்ளிட்ட இடங்களில் தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் ஒன்று திரண்டுள்ளனர். லக்கிம்பூர் கெரி படுகொலையும் பாஜகவை ஆட்டிப் படைக்கும்.

‘சூழ்ச்சிகள்’ தோல்வி

விவசாயிகளின் வீரத்தின் முன்பு ஒன்றிய அரசின் போர் தந்திரங்கள் தோல்வியுற்று துவண்டுபோயின. விவசாயிகளின் எழுச்சிப் பயணத்தை தடுக்க அரியானாவில் இருந்து விவசாயிகளுடன் வரும் வாகனங்களை எல்லையில் பஞ்சர் செய்யும் நடவடிக்கை தோல்வியில் முடிந்தது. தில்லி மற்றும் அரியானா இடையே போலீசார் தடுப்புகள் மற்றும் வேலிகளை அமைத்தனர். சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டன. காசிபூர் எல்லையும் ஒரு முள் கம்பிகளால் தடுக்கப்பட்டன. அதற்காக சாலைகளில் ஆணியடிக்கப்பட்டது. வேறு சில இடங்களில் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

மூத்த காவல்துறையினர்கூட போராட்டக்காரர்களைத் தடுக்க சாலையில் பள்ளம் தோண்டிய முதல் அனுபவத்தைப் பெற்றனர். ஆனால் இதையெல்லாம் அலட்சியப்படுத்தி விவசாயிகளும் அவர்களது டிராக்டர்களும் போராட்ட மையங்களுக்கு விரைந்தன. விவசாயிகளை எதிர்கொள்வதற்கான அரசின் ‘புதிய வழிகள்’ சமூக மற்றும் சர்வதேச ஊடகங்களில் விவாதிக்கப்படுகின்றன. கவால்துறையினர் ஆணி அடித்த சாலையோரம் விவசாயிகள் மரங்களை நட்டனர். விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பாதுகாப்பு வழங்க ரூ.7 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை துணை அமைச்சர் நித்யானந்த ராய் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

715 தியாகிகள்

715க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து விவசாயிகள் போராட்டத்தை வெற்றி பெறச் செய்துள்ளனர். லக்கிம்பூர் கெரியில் மத்திய உள்துறை அமைச்சரின் மகனின் கார் மோதியதில் கொல்லப்பட்ட நான்கு உயிர்கள் மற்றும் இரத்தத்தின் மீது இந்த வெற்றி அமைந்துள்ளது. ஓராண்டுக்கும் மேலாக நடந்த இப்போராட்டத்தின் போது நோய்கள், மாரடைப்பு, கோவிட், வாகன விபத்துகள், தற்கொலைகள், தீ விபத்துகள், கடும் குளிர் போன்ற பல்வேறு காரணங்களால் ஏராளமான விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

சிங்கு எல்லை, திக்ரி எல்லை, தில்லி-கர்னல் நெடுஞ்சாலை, தில்லி-ஹிசார் சாலை, பஞ்சாபின் மொஹாலி மற்றும் பல்வேறு சுங்கச்சாவடிகளில் மரணங்கள் நிகழ்ந்தன. இறந்தவர்களில் பெரும்பாலானோர் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள். சிலருக்கு சொந்த நிலம் கூட இல்லை. பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி, இறந்த விவசாயிகளின் சராசரி வயது 57. வரலாறு காணாத போராட்டத்தின் போது இறந்தவர்களின் ஒளிரும் நினைவுகளைப் புதுப்பித்து விவசாயிகள் ஒவ்வொரு நாளும் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

 

;