states

img

ஹரேன் பாண்டியா போல, கொலை செய்யப்படமாட்டேன் என நம்புகிறேன்!

புதுதில்லி, செப்.16- மோடி அரசை எதிர்த்து வந்தாலும், தனது நிலைமை இன்னும் ஹரேன் பாண்டியா (கொலை செய்யப்படும்) அளவிற்குச் செல்ல வில்லை என்று பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியசாமி கூறியுள்ளார். பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான சுப்பிரமணிய சாமிக்கு, நீண்ட காலமாக ‘இசட்’ பிரிவு பாது காப்பு வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன், 2016-ஆம் ஆண்டு ஜனவரியில் அவருக்கு தில்லியில் அரசு பங்களா ஒன்று 5 ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்டது. அண்மையில் அந்த பங்களாவை காலி செய்யுமாறு ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பி யது. சுப்பிரமணியசாமி அதனை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப் பட்டு வருவதால் பாதுகாப்பு அதிகாரிகளும் தங்கும் வகையில் அரசு பங்களா ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இசட் பிரிவு பாதுகாப்புள்ள நபர்களுக்கு பங்களா ஒதுக்கப்படவேண்டும் என்று கட்டாயம் ‘எதுவும் இல்லை என ஒன்றிய  அரசு கூறிவிட்டது. இதையடுத்து, அரசு பங்களாவை 6 வாரங்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்று சுப்பிரமணியசாமிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சுப்பிரமணியசாமி டுவிட்ட ரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  “பல கட்சிக்காரர்கள் என்னிடம் நீங்கள் மோடிக்கு எதிராக செல்வீர்களா? என்று கேட்டு வருகின்றனர். ஹரேன் பாண்டியாவின் வழக்கை வைத்து பார்க்கும் போது எனக்கு அவர் நிலை வர இன்னும் இரண்டு நிலைகள் உள்ளன. பாண்டியா இருந்த சூழலை பயன் படுத்தி அவரை சிலர் கொலை செய்தனர். ஆகவே இதுபோன்ற நிலைகளுக்கு செல்லா மல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காக என்னுடைய நண்பர்களுடன் பேசி வருகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். ஹரேன் பாண்டியா போல தானும் கொலை செய்யப்படலாம் என்ற அச்சத்தை சுப்பிரமணிய சாமி மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஹரேன் பாண்டியா யார்?

குஜராத் மாநில பாஜக தலைவர்களில் ஒருவ ரான ஹரேன் பாண்டியா, குஜராத் அரசியலில் மிகவும் பலம் வாய்ந்த தலைவராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தவர். இந்நிலையில், 2001-ஆம் ஆண்டு குஜராத் மாநில முதல்வராக மோடி பதவியேற்ற பிறகு  அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு, ஹரேன்  பாண்டியாவின் தொகுதி தேர்வு செய்யப் பட்டது. ஆனால், ஹரேன் பாண்டியா அந்தத் தொகுதியை மோடிக்கு விட்டுக் கொடுக்க மறுத்து விட்டார். அத்துடன் 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பாகவும் ஹரேன் பாண்டியா சில விஷயங்களை விசார ணை ஆணையத்திற்கு தெரிவித்தார். இது பாஜக தலைமைக்கு பிடிக்கவிலலை. அதன்பின்னர் ஹரேன் பாண்டியா 15 ஆண்டுகளாக எம்எல்ஏ-வாக வென்று வந்த அகமதாபாத் எல்லிஸ்பிரிட்ஜ் தொகுதி அவருக்கு மறுக்கப்பட்டது. அத்துடன், குஜராத் மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியாவை, 2003ஆம் ஆண்டு, அடையா ளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொலை செய்த னர். இந்த வழக்கு தொடர்பாக 12 பேரை சிபிஐ காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில்தான், மோடியை எதிர்த்த ஹரேன் பாண்டியாவுக்கு ஏற்பட்ட கதியை சுட்டிக்காட்டி, தானும் ஹரேன் பாண்டியா போல  கொலை செய்யப்படலாம் என்று சுப்பிரமணிய சாமி சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.
 

;