states

ஆணவக் கொலைகளும் ‘அறியாமை’ கேள்விகளும் - க.கனகராஜ்

திருநெல்வேலியில், கடந்த 14.06.2024 அன்று சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட மணமக்களை, எங்களிடம் ஒப்படையுங்கள் என்று  அந்த பெண்ணின் குடும்பத்தினர் கேட்ட போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவர்களிடம் ஒப்படைத்திருக்கலாமே; அல்லது; உடனடி யாக காவல்துறையினரிடம் ஒப்படைத்திருக்க லாமே; ஏன் ஒப்படைக்க வில்லை? என்றும் சில சாதி சங்க தலைவர்கள் கேள்விகளை எழுப்புகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பத்திரிகையாளர் சந்திப்பின் போதும் அதற்கு முன்னர், மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போதும் இதே கேள்விகளை பத்திரிகை யாளர்களும் எழுப்பினார்கள். வேறு சில பொதுவான நபர்களும் கூட இத்தகைய கேள்விகளை எழுப்புகிறார்கள். பெண் வீட்டாரிடம் ஒப்படைப்பது என்பதை பொறுத்தவரை, நடைமுறை அனுபவங்கள் அதற்கு எதிராக இருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.  முதலாவதாக சம்பந்தப்பட்ட குடும்பங்கள் அந்த திரு மணங்களை ஏற்கவில்லை என்பதோடு, அந்த வீட்டிலேயே இருந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று உணர்ந்ததாலேயே அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, இதில் காவல்துறை தலையிட்டோ அல்லது சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் நேரிடையாக சமரசம் பேசியோ  பெண்ணை வீட்டிற்கு அனுப்பிய பல சம்பவ ங்களில் அவர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதே அனுபவம். உதாரணமாக, திருநெல்வேலி மாவட்டத்தில் தாழையூத்து காவல்துறை கடந்த டிசம்பர் மாதம் தங்கத்தாய் என்கிற பெண்ணை தேடி கண்டுபிடித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வீட்டில்  சொந்த சகோதரனால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் அந்தப் பெண். தாழையூத்து சார் ஆய்வாளர் சங்கரும், காவலர் சரவணனும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்கள். ஆனால், போன உயிர் போனதுதான். தற்போது காவல்துறையிடம் ஏன் ஒப்படைக்கவில்லை; பெண் வீட்டாரிடம் ஒப்படைக்கவில்லை என்று கேட்டும் எவரும் அப்போது அந்தப் பிரச்சனை குறித்து பேசவே இல்லை. இரண்டாவது சம்பவம், தஞ்சாவூர் மாவட்டம் வாட்டாத்திக்கோட்டை காவல்நிலை யத்திற்கு உட்பட்ட நெய்வவிடுதி கிராமத்தில் காதல் மறுப்பு திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா என்கிற பெண்ணை தேடிக் கண்டு பிடித்து காவல்துறையினர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த ஆண்டு ஜன வரி 3 அன்று அந்தப் பெண்ணை கொன்று  எரித்துவிட்டதாக வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. மூன்றாவது சம்பவம், கடந்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த சுபாஷ் என்கிற இளை ஞர், அனுசுயா என்கிற பெண்ணை திரு மணம் செய்த பிறகு 15 நாள் கழித்து அவர் களை விருந்துக்கு வரவழைத்து சுபாஷின் தந்தை தன் மகனை வெட்டிக் கொன்றி ருக்கிறார். குறுக்கே வந்த தனது தாயையும் வெட்டிக் கொன்றிருக்கிறார். தடுக்கச் சென்ற அனுசுயா உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் தப்பித்திருக்கிறார். இதுவரை 8 முறை அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 

8வது அறுவை சிகிச்சையின் போது  அந்தப் பெண்ணை சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் க.கனகராஜ், பி.சுகந்தி, க.சுவாமிநாதன், மேவை.சண்முகராஜா உள்ளிட்டோர் சந்தித்தோம். முகத்திலும் கையிலும் ஏராள மான வெட்டுக்கள். கைவிரல்கள் செய லற்றுப் போயிருந்ததை செயல்படுத்து வதற்காக காலிலிருந்து ஒரு நரம்பை எடுத்து  சரி செய்யலாம் என்று சொன்னபோது எந்தப் பாதிப்பும் இல்லாத பகுதியாக கால் மட்டும் தான் இருக்கிறது; கை இயங்கவில்லை என்றாலும் அதை அப்படியே விட்டுவிடலாம் என்று அவர் சொன்னதாக மருத்துவர்களும் தோழர்களும் சொன்னபோது கண்ணில் நீர் முட்டியது. அந்தப் பெண் வேதியியலில் முதுநிலை பட்டம் பெற்றுவிட்டு கல்வியியல் படித்துக் கொண்டிருந்தபோது இது நேர்ந்திருக்கிறது. இத்தனைக்கும் அந்த திருமணத்தை தான் ஏற்றுக் கொண்டதாக கூறி, தமிழ் வருடப் பிறப்பிற்கு தனது வீட்டிற்கு வருமாறு அழைத்து இந்த கொடூர செயலை நிகழ்த்தியிருக்கிறார் சுபாஷின் தந்தை. இத்தகைய கொடூர கொலையை செய்வதற்கு அவர் மனம் இடமளித்திருக்குமா? இப்போது திருநெல்வேலியில் கூக்குரலிடுவது போன்றே சில சாதிவெறி சக்திகள் எழுப்பிய கூச்சலுக்கும் அவதூறுகளுக்கும் பயந்தே அவர் இதைச் செய்திருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நான்காவது சம்பவம், 2017ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம், சூரக்கோட்டையில் நடந்த பயங்கரம். அபிராமி என்கிற பெண் பட்டியல் சமூகத்து இளைஞரை திருமணம் செய்து கொண்டதால் அவர்களை கொலை செய்ய துரத்துகிறார்கள். சென்னைக்கு தப்பி வந்து வாழ்க்கை நடத்தி ஒரு குழந்தை யையும் பெற்றிருக்கிறார்கள். வாய்க்கும், வயிற்றுக்கும் பற்றாத கொடூர வறுமை அவர்களை மீண்டும் கிராமத்திற்கே விரட்டு கிறது. இவர்கள் கிராமத்திற்கு வந்ததை அறிந்த பெண் வீட்டார் நடந்தது நடந்ததாக இருக்கட்டும்; நாம் சேர்ந்திருப்போம்; குழந்தையின் பிறந்த நாளுக்கு புது துணி கள் எடுத்து வருவோம் என்று அழைத்துச் சென்று அந்த இளைஞரை படுகொலை செய்த சம்பவம் யாருக்கும் மறந்து போயிருக்காது.

எனவே, சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள், தங்களது குடும்பத்தில் உள்ள சூழல், அவர்களைத் தூண்டிவிடும் சாதி ஆதிக்க சக்திகள், சமூக விரோதிகள் - இவர்களைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் இருக்க முடியுமா?. கொலை செய்ய  வாய்ப்பிருக்கிறது என்று தெரிந்தும் அவர்களி டமே ஒப்படைக்கச் சொல்வதும், ஒப்படைப்ப தும் நாமே கொலை செய்வதற்கு சமம் அல்லவா? இந்து முன்னணி போன்ற அமைப்புகள் காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டியது தானே என்று கூறுவது முதலைக் கண்ணீரே தவிர வேறல்ல.  இதே திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த  ஆண்டு மே மாதம் 31 அன்று பட்டியல் சமூ கத்து இளைஞர் ஒருவரும் இடைநிலை சாதி யைச் சார்ந்த பெண் ஒருவரும்  காதலித்து வந்திருக்கிறார்கள். அந்த பெண் அச்சுறு த்தல் இருக்கிறது என்று சொல்லி அந்த இளைஞரின் வீட்டிற்கு வந்துவிடுகிறார். இருவரும் பாதுகாப்பு கோரி முன்னீர்பள்ளம் காவல்நிலையத்தில் தஞ்சமடைகிறார்கள். காவல்துறை அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்ப தற்குப் பதிலாக அவர்களை பிரித்துவிட்டது. பெண்ணை காப்பகத்திற்கு அனுப்பி விடு கிறது. ஜூன் 26 வரை தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும் காவல்துறை மாவட்ட உயர் அதிகாரி களையும், வருவாய்த்துறை மாவட்ட உயர் அதிகாரிகளையும் நேரடியாக சந்தித்தும் எழுத்துப்பூர்வமாகவும் தொடர்ச்சியாக முறையிட்ட பிறகும் யாரும் தலையிட வில்லை. இந்த நிலையில்தான் 26.6.2023 அன்று கட்சியின் மாநில செயற்குழு உறுப் பினர் க. கனகராஜ் அப்போதைய தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் ஐ.பி.எஸ்.,  அவர்களிடம் முறையிட்டதைத் தொடர்ந்து, அவர் தலையிட்ட பிறகுதான் பெண்ணை ஒப்படைத்தார்கள். 18 வயதைக் கடந்த ஒரு பெண்ணை இப்படி பிரித்து காப்பகத்திற்கு அனுப்புவது சட்டவிரோதம் என்று தெரிந்த பிறகும் காவல்துறையினர் அதை செய்தார்கள். மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் தலையிட முதலில் மறுத்தனர்.  இப்படி சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போக முடியும். எனவே, பெண் வீட்டாரிடம் ஏன் ஒப்படைக்கவில்லை; காவல்துறையினரிடம் உடனே ஏன் ஒப்படைக்கவில்லை; என்கிற கேள்விகள் அறியாமையிலிருந்து வெளிப்படுபவை; உள்நோக்கத்துடன் கூடியவை; அல்லது சாதி ஆதிக்க மனநிலையிலிருந்து முன்வைக்கப்படுபவையே!

;