states

img

‘தியாகிகளுக்கு நீதி வேண்டும்’

கொல்கத்தா, செப்.21- பல்வேறு சம்பவங்களில் கொலை செய்யப்பட்ட தியாகிகளுக்கு நீதி கேட்டு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் நடத்திய பேரணியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். ஹவுரா, சியால்டா மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் இருந்து பேரணியாகத் துவங்கி, கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா இல்லம் முன்பாகக் குழுமுவது என்று திட்டமிட்டிருந்தார்கள். அண்மைக்காலத்தில் இடதுசாரிகளின் செல்வாக்கு மீண்டு வருவதைக் கண்ட திரிணாமுல் அரசாங்கம் முட்டுக்கட்டைகளைப் போட முயன்றது. பல வாரங்களுக்கு முன்பே திட்டமிட்ட பேரணி நிறைவு பெறும் இடத்தில் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டிருந்தார்கள். கடைசி நாள் வரையில் அனுமதி தராமல் இழுத்தடித்தார்கள். 

தாமதப்படுத்தும் தங்கள் உத்தியால் பேரணியில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை பெரும் அளவில் குறைந்துவிடும் என்ற அவர்களின் எண்ணத்தில் மண் விழுந்தது. கொல்கத்தா நகரமே ஸ்தம்பிக்கும் வகையில் பேரணி அமைந்திருந்தது. லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு நீதி வேண்டும் என்ற முழக்கத்துடன் பேரணியில் பங்கேற்றார்கள். பொதுக்கூட்டத்தைக் கடைசி நேரத்தில் மாற்ற வேண்டியது வந்ததால், மேடை கூட சரியாக அமைக்க முடியவில்லை. 

மாணவர்களின் பிரச்சனைகளை முன்னிறுத்தி வந்த மாணவர் தலைவர் அனீஸ் கான் கொலை வழக்கு முதல் பல்வேறு அநீதிகளுக்கு நீதி கோரி நடத்தப்பட்ட இந்தப் பேரணியில், அனீஸ்கானின் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநிலக் குழு செயலாளர் முகமது சலீம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மேற்கு வங்க மாநிலக்குழு செயலாளர் மீனாட்சி முகர்ஜி உள்ளிட்டோர் இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினர்.  இவ்வளவு பேர் திரளுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என சப்பைக்கட்டு கட்டும் வேலையில் கொல்கத்தா நகரக் காவல்துறையினர் இறங்கியிருக்கிறார்கள். மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு எதிராகப் போராடும் சரியான சக்தியாக இடதுசாரிகள்தான் இருக்கிறார்கள் என்பதை இந்தப் பேரணிக்குத் திரண்டவர்களின் எண்ணிக்கை காட்டுவதாக சில அரசியல் நோக்கர்கள்  கருத்து தெரிவித்துள்ளனர்.

;