புதுதில்லி, மே 26 - புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடிக்கு பதில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் ஜெய் சுகேன் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு அவசர வழக்காக பட்டியலிடப்பட்டு நீதிபதிகள் ஜெ.கே. மகேஸ்வரி, நரசிம்மா அமர்வில் வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை பரிசீத்த நீதிபதிகள், நாடாளுமன்ற நிகழ்வை தொடங்கி வைப்பதையும், கட்டடம் திறப்பையும் எப்படி தொடர்புபடுத்த முடியும்? என கேள்வி எழுப்பி, புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று கூறிவிட்டனர். மேலும் இதுபோன்ற பொதுநல மனுக்களை விசாரிப்பது உச்சநீதிமன்றத்தின் வேலை இல்லை என்றும் இத்தகைய மனுக்களை தாக்கல் செய்தால் எதிர்காலத்தில் அபராதம் விதிக்க நேரிடும் என்றும் எச்சரித்து, மனுவைத் திரும்பப் பெற உத்தரவிட்டனர்.