states

நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

சென்னை, ஜூலை 4 - சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி  சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு உள்ள தாக கூறி, அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை, ஜூன் 15, 22, 27 ஆகிய தேதிகளில் மூன்று நாட்களாக விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.  இந்நிலையில், செவ்வாயன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, “செந்தில் பாலாஜியின் கைது சட்ட விரோதம்” என்று நீதிபதி நிஷா பானுவும், “செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது கைதை சட்டவிரோதம் எனக் கூற முடியாது” என்று நீதிபதி பரத சக்கரவர்த்தியும், இருவேறு மாறுபட்ட தீர்ப்புக்களை வழங்கினர். இதையடுத்து, இந்த வழக்கு இறுதி முடிவை எட்டுவதற்காக, மூன்றாவது நீதிபதி யின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. 

தமிழ்நாடு மாநில அமைச்சர் வி. செந்தில் பாலாஜியை, ஒன்றிய பாஜக அரசின் அமலாக்கத்துறையினர், சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், ஜூன் 13 அன்று நள்ளிரவு 1.30 மணிக்கு கைது செய்தனர். பின்னர் அவரை, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ். அல்லியை மருத்துவமனைக்கே நேரில் அழைத்து வந்து, செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தி னர். அவர் செந்தில் பாலாஜியை, ஜூன் 28  வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தர விட்டார். இதனிடையே, தனது கணவரை அம லாக்கப் பிரிவினர் சட்டவிரோத காவலில் வைத்துள்ளதாக கூறி, செந்தில் பாலாஜி யின் மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார். அத்துடன் தனது கணவரை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதியளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்த வழக்கில், இருதரப்பு வழக்கறி ஞர்களின் வாதங்களையும் கேட்ட நீதிபதி கள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, “அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பு கோரிக்கையை ஏற்று  செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவ மனைக்கு மாற்ற அனுமதி அளித்து உத்தர விட்டனர். மேலும் மருத்துவர்களின் பரிந்துரையை சந்தேகிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், சிகிச்சையை அம லாக்கத்துறை நியமிக்கும் மருத்துவர்கள் குழுவும் ஆராயலாம் என்று தெரிவித்து, ஆட்கொணர்வு மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

அதைத் தொடர்ந்து, ஜூன் 22, ஜூன் 27 ஆகிய தேதிகளில் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. செந்தில் பாலாஜி தரப்பில், முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆகியோரும், அமலாக்கத்துறை தரப்பில், ஒன்றிய அரசின் தற்போதைய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் ஆஜராகி வாதங்களை வைத்தனர்.  இந்த இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, தீர்ப்பை தேதி  குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.  இந்நிலையில், செவ்வாயன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி நிஷா பானு சென்னையில் இருந்தபடியும், நீதிபதி பரத சக்கரவர்த்தி மதுரையில் இருந்தபடியும் காணொலி முறையில் தீர்ப்பை வழங்கினர். முதலில் நீதிபதி நிஷா பானு, தனது தீர்ப்பை வாசித்தார். அதில், “செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதமாக நடந்துள்ளது. அமலாக்கத்துறை சட்ட விதிகளின் படி கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. எனவே, ஆட் கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான். இதனால் செந்தில் பாலாஜியை உட னடியாக விடுதலை செய்ய வேண்டும். நீதி மன்றக் காவலில் வைத்தது சட்டவிரோதம் என்பதால் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க முடியாது” என்று உத்தரவிட்டார்.

அதேநேரம், “நீதிபதி நிஷா பானு தீர்ப்பை தாம் ஏற்கவில்லை. அவரது தீர்ப்பில் மாறுபடுகிறேன்” என்று கூறிய மற்றொரு நீதி பதியான டி. பரத சக்கரவர்த்தி, “மனுதாரரின் (மேகலா) கணவர் (செந்தில் பாலாஜி) நீதி மன்றக் காவலில் அடைக்கப்பட்ட பிறகு இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல. செந்தில் பாலாஜியை சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதம் என கூறமுடியாது. கைது நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற காவலில் அடைத்து பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் சட்ட விதிகளைப் பின்பற்றி நடைபெற்றுள்ளது” என்று தீர்ப்பளித்தார்.  அத்துடன், “மேகலாவின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று அறிவித்த நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி, “செந்தில் பாலாஜி, நீதிமன்ற காவலிலேயே காவேரி மருத்துவமனையில் சிகிச்சையை தொடரலாம். உடல்நிலை சரியாகும் வரை யிலோ அல்லது இன்றிலிருந்து 10 நாட் களுக்கோ காவேரி மருத்துவமனை மருத்து வர்கள் பரிந்துரைக்கும் வரை சிகிச்சை யைத் தொடரலாம். அதன் பின்னர் சிகிச்சை தேவைப்பட்டால் சிறையில் உள்ள மருத்துவ மனை அல்லது அரசு மருத்துவமனையில் சிகிச்சையை தொடரலாம். சிகிச்சையில் இருக்கும் நாட்களை நீதிமன்ற காவலில் இருக்கும் நாட்களாக எடுத்துக் கொள்ள முடியாது” எனவும் உத்தரவிட்டார்.

இவ்வாறு செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், இவ்வழக்கில் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து இந்த வழக்கு, இறுதித் தீர்ப்புக்காக, மூன்றாவது நீதிபதியின் விசார ணைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் வி.கங்கா பூர்வாலா வுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

மீண்டும் மனு; உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய பின்னணியில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றமே தலை யிட்டு தீர்ப்பு வழங்க வேண்டும் என்று  அமலாக்கத்துறை, உடனடியாக உச்சநீதி மன்றத்திற்கு சென்றது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான, சிறிது நேரத்திலேயே மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மனு, உச்சநீதி மன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சூர்ய காந்த், தீபங்கர் தத்தா  அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, “உயர்நீதி மன்றத்தை தாண்டி அமலாக்கத்துறை இவ்வ ளவு விரைவாக இங்கு வரவேண்டியது இல்லை; சென்னை உயர்நீதிமன்றம் இறுதித்  தீர்ப்பு வழங்கிய பின்னரே அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனுவை நாங்கள் விசாரிக்க முடியும்” எனக் கூறி, வழக்கின் விசாரணையை ஜூலை 24-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.  முன்னதாக, ஆட்கொணர்வு வழக்கை, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒரு வாரத்துக்குள் 3-வது நீதிபதி அமர்வுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.