states

மழையால் செங்கல், ரப்பர் பால் வெட்டும் தொழில் முடக்கம்

நாகர்கோவில், ஜூலை 7 குமரி மாவட்டத்தில் ஒரு வாரமாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குலசேகரம் தடிக்காரன்கோணம், கீரிப்பாறை பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் ரப்பர் பால் வெட்டும் தொழில்,  முடங்கியுள்ளது. திருவட்டார், கல்குளம், விளவங்கோடு, தோவாளை ஆகிய  தாலுகாவை உள்ளடக்கி மேற்கு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அரசு மற்றும் தனியார் ரப்பர் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இலையுதிர் காலத்தையொட்டி ரப்பர் பால் வெட்டும் தொழில் நடைபெறுவது வழக்கம். பொதுவாக மழை பெய்தால் தான் ரப்பர் பால் உற்பத்தி அதிகரிக்கும். எனவே கோடை மழை, பருவமழையை பொருத்து ரப்பர் பால் வெட்டும் தொழில் அமையும். இந்த ஆண்டில் போதிய அளவு கோடை மழை பெய்யவில்லை. இதனால் மே மாத இறுதியில் பெரும்பாலான பகுதிகளில் ரப்பர் பால் வெட்டும் தொழில் முடங்கியது. இந்தநிலையில் கடந்த சில நாட்காளாக குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் ரப்பர் பால்வெட்டும் தொழில் மீண்டும் தொடங்கியது. ஆனால் சாரல் மழை இடைவிடாது பெய்து கொண்டு இருக்கிறது. இடையிடையே சூறைக்காற்றும் சுழன்று அடிக்கிறது. இதனால் மீண்டும் ரப்பர் பால்வெட்டும் தொழிலில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளது. குலசேகரம் ,தடிக்காரன்கோணம், கீரிப்பாறை பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மழை சற்று ஓய்ந்த பின்னர் ரப்பர் பால்வெட்டும் தொழில் சகஜ நிலைக்கு திரும்பும் என்று தொழிலாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தோவாளை, செண்பகராமன்புதூர் பகுதிகளில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.