சென்னை, செப். 11- சென்னை, திருச்சி, மதுரை மற்றும் உதகை, தமிழ்நாட்டில் இந்த 4 இடங்களில் ஒலிம்பிக் அகாடமி தொடங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது என்று தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்ய நாதன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசும், தமிழக டென்னிஸ் சங்கமும் இணைந்து, “சென்னை ஓப்பன் 250” போட்டிகள் திங்களன்று (செப். 12) தொடங்குகிறது. இதில் உலகின் 25 நாடுகளைச் சேர்ந்த 75க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்கும் உலக மகளிர் டென்னிஸ் போட்டி திங்களன்று தொடங்கவுள்ளது. செப்டம்பர் 12 முதல் 18ஆம் தேதி வரை நடை பெறவுள்ள அனைத்துப் போட்டிகளையும் உலகில் உள்ள பல நாடுகள் நேரடியாக பார்க்கும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழக அரசும், தமிழ்நாடு டென்னிஸ் சங்கமும் ஏற்பாடு செய்துள்ளது. இந்த போட்டிகளை அரசு பள்ளி மாணவர்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அரசுப் பள்ளி மாணவிகள் போட்டிகளை கட்டணமின்றி பார்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, மதுரை மற்றும் உதகை, தமிழ்நாட்டில் இந்த 4 இடங்களில் ஒலிம்பிக் அகாடமி தொடங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. ஒவ்வொரு அகாடமிக்கும் என்னென்ன தேவை என்பது குறித்தும், அகாடமி அமையவுள்ள அந்த பகுதி சார்ந்த விளையாட்டுகளை மட்டும் தேர்வு செய்து அங்கு விளையாட்டு அரங்கத்தை உருவாக்குவதுதான் நோக்கம். அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.