states

img

இந்திய மக்கள் மிகுந்த வலியில் உள்ளனர்- நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி கருத்து

இந்தியாவில் மக்கள் மிகுந்த வலியுடன் இருப்பதாகவும், அவர்களுடைய சிறிய ஆசைகள் மேலும் சிறியதாக மாறிவருவதாகவும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் பல்கலைக்கழகத்தின் 11வது பட்டமளிப்பு விழாவில், அமெரிக்காவிலிருந்து காணொளி வாயிலாக கலந்து கொண்ட அபிஜித் பானர்ஜி, சமீபத்தில் மேற்குவங்க மாநிலத்தின் கிராமப்புறங்களுக்கு மேற்கொண்ட பயண அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்ட அவர் கூறியிருப்பதாவது,

 நாம் மிகுந்த வலியானதொரு தருணத்தில் இருப்பதாக உணர்கிறேன்.இந்திய பொருளாதாரம் 2019 ஆம் ஆண்டில் இருந்த நிலையிலும் கீழாக உள்ளது. அது எந்த அளவிற்கு கீழ் உள்ளது என்பது தெரியவில்லை ஆனால் குறிப்பிட்ட அளவு கீழ்நிலையில் உள்ளது.இதைச்சொல்வதன் மூலம் நான் யாரையும் குற்றம் சுமத்தவில்லை என்று அபிஜித் பானர்ஜி கூறியுள்ளார்.

மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான எதிர்காலத்தை தேர்ந்தெடுக்கும்போது, பெற்றோர் மற்றும் சமூகத்தின் அழுத்தத்தை பொருட்படுத்தகூடாது என்று கூறிய அபிஜித் பானர்ஜி, மாணவர்கள் அந்த சமயத்தில் தீரத்துடன் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

நான் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திலிருந்து, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு போக இருந்த சமயத்தில், மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக திகார் சிறையில் அடைக்கப்பட்டேன்.சிறையில் 10 நாட்கள் இருந்தேன். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு மூத்தவர்கள் பலர் நான் என்னுடைய எதிர்காலத்தை வீணடித்துவிட்டதாக கூறினார்கள்.ஹார்வர்ட் பல்கலைக்கழகமோ, அமெரிக்காவோ உன்னை ஏற்றுகொள்ளாது என்று கூறினார்கள். என்னுடைய செயலுக்கு நான் வருத்தப்பட வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள் என்று தனது மாணவப் பருவ அனுபவத்தை அபிஜித் பானர்ஜி மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார்.