குஜராத்தின் மோர்பி மச்சு ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட தொங்கு பாலத்தை பராமரிக்கும் பணியை அஜண்டா கடிகார நிறுவனத்தின் மற்றொரு நிறுவனமாக ஒரேவா குழுமத்திற்கு பாஜக அரசு வழங்கியது. குஜராத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் புனரமைப்பு பணிகள் முடிந்ததாக கூறி கடந்த அக்டோபர் 26 ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்காக அவசர அவசரமாக பாலம் திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் பேசிய ஒரேவா குழும உரிமையாளர் இந்த பாலத்தை புனரமைக்க இரண்டு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அடுத்த 15 ஆண்டுகள் பாலம் பாதுகாப்பாக இருக்கும் என்றார். ஆனால் கடந்த ஞாயிறன்று தொங்கு பாலம் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 141 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விபத்தில் தொடர்புடைய ஒரேவா நிறுவனத்தின் 9 பேரை காவல்துறையினர் கைது செய்து மோர்பி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். அப்போது புனரமைப்பு பணிக்கு டிசம்பர் மாதம் வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே பாதுகாப்பு சான்றிதழ்களை முறையாக பெறாமல் இந்த பாலம் திறக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரேவா நிறுவனத்தால் புனரமைப்பு பணிக்காக நிறுவப்பட்ட 2 நிறுவனங்களும் தகுதியானவை இல்லை. புனரமைப்பு பணியின் போது பாலத்தின் கேபிள்கள் முற்றிலுமாக மாற்றப்பட வேண்டும் ஆனால் எண்ணெய் கிரீஸ் கூட போடாமல் பெயிண்ட் மட்டும் அடித்து பாலீஷ் செய்யப்பட்டு பாலத்தை திறந்துள்ளதாக திடுக்கிடும் தகவலை காவல்துறையினரும், அரசு வழக்கறிஞரும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி செவ்வாயன்று மாலை சம்பவ இடத்திற்கும், மருத்துவமனைக்கும் நேரில் செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிப்பதை விடுத்து குஜராத் அரசின் முழு கவனமும் மோடியை வரவேற்பதில் இருந்தது. சாலைகள் புதுப்பிக்கப்பட்டன. மருத்துவமனை கழிவறைகள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்புகளையும் மாற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. ஏற்கனவே அந்த மருத்துவமனையில் எந்த வசதியும் இல்லாமல் நோயாளிகள் அவதியடைந்த நிலையில் மோடியின் வருகையையொட்டி மருத்துவமனையின் அடிப்படை வசதிகளில் ஒன்றான பெட்ஷீட்டுகள் கூட 105 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஜாம்நகர் அரசு மருத்துமனையில் இருந்து கொண்டு வரப்பட்டு வசூல் ராஜா எம்பிபிஎஸ் திரைப்பட பாணியில் மருத்துவமனை செட்டப் செய்யப்பட்டது. இதுகுறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்தே குஜராத்தில் 3 முறை முதல்வராகவும், இரண்டாவது முறை பிரதமராகவும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முதல் முறையாக கோ பேக் மோடி என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டானது.