சூரியன் தலைக்கு மேல் வரும்போது, ஓரிடத்தில் இருக்கும் பொருளுடைய நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிறது. அந்த நாளையே நிழல் இல்லாத நாள் என்று வானியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
சூரியன் தலைக்கு மேல் நேராக இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாக இருக்கும். அப்போது, நிழல் சரியாக காலுக்குக் கீழே இருக்கும். இதேபோல், சூரியன் சரியாக தலைக்கு மேல் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே வரும். இந்த நிகழ்வானது அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் நிகழ்வதில்லை.
இந்நிலையில், புதுச்சேரியில் நிழல் இல்லா நாள் என்ற அபூர்வ நிகழ்வு கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதியும், ஆகஸ்டு 21-ஆம் தேதியும் நிகழும் என அறிவியல் இயக்கம் தெரிவித்து இருந்தது.
இதே போல் தற்போது, தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், ஸ்ரீ பெரும்புதூர், அரக்கோணம், ஆற்காடு, வேலூர், ஆகிய பகுதிகளில் இன்று பகல் 12:07 மணிக்கும், பெங்களூரில் 12:17 மணிக்கும், மங்களூரில் 12:27 மணிக்கும் இன்று நிழல் தெரியாது. மேலும் வருடத்திற்கு இருமுறை நிகழும் இந்த நிழல் இல்லா நாள், வரும் ஆகஸ்ட் 18 அன்றும் மீண்டும் நடைபெறும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.