politics

img

சவப்பெட்டியில் 540 ஆணிகளை அடியுங்கள்!

இனிமேல் தொழிலாளர்களுக்கு வேலை நிரந்தரம், பணி நிரந்தரம் என்பதுஇருக்கக்கூடாது என ஆளும் அரசுகள் நினைக்கிறது. குறிப்பாக, தொழிலாளர்களுக்கு நம்மை வேலை நீக்கம் செய்ய முடியாது. அப்படி செய்தால் வழக்கு போடலாம், பாதுகாப்பு இருக்கிறது என்கிற நம்பிக்கை வந்து விட்டால் தொழிலாளர்கள் உரிமையை கேட்பார்கள். ஆகவே, அந்த நம்பிக்கையை தகர்க்க வேண்டும். அப்படியானால் பணி நிரந்தரம் இல்லாமல் செய்ய வேண்டும்.அதுதான் ஒப்பந்த முறை, பயிற்சியாளர் முறை, சுமங்கலித் திட்டம், அதுதான்மோடி கொண்டு வந்திருக்கிற குறிப்பிட்ட கால வேலை (பிக்சட் டெர்ம் எம்ப்ளாய்மெண்ட்) என்பது. இது பிறக்கும் போதே சாகும் தேதியை சொல்லி விடுவது போலாகும். அதற்கு மேல் எதையும் எதிர்பார்க்கக் கூடாது. பணி நிரந்தரம், பணிபாதுகாப்பு, போனஸ் என எதையும் எதிர்பார்க்கக் கூடாது. அடங்கி, ஒடுங்கி, ஆமையாய், ஊமையாய் இருந்தால் கிடைக்கிற சம்பளமாவது கிடைக்கும். இல்லாவிட்டால் அதுவும் கிடைக்காது என்கிற ஒரு எண்ணத்தை தொழிலாளி வர்க்கத்திற்கே ஊட்ட வேண்டும் என்ற முதலாளிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மோடி, அதை அமல்படுத்துவதற்கு வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.


விசைத்தறி, கைத்தறி, ஜவுளி, சாயப்பட்டறை திருப்பூர், கோயம்புத்தூர், தமிழ்நாட்டில் சொந்த தொழில் நடத்துவோர் கொஞ்சம் கொஞ்சமாக தொழிலை இழந்து கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக, தொழிலாளியாகப் போய் விட வேண்டும். இந்த அவலம் மோடியின் ஆட்சியில் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி நடவடிக்கைக்குப் பிறகுஆட்டு வியாபாரியும், மாட்டு வியாபாரியும் தப்பவில்லை. இந்த இரண்டு நடவடிக்கையால் நேற்று பிறந்த குழந்தை உட்பட அனைவரும் பாதிக்கப்பட்டுள் ளனர். வாங்கிய கடனை கட்டமாட்டேன் என்று சொன்னால், அது மிக மோசமான கெட்ட பழக்கமாகிவிடும் என விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யமாட்டேன் என்ற மோடி, இப்போது 6000 ரூபாய் தருவேன் என்கிறார். தோற்கப் போகிறோம் என்று தெரிந்தவுடன் இதை அறிவிக்கிறார்கள். பழனிசாமியும் 2000 ரூபாய் அறிவித்துள்ளார். இது அரசுப் பணத்தில் செய்கிற ஊழல், லஞ்சம். இது மிட்டாய் கொடுத்து குழந்தையைக் கடத்துவதைப் போலாகும். இப்படிப்பட்ட மோடியின் சர்வாதிகார ஆட்சியை சவப்பெட்டியில் போட்டு நிரந்தரமாகப் புதைக்க, 540 ஆணிகளை அடிக்க வேண்டும்.


- கோவையில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் 

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசியதில் இருந்து... 



;