politics

இல்லாத வரி 3400 கோடி

ஊழல் என்பதற்கு இதுவரை நாம் அறிந்துள்ள இலக்கணங்களையெல்லாம் காலாவதியானவையாக ஆக்கிக்கொண்டிருக்கிறது மோடி அரசு. பணமதிப்பு நீக்கம் தொடங்கி, வராக்கடன்களைத் தள்ளுபடி செய்வது, மோடிகள் (நீரவ், லலித்...!) பத்திரமாக வெளிநாடுசெல்ல உதவுவது என்று நமக்குப் புரியாத வடிவங்களிலெல்லாம் ஊழல் செய்கிறது மோடி அரசு. ‘அட, இது தெரியாம ஏழெட்டுத்தடவ பிளைட்ல டிக்கெட் எடுத்துட்டனேப்பா...’ என்று புலம்பியதுபோல, மிகப்பெரிய ஊழல் வாதிகள் என்று கடந்த காலத்தில் புகழப்பட்டவர்களெல்லாம்(!), ‘இந்த வித்தையெல்லாம் நமக்குத் தெரியாமல் போச்சே...’ என்று ஏங்கும் வண்ணம், :இந்திய அரசியலில் முதன்முறையாக...’ என்று டைட்டில் கார்டு போடுமளவுக்குப் புதிய புதிய ஊழல்கள் வெளிவந்துகொண்டேயிருக்கின்றன.அவற்றில் லேட்டஸ்ட், இல்லாத வரியை வசூலித்து, அதற்கு கணக்கே இல்லையென்று சொல்வது. ஆம்! ஏகப்பட்ட தடவை பிறந்த புதிய இந்தியாக்களில் ஒன்று ஜிஎஸ்டியால் பிறந்தது. அதை அறிவித்துவிட்டு, ஒரே தேசம், ஒரே வரி என்று தனக்குத்தானே புகழ்ந்துகொண்ட மோடி, இனி இந்தியா வல்லரசுதான் என்று புளகாங்கிதம் அடைந்தார். உலகத்திலேயே மிக அதிக ஜிஎஸ்டி என்பது மட்டுமின்றி, வேறுபல வரிகளும் தொடர்வது, பெட்ரோலியப் பொருட்கள் உள்ளிட்டவற்றை ஜிஎஸ்டிக்கு மாற்றாதது என்ற குளறுபடிகளுடன், ஜிஎஸ்டி செலுத்தியவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளும் ஏராளம். ஆனால், ஸ்வச் பாரத் செஸ், கிரிஷி கல்யாண் செஸ், அந்த செஸ், இந்த செஸ் என்று வசூலிக்கப்பட்டுக்கொண்டிருந்த செஸ் வரிகளெல்லாம், ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட 2017 ஜூலை 1இலிருந்து ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துவிட்டது.அந்த இல்லாத வரிகளுக்காக கோடிக்கணக்கான ரூபாய் வசூலிக்கப்பட்டிருப்பதை ஒயர் இணையதளம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்மூலம் வெளிக்கொண்டுவந்திருக்கிறது.நிதியமைச்சகத்தின் தகவல் மேம்பாட்டுத்துறை தலைமை இயக்குனர் அளித்துள்ள பதிலில், 2017 ஜூலையிலிருந்து 2019 ஜனவரி வரை, ரூ.1340.55 கோடி கிரிஷி கல்யாண் செஸ் வரி வசூலிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இதே காலகட்டத்தில், அதாவது, ரத்து செய்யப்பட்டபின், வசூலிக்கப்பட்ட ஸ்வச் பாரச் செஸ் வரி சுமார் ரூ.2100 கோடி. கிரிஷி கல்யாண் செஸ் என்பது, விவசாயிகளுக்கான நலத்திட்டங்களுக்காக விதிக்கப்பட்ட வரியாகும். இந்த வரி நடப்பிலிருந்த காலம்வரை வசூலான தொகை, பிரதம மந்திரி ஃபசல் பீம யோஜனா என்னும் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்திற்கான பிரிமியம் செலுத்தப் பயன்படுத்தப்பட்டதாகக் கணக்கு வைத்திருக்கும் நிதியமைச்சகத்தால், வரி ரத்து செய்யப்பட்டபின் வசூலிக்கப்பட்ட ரூ.1340 கோடி எங்கே போனது என்பதற்குக் கணக்குச் சொல்ல முடியவில்லை. இதே நிலைதான் ரூ.2100 கோடி ஸ்வச் பாரத் செஸ்-சுக்கும்.இல்லாத வரியாக ரூ.3400 கோடி வசூலித்து, அது எங்கே போனது என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை என்பதால் இவையெல்லாம் ஊழலாகிவிடுமா என்று, ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகள் உதவிக்கு வரலாம். அவர்களுக்குச் சொல்லுங்கள், தேர்தல் முடிவுகள் வெளிவந்தபின், இப்படி இன்னும் ஏராளமாக வெளிவர இருக்கின்றன என்று!

அறிவுக்கடல்

;