politics

img

இந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 18

1925 - பன்னாட்டு அமெச்சூர் வானொலி சங்கம் தொடங்கப்பட்டது. அமெச்சூர் வானொலி பயன்படுத்துபவர்களின் தேவைகள், பிரச்சனைகள் ஆகியவற்றுக்காகப் பன்னாட்டு தொலைத்தொடர்பு சங்கத்திடம் முறையிடும் அமைப்பாக இது செயல்படுகிறது. ஹாம் ரேடியோ என்று பொதுவாக அழைக்கப்படும் அமெச்சூர் ரேடியோ என்பது, வணிக அடிப்படையில் அல்லாமல், ரேடியோ அலைகளைப் பயன்படுத்திச் செய்யப்படும் ஒலிபரப்பு, தகவல் பரிமாற்றம் ஆகியவற்றைக் குறிக்கிறது. முறையான பயிற்சிகள் இன்றி, தொழில்முறையில் அல்லாமல், தனிப்பட்ட நோக்கங்களுக்காக இயக்கப்படுவது என்பதைக் குறிக்க அமெச்சூர் ரேடியோ என்ற பெயர் ஏற்பட்டது. வணிக அடிப்படையிலான ஒலிபரப்புகள், பொதுப் பாதுகாப்புக்கான காவல்துறை முதலானவற்றின் ஒயர்லெஸ் தொடர்புகள், கப்பல், விமானம் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் இருவழி ரேடியோ ஆகியவற்றிலிருந்து வேறுபடுத்திக்காட்டவும் அமெச்சூர் என்ற சொல் சேர்க்கப்பட்டது. கம்பித் தந்தி காலத்தில், மோர்ஸ் குறியீடுகளை அனுப்புவதில் போதுமான திறமை இல்லாதவர்கள் (ஹாம்-ஃபிஸ்டட் என்ற சொல்லிலிருந்து) ஹாம் என்று அழைக்கப்படுவார்கள். வானொலி உருவான காலத்தில் கம்பியில்லாத் தந்தி என்றழைக்கப்பட்டதுடன், ஏற்கெனவே தந்திச் சேவையிலிருந்த பலரும் இதில் பயன்படுத்தப்பட்டனர். அவர்கள், இவ்வாறு தனிப்பட்ட முறையில் வானொலி நடத்தியவர்களை முறைப்படியான பயிற்சியற்றவர்கள் என்ற பொருளில் ஹாம் என்று அழைத்ததால் ஹாம் ரேடியோ என்ற பெயர் ஏற்பட்டது. பொழுதுபோக்காக மட்டுமின்றி, ஆய்வுகள், போட்டிகள், கல்வியளித்தல் உள்ளிட்ட பலவற்றுக்காகவும் அமெச்சூர் வானொலிகள் நடத்தப்படுகின்றன. தொலைபேசிகள், இணையம் உள்ளிட்ட அனைத்து தொலைத் தொடர்பு வசதிகளும்செயலிழக்கும் நிலநடுக்கம், வெள்ளம் முதலான இயற்கைப் பேரழிவுகளின்போதுகூட இயங்கும் இந்த அமெச்சூர் வானொலிகள், ஏராளமானோரைக் காக்க உதவியுள்ளன. இவை ஒரு நகரத்திற்குள் மட்டுமின்றி, நாடு, கண்டம் தாண்டி உலகம் முழுவதும், அதையும் தாண்டி, விண்ணிற்கும் தொடர்புகொள்ளும் திறன் பெற்றுள்ளன. உலகம் முழுவதும் சுமார் 20 லட்சம் அமெச்சூர் வானொலி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கம் தொடங்கப்பட்ட ஏப்ரல் 18, அமெச்சூர் வானொலி நாளாக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.


அறிவுக்கடல்

;