politics

img

வாக்கு கேட்க அதிமுகவுக்கு உரிமை இல்லை

தூத்துக்குடி மே 10:-இடைத்தேர்தலே வேண்டாம் என்ற அதிமுக ஒட்டப்பிடாரம் தொகுதியில் வாக்கு கேட்பதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம்.சி.சண்முகை யாவை ஆதரித்து வியாழனன்று புதியம்புத்தூர், தாளமுத்துநகர், ஸ்பிக் நகர் பகுதிகளில் கே.பால கிருஷ்ணன் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-ஒட்டப்பிடாரம், திருப்பரங் குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தினால் ஆட்சி பறிபோய் விடும் என்ற அச்சத்தின் காரணமாக இந்த தொகுதிகளின் தேர்தல் மட்டும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உச்சநீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்ததை அடுத்து நீதி மன்றம் நான்கு தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த உத்தர விட்டுள்ளது. 

இடைத்தேர்தலே வேண்டாம் என்று ஓடிய அதிமுக, ஒட்டப்பிடாரத்தில் ஆறு அமைச்சர்களை முகாமிடச் செய்து வாக்கு கேட்டு வருவது எதற்காக? கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் இல்லாததால் சாதாரணமாக கையெழுத்து கூட பெற முடியா மல் சிரமப்பட்டு வந்துள்ளீர்கள்.சட்டமன்ற இடைத்தேர்தல் மட்டுமல்ல; இரண்டு ஆண்டு களாக உள்ளாட்சித் தேர்தலும் நடத்தப்படவில்லை. இடைத் தேர்தல் முடிவுகள் மூலம் ஆட்சி யை இழக்கப் போகிறவர்கள் எப்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்துவார்கள்? ஏதோ தாங்கள் தான் மீண்டும் மே 23 ஆம் தேதிக்கு பிறகும் ஆட்சியில் தொடர போகிறோம் என்ற நப்பாசையில் நீதிமன்றத்தில் மூன்று மாத காலம் அவகாசம் கேட்டுள்ளார்கள்.மே 23 ஆம் தேதிக்கு பிறகு மத்தியில் மோடி ஆட்சி இருக்கப் போவதில்லை. அதே நாளில் தமிழ கத்தில் எடப்பாடி அரசும் வீட்டிற்கு அனுப்பப்படும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள அரசுதான் தமிழ கத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும். அதிலும் இந்த அணி மாபெரும் வெற்றி பெறும்.இந்த சூழ்நிலையில் எப்படி யாவது தமிழகத்தில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள அதிமுக உறுப்பினர்கள் மூன்று பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப பட்டது. இதை எதிர்த்தும் மு.க.ஸ்டாலின் வழக்கு மன்றம் சென்றதால் அவர்களது சட்டமன்ற உறுப்பினர் பதவி தப்பியுள்ளது.

அதிமுக உறுப்பினர்களின் பதவியையே திமுக தான் இப் போது காப்பாற்றி இருக்கிறது.ஓர் அமைச்சர் கூறுகிறார், அடுத்ததாக 31 சட்டமன்ற உறுப் பினர்களை பதவி நீக்கம் செய்யப் போகின்றோம் என்று. இப்படி பதவி நீக்கம் செய்தே தங்களது ஆட்சியை ஒட்டு பிளாஸ்திரி வேலை மூலம் தக்க வைத்து கொள்ளலாம் என அதிமுக நினைக்கிறது.ஒட்டப்பிடாரத்தில் முகா மிட்டுள்ள ஆறு அதிமுக அமைச்சர் களும் விதவிதமாக மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு மே 22 ஆம் தேதி இவர்கள் அனைவரும் எங்கே சென்றார்கள்? ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என பேரணியாக சென்ற மக்கள் மீது எந்த முன் அறிவிப்பும் இன்றி காக்கை, குருவிகளை சுடுவது போல 13 பேரை சுட்டுக் கொலை செய்ததே தமிழக காவல்துறை; முதல்வர் உள்ளிட்ட எந்த அமைச்சரும் உயிரிழந்த வர்களையோ காவல்துறையின் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையோ பார்க்க வரவில்லையே? காலை 12 மணிக்கு சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் மாலை 5 மணிக்கெல்லாம் தூத்துக்்குடி அரசு மருத்துவமனைக்கு வந்து அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி நடைபெற்ற சம்பவம் குறித்து கேட்டறிந்தது மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்ற முறையில் நானும் மாநிலச் செயற்குழு உறுப் பினர் க.கனகராஜ், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன் ஆகியோரும் தான்.

மோடி வாரணாசி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்க இங்கிருந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காவி வேட்டி அணிந்து சென்றிருந்தார். ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரது கொள்கைகளை கைவிட்டு விட்டார் ஓபிஎஸ். மே 23 ஆம் தேதிக்கு பின்னர் அவர் காவிக் கொடியின் கீழ் அடைக்கலம் புகுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார்.இந்த பிரச்சார கூட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் க.கனகராஜ், மாவட்ட செய லாளர் கே.எஸ்.அர்ச்சுணன், ஒட்டப்பிடாரம் ஒன்றியச் செயலாளர் ராகவன், தூத்துக்குடி ஒன்றியச் செயலாளர் சங்கரன், புறநகர் செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழுஉறுப்பினர் ஆர்.ரசல், பேச்சி முத்து, கே.பி.ஆறுமுகம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பொன்ராஜ், எம்.எஸ்.முத்து, புவிராஜ், பூமயில், திமுக தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா, ஆர்.ராதாகிருஷ் ணன், தென் சென்னை மாவட்டச்செயலாளரும் சட்டமன்ற உறுப் பினருமான மா.சுப்பிரமணியன், ஸ்பிக் நகர் பகுதி செயலாளர் ச.த.பொன்னரசு, பி.கிருபானந்தம், ஏ.சுப்பிரமணியன், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எல்.லட்சுமணன், திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் உட்பட திமுக, காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், ஆதி தமிழர் பேரவை, சமத்துவ மக்கள் கழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தலை வர்கள் கலந்து கொண்டனர்.



;