politics

img

கொரோனா ஊழலின் அடிப்படை காப்புரிமை - அ.கோவிந்தராஜன்

நம் வாழ்வில் இதுவரை காணாத கொள்ளை நோய். கடந்த நூறாண்டுகளில் ஏற்பட்ட கொள்ளை நோய் குறித்த வரைப்படம் ஒன்றை தயாரித்தால் இறப்பின் கோடு 1918க்கு பிறகு தற்பொழுது தான் செங்குத்தாக மேலேறுகிறது. மயான அமைதியும் எதிர்காலம் குறித்த அச்சமும் உலகம் முழுக்க நிறைந்து காணப்படுகின்றன. இந்த பயங்கரச் சூழ்நிலையிலும் ஒரு சிலரின் கண்களில் ஒளியையும் முகங்களில் பிரகாசத்தையும் காண முடிகிறது. உலக பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தாலும் இவர்களின் பங்குகளின் மதிப்பு மட்டும் ஏறுமுகத்தில் உள்ளன. காரணம் காப்புரிமை...

இக்கொள்ளை நோய் விவகாரத்தில் மூன்று அம்சங்கள் முக்கியமானவை.

1.     தனிநபர்களுக்கான தற்காப்பு உபகரணங்கள் - N95 முகக்கவசங்கள் மற்றும் கை கழுவும் கிருமிநாசினி
2.     கொரானா தொற்றுக்கான பரிசோதனை தடுப்பு மருந்துகள் மற்றும் நோயாளிக்களுக் கான மருந்துகள்
3.     கொரானா தொற்று ஏற்படாமல் தடுக்கக் கூடிய தடுப்பூசிகள். இதை கண்டுபிடித்து நடைமுறைப்படுத்த 12 மாதங்கள் பிடிக்கலாம்.

அதுவரை முகக்கவசங்களும், பரிசோதனை மருந்துகளும் தான் மிக முக்கியமானவை. ஆனால் இவ்விரண்டு பொருட்களுக்கும் பகாசுர மருந்து நிறு வனங்கள் காப்புரிமை பெற்றுள்ளன. குறிப்பாக, சுகாதார தொழிலாளர்கள், மருத்துவர்கள், செவி லியர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோருக்கு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள N95 முகக் கவசங்கள் மிக முக்கியமானவை. போது மான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் இத்தாலியின் லோம்பார்டி பகுதியின் 20 சதவீத சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற் பட்டுள்ளது. 27 மருத்துவ பணியாளர்களுக்கே தொற்றுஏற்பட்டதால் தில்லி புற்று நோய் மருத்துவ மனை இரு வாரங்களுக்கு மூடப்பட்டது. இது போன்ற தகவல்கள் உலகம் முழுக்க வந்த வண்ணம் உள்ளன. மேலும், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை பாதுகாப்பான N95 முகக்கவசத்திற்கான தேவையும் அதிகரித்தவண்ணம் தான் இருக்கும். இந்நிலை யில்காப்புரிமை என்ற பெயரில் சில மருந்து பகாசுர நிறுவனங்கள் மட்டும் N95 முகக் கவசங்கள் தயா ரிப்பது என்பது அநீதியானது.

அமெரிக்க நிறுவனங்கள்

N95 முகக்கவசங்களில் காப்புரிமைக்கான அம்சங்கள் என்ன இருக்கின்றன என்று தெரிய வில்லை. ‘3M’ என்ற நிறுவனம் மட்டும் 400 க்கும் மேற்பட்ட காப்புரிமைகளைப் N95 முகக் கவ சங்களுக்கு பெற்றுள்ளது. இம்முகக்கவசங்கள் தயா ரிக்கும் முதல் 10 சர்வதேச நிறுவனங்களில் எட்டு அமெ ரிக்க நிறுவனங்கள் தான். தற்பொழுது பாது காப்பான, இலகுவான முககவசங்கள் தான் முக்கி யம். அதனை இந்நிறுவனங்கள் மட்டும் தான் தயா ரிக்க இயலும். இந்நிலையில் இந்நிறுவனங்கள் 4, 5 மடங்கு விலைகளை ஏற்றியுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் இதை அந்நிறுவனங்கள் மறுத்துள்ளன. இந்தியாவில் கூட ரூ.150 க்கு விற்கப்பட்ட N95 முக கவசங்கள் தற்பொழுது ரூ.500 வரை விற்கப்படுவதாக எக்கானாமிக் டைம்ஸ் தெரி விக்கிறது. 

பாதுகாப்பான N95 முகக்கவசங்கள் தேவை யான எண்ணிக்கை தயாரிப்பதும், மலிவான விலை யில் கிடைப்பதும் தான் தற்பொழுது முக்கியம். அதற்கு WHO நிறுவனமும் தேசிய அரசுகளும் முக கவசத்திற்கான காப்புரிமையை இரத்து செய்ய வேண்டும். அது தான் மனித நேயமிக்க செயலாக இருக்கும்.

அடுத்து, கொரோனா தொற்றுக்கான பரி சோதனை தடுப்பு மருந்துகள் மற்றும் நோயாளிக் கான தற்காலிக மருந்துகள் சிலவற்றை உலக சுகா தார அமைப்பு நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. அவை 1.ரெம்டெசிவிர் 2. ஹைட்ராக்ஸி க்ளோரோ க்வினைன் (HCQ) 3.லோபினாவிர் உடன் ரிடோனா விர் மற்றும் இன்டெர்ஃபெரான் பீடா 1ஏ. இவற்றில் HCQ எனும் மருந்தை தவிர பிற மருந்துகள் அனைத்துக்கும் காப்புரிமை உள்ளன. இம்மருந்து கள் மூலம் உலகம் முழுக்க பரிசோதனைகள் நடை பெற்று வருகின்றன. ரெம்டெசிவிர் எனும் மருந்து எபோலாவிற்கு எதிராக உருவாக்கப்பட்டது. ஆனால், சரியான திறனுடன் செயல்படவில்லை. தற்பொழுது, கொரானாவிற்கு எதிராக நல்ல திறனுடன் செயல்படு வதாக கருதப்படுகிறது. ஒருவேளை ரெம்டெசிவிர் போன்ற காப்புரிமை உள்ள மருந்துகள் பரிசோதனை யில் வெற்றி பெற்றால் காப்புரிமை பெற்றவர்கள் காட்டில் கண்டிப்பாக பணமழை தான்.

இப்பொழுதே ரெம்டெசிவிர் மருந்தினை தயாரிக்கும் ஜிலீட் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு அதிகரிக்க துவங்கி விட்டது. இந்நிலையில் இந்தியா போன்ற நாடுகள் ஜிலீட் நிறுவனத்தின் காப்புரிமையை உடைத்து ரெம்டெசிவிர் மருந்தினை தயாரிக்க இயலுமா என்று கேட்டால் முடியும் என்பது தான் நம்பிக்கை அளிக்கிறது. ஆனால், அதற்குரிய உறுதிப்பாடு அரசுக்கு இருக்க வேண்டும். சுகாதார நெருக்கடி ஏற்படும் பொழுது ஒவ்வொரு தேசமும் ‘கட்டாய உரிமம்(Cumpulsory licensing)’ என்ற விதியினை பயன்படுத்தலாம். அது தேசத்திற்கான இறையாண்மை உரிமை. கட்டாய உரிமம் என்பது காப்புரிமை பெற்றவருக்கு ஒரு சிறு தொகையை ராயல்டியாக கொடுத்து விட்டு, அவருக்கு எதிராக உள்ளூர் உற்பத்தியாளருக்கு கட்டாய உரிமம் வழங்கி மருந்து தயாரிப்பது தான். இதனை உலக வர்த்தக நிறுவனமும் அனுமதிக்கிறது.

இந்தியாவில் இவ்விதிகள் மிகவும் உறுதியாக உள்ளன. குறிப்பாக இடதுசாரிகளின் ஆதரவுடன் ஐக்கிய முன்னணி அரசாங்கங்கள் இருந்த பொழுது அவர்களின் தலையீட்டினால் இவ்விதிகள் ஏற் படுத்தப்பட்டன. இவ்விதிகள் மூலம் தான் நோவார்டிஸ் நிறுவனத்தின் கிளிவேக் எனும் புற்று நோய் மருந்துகள் மிக மலிவு விலையில் நோயாளி களுக்கு கிடைத்தன. அதாவது மாதத்திற்கு ரூ. 1,30,000க்கு கிடைக்க வேண்டிய மருந்துகள் ரூ.8800க்கு கிடைத்தன. அதே போல் இவ்விதியை பயன்படுத்தித் தான் இந்திய நிறுவனங்கள் எய்ட்ஸ்க்கான மருந்தினை தயாரித்து உலகம் முழுக்க விநியோகிக்கின்றன.

மேலும், இவ்விதியை பயன்படுத்தி மருந்துகள் தயாரிக்கும் பொழுதெல்லாம் மருந்து பகாசுர நிறு வனங்களின் நலன்களுக்காக அமெரிக்கா நம்மை மிரட்டி வருகிறது. இந்திய அரசும் இனி மேல் கட்டாய உரிமம் வழங்க மாட்டேன் என்று 2016ல் அமெரிக்க அரசுக்கு தனிப்பட்ட முறையில் வாக்குறுதி அளித் துள்ளது. தற்பொழுது கொரோனாவை எதிர் கொள்ள கட்டாய உரிமத்தினை பயன்படுத்த வேண்டிய கட்டா யம் பல நாடுகளுக்கு உள்ளது. உதாரணத்திற்கு பிரேசிலின் பொல்சானோரோ வலதுசாரி அரசு கூட கட்டாய உரிமத்தினை பயன்படுத்தும் வகையிலான சட்ட மசோதா ஒன்றினை அறிமுகப்படுத்தி உள்ளது. டிரம்ப்பின் மிரட்டலுக்கு அடிபணிந்து HCQ மருந்தினை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்த மோடி அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால், சூப்பர் 301 மற்றும் USTR 301 ஆகிய தடைகளை காட்டி அமெரிக்க அரசு நம்மை நிச்சயமாக மிரட்டும். அப்பொழுது, மோடி அரசாங்கம் கொரோனாவை எதிர் கொள்ள கட்டாய உரிமத்தினை உறுதியுடன் அமல்படுத்துமா? என்ப தனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

1960களில் போலியோவுக்கு தடுப்பு மருந்தினை கண்டுபிடித்த ஜோனஸ் சால்கிடம் பத்திரிக்கை யாளர் ஒருவர் கேட்கிறார் “யாருக்கு இம்மருந்திற் கான காப்புரிமையை தரப் போகிறீர்கள்?” அமைதி யாக பதிலளிக்கிறார் சால்க்: “மக்களுக்கு தான். சூரிய ஒளிக்கு யாராவது காப்புரிமை கோர முடியுமா? அது போலத்தான், இம்மருந்துக்கான காப்புரிமை அனைவருக்கும் உரியது”. இந்த அறவுணர்வு தான் உலகெங்கும் உள்ள சாதாரண ஏழை எளிய மக்களை போலியோ நோயிலிருந்து பாதுகாத்தது. இத்தகு அறவுணர்வை தற்பொழுதைய அரசிடமோ, பன்னாட்டு நிறுவனங்களிடமோ எதிர்பார்க்க முடி யாது. மக்கள் தான் இவ்வுணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

ஆதாரம்: பிரபீர் புர்கயஸ்தா கட்டுரை
பீப்பிள்ஸ் டெமாக்ரசி

 

;