politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து......

தேசத்தின் வளங்களை கொள்ளை அடிப்பதற்கு மோடி அரசாங்கம்; தேசிய சொத்துக்களை பண மயமாக்குவது என நாமகரணம் சூட்டியுள்ளது. மத்திய அரசாங்கம் ரூ2.5 டிரில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை விற்பது என்ற இலக்குடன் இப்பொழுது மாநில அரசாங்கங்களும் 3 டிரில்லியன் சொத்துக்களை விற்க வேண்டும் என நிர்ப்பந்திக்கத் துவங்கியுள்ளது. மத்திய அரசும் நிதி ஆயோக்கும் சேர்ந்து, மாநில அரசுகள் எப்படியெல்லாம் பொதுத் சொத்துக்களை விற்கலாம் என்று விரிவான ஆலோசனைகளை அளித்திருக்கின்றன. இதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சமீபத்தில் ஒரு பயிற்சி முகாமே நடத்தியிருக்கிறார்கள்.இது மக்களின் சொத்துக்களை மூர்க்கத்தனமாக சூறையாடுவது. இதனை அனுமதிக்க கூடாது.

                                     ************

விமான நிலையங்களை நிர்வகிக்கும் “ஏர்போர்ட் அத்தாரிட்டி” எனும் பொதுத்துறை நிறுவனம். அது உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து லாபத்தை ஈட்டி வருகிறது. தேசத்தின் பாதுகாப்பையும் மக்களின் பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட மிக முக்கியமான உள்கட்டமைப்பு இது. இதன்சொத்துக்களை விற்பதும் விமான நிலையம் நிலையங்களை கூட்டுக் களவாணி முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதும் மிக மிக ஆபத்தானது.

                                     ************

வாள் வீச்சில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றதன் மூலம் பவானி தேவி இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கோவில்அர்ச்சகரின் மகளான இவர் பல பிற்போக்குதனமான சூழல்களை எதிர்கொண்டு இந்த பெருமை மிகு இடத்தை பெற்றுள்ளார்.10 லட்சத்துக்கும் அதிகமான வங்கி உழியர்கள்,வங்கி தனியார்மயத்தை கண்டித்து இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ள இந்த சூழலில் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் கூறியது கவனிக்கத்தக்கது:“பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது இமாலய தவறு” என காட்டமாக அவர்விமர்சித்துள்ளார். கார்ப்பரேட்டுகளின் லாபக் கொள்ளைக்காக மக்களின் வாழ்நாள் சேமிப்பை சூறையாடுவதை அனுமதிக்கக் கூடாது.

                                     ************

இந்தியாவின் பொருளாதாரப் பாதை கவலை தருவதாக உள்ளது என நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் குருக்மன் கவலை தெரிவிக்கிறார். குறிப்பாக வேலையின்மை மற்றும் வறுமை குறித்து மிகவும் வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார் அவர். இந்தியாவில் ஏராளமான திறன் சார்ந்த  தொழிற்சாலைகள்  இருந்தபோதிலும், அவற்றின் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் ஏற்றுமதியும் அதிகரிக்க முடியும் என்ற போதிலும் அவற்றில் அந்தளவிற்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாததன் விளைவாக மிகப் பெரும் தேக்கம் ஏற்பட்டிருக்கிறது என்று அவர் விவரிக்கிறார். மோடி அரசாங்கத்தின் கீழ் இந்தியாவின் பொருளாதாரம் பாதை என்பது வேலையின்மை மற்றும் பொருளாதார/சமூக அசமத்துவத்தை பெரிய அளவுக்கு அதிகரிக்கும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.அதிக துன்பம் மக்களுக்கு! அதிக லாபம் கார்ப்பரேட்டுகளுக்கு!

                                     ************

தில்லி மாநில அரசங்கத்தின் அதிகாரங்களை சுருக்க நாடாளுமன்றத்தில் வரைவு சட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக விரோத கொடூரமான இந்த சட்டம் தோற்கடிக்கப்பட வேண்டும். மக்களின் தீர்ப்பை இது மறுதலிக்கிறது. நமது அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சமான கூட்டாட்சித் தத்துவத்தை அழிக்கிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

                                     ************

பெரும் பணக்காரர்களுக்கு முழுமையான ஆதரவு தரும் மோடி அரசாங்கம் ஏழைகளுக்கு சுய சார்புடன் இருக்குமாறு கைவிரித்து விட்டது. இது சுயசார்பு அல்ல; மோடி அரசாங்கத்தின் சுய சரணாகதி!பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக ஆக்குவது/கார்ப்பரேட்டுகளின் நட்டத்தை தேசிய மயமாக்குவது/வங்கிகளை கார்ப்பரேட்டுகளுக்கு விற்பது/மீதமுள்ள இந்தியாவை ஓட்டாண்டியாக மாற்றுவது! இதுதான் மோடி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை. அனைவரும் ஒன்றுபட்டு இதனை தோற்கடிப்போம்.

;