politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

ரபேல் ஊழலின் இரண்டாவது அலை வந்துள்ளது. இந்த ஊழலின் குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு எந்த தடுப்பூசியும் இல்லை. அரசியல் ஊழலை சட்டப்பூர்வமாக்கியவர்கள், கூட்டுக்களவாணிகளை  ஆதரித்து அவர்களை அனைத்துத் துறைகளிலும் உலவ விட்டவர்கள், இந்தியாவின் செல்வங்களையெல்லாம் சூறையாடிக் கொள்ளையடித்தவர்கள் ஆகிய அந்த குற்ற கும்பலை எந்த தடுப்பூசியும் பாதுகாக்க முடியாது.

                                  ******************* 

வாரணாசியில் உள்ள ஞான்வாபி மசூதியில் ஒரு கோவில் இருந்ததா என்று ஆய்வு  செய்யுமாறு இந்திய தொல்லியல் அகழாய்வுத் துறைக்கு வாரணாசியில் உள்ள சிவில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது சட்டத்தை அப்பட்டமாக மீறிய ஒரு செயல் ஆகும். இதை எமது கட்சியும் அரசியல் தலைமைக்குழு கவலையோடு பார்க்கிறது. வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிமுறைகள்) சட்டமானது நாடு முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களின் தற்போதைய நிலை அப்படியே தொடர்ந்து பேணப்படுவதை உறுதிசெய்கிறது. ஆனால் அதற்கு மாறாக வாரணாசி சிவில் நீதிமன்றம் ஒரு உத்தரவு போடுகிறது. இது தொடர்பாக உடனடியாக மேல்நீதிமன்றம் தலையீடு செய்து, கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறோம். அதுமட்டுமல்ல, கீழமை நீதிமன்றங்கள் ஒருபோதும் சட்டத்திற்கு விரோதமாக உத்தரவுகளை பிறப்பிக்கக்கூடாது என்று வழிகாட்டுதல் செய்து மேல்நீதிமன்றங்களால் கறாரான அறிவுறுத்தல்கள் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

                                  ******************* 

நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உரங்களின் விலை கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அராஜகமான முறையில், கொடிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக நமது அன்ன தாதாக்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, இந்திய மக்களின் நலன்களை காப்பதற்காக பல லட்சக்கணக்கானோர் திரண்டு இடைவிடாத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த போராட்டக் களத்தில் 350க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது இன்னுயிரை ஈந்திருக்கிறார்கள். பாஜக அரசு இந்த நிலையில் உரங்களின் விலையை உயர்த்திருப்பதன் மூலம் அந்த விவசாயத் தியாகிகளை அப்பட்டமாக அவமதித்திருக்கிறது. உடனடியாக உரங்களின் விலையேற்றம் ரத்து செய்யப்பட வேண்டும்.  

எந்தளவிற்கு உரங்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது என்பதை பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. டிஏபி உரத்தின் விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.24 ஆயிரமாக இருந்தது. அது தற்போது 38 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது டிஏபி 50 கிலோ கொண்ட ஒரு மூட்டையின் விலை ரூ.1200லிருந்து தற்போது ரூ.1900 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல என்பிகே1 - கலப்புரம் விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.23,500லிருந்து தற்போது ரூ.35,500 ஆகவும்; என்பிகே2- கலப்புரம்  விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.23,700லிருந்து தற்போது ரூ.36 ஆயிரமாகவும்; என்பி- (பாஸ்பேட்) கலப்புரம் மெட்ரிக் டன்னுக்கு ரூ.18,500லிருந்து தற்போது ரூ.27 ஆயிரமாகவும் மிக கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

என்பிகே1 - கலப்புரம் 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.1175லிருந்து ரூ.1755ஆகவும்; என்பிகே2 - கலப்புரம் 50 கிலோ மூட்டை ரூ.1185 லிருந்து ரூ.1800ஆகவும்; என்பி - (பாஸ்பேட்) கலப்புரம் 50 கிலோ மூட்டை ரூ.925 லிருந்து ரூ.1350 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை மடங்கு விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 70 ஆண்டு காலத்தில் உரங்களின் விலை இவ்வளவு கடுமையான முறையில் உயர்த்தப்பட்டதில்லை. இது நமது விவசாயத்தை அழித்து விடும் என்பது மட்டுமல்ல; கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையையும் அழித்துவிடும்; உணவுப் பொருட்களின் விலையில் கடும் உயர்வினை ஏற்படுத்த வழிவகுக்கும். எனவே மோடி அரசே உடனடியாக உர விலை உயர்வை வாபஸ் பெறுக!

;