politics

img

தமிழகப் பொருளாதாரத்தை திவாலாக்கிய அதிமுக அரசு.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு....

தமிழகப் பொருளாதாரத்தை அதிமுக அரசு திவால் நிலைக்கு தள்ளியுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை (2021-2022) துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கையில் உள்ள விபரங்களை பார்க்கும் பொழுது ஆட்சிப்பொறுப்பிலிருந்து விலகும் நிலையில் தமிழகத்தை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைத்து தமிழக பொருளாதாரத்தை திவாலாகும் நிலைக்கு அதிமுக அரசு தள்ளியுள்ளது.தமிழக அரசின் கடன் சுமை ரூ. 5.7 லட்சம் கோடியை எட்டியுள்ள நிலையில் மேலும், மேலும் கடன் வாங்குவதற்கான அறிவிப்புகள்தான் இந்த நிதிநிலை அறிக்கை முழுவதும் இடம்பெற்றுள்ளது.2020-21 ஆம் ஆண்டின் வரவு - செலவு திட்ட மதிப்பீடுகளில் கணிக்கப்பட்ட ரூ. 21,617.61 கோடியைக் காட்டிலும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வருவாய் பற்றாக்குறை ரூ. 65,994.06 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்தத்தில் 2020-21 திருத்த மதிப்பீட்டில் மாநிலத்தின் பற்றாக்குறை ரூ. 96,889.97 கோடியாக உயர்ந்துள்ளது. இது தமிழகத்தின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளது என்பதையே காட்டுகிறது.

                                                         ************************

மீள முடியாத கடன் வலை

மாநிலத்தில் ஒட்டுமொத்த கடன் தவிர ஒவ்வொருதுறையும் தனித்தனியாக கடன் வாங்குவதற்கான மதிப்பீடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மின் துறையில் ரூ.37,130 கோடி அளவிற்கும், போக்குவரத்துத்துறையில் ரூ.3,739 கோடி கடன் வாங்க திட்டமிடப்பட்டுள் ளது. இது அனைத்துத் துறைகளையும் மீள முடியாத கடன்வலையில் சிக்க வைக்கும்.விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர்க்கடன் ரூ.12,110.74 கோடி அளவுக்கு தள்ளுபடி செய்யப்படும்என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இடைக்கால நிதிநிலைஅறிக்கையில் ரூ.5 ஆயிரம் கோடி மட்டுமே கூட்டுறவு அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 7110 கோடி தொகை கிடைக்கவில்லையெனில் கூட்டுறவு அமைப்புகள் தாங்க முடியாத நிதி நெருக்கடிக்கு உள்ளாகி  செயல்படமுடியாத நிலை ஏற்படுவதுடன், எதிர்காலத்தில் விவசாயக்கடன் பெறும் வாய்ப்பு பறிபோகும் ஆபத்து உருவாகும்.

                                                         ************************

மத்திய அரசிடம் கேட்டுப் பெறத் திராணியற்ற தமிழக அரசு

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழக அரசு, மத்திய அரசின் பங்களிப்பை வற்புறுத்தி பெறவும் தவறியுள்ளது. உதாரணமாக, தமிழ்நாட்டிற்கு அளிக்கவேண்டிய மத்திய வரியின் பங்கு32,849.34 கோடியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 23,039.46 கோடியாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சிஅமைப்புகளுக்கும் 5 ஆண்டுகளுக் கான மானியத்தொகை 8,232.31 கோடியிலிருந்து 7,187 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழ்நாட்டிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய மானியத்தொகை இதுவரை மத்திய அரசால் விடுவிக்கப் படவில்லை. சுகாதாரம், பள்ளிக்கல்வி, உயர் கல்வி, வேளாண்மை மற்றும் ஊரக உட்கட்டமைப்பு உள்ளிட்ட சில துறைகளுக்கு 15-வது நிதிக்குழு பரிந்துரைத்துள்ள ரூ.4845 கோடியை மத்திய அரசு விடுவிக்க மறுத்து வருகிறது. மத்திய அரசின் இத்தகைய தமிழக விரோதப்போக்குகளை கண்டிப்பதற்கு திராணியற்று தமிழக மக்கள் நலனை காவுகொடுக்கும் அரசாக அதிமுக அரசு உள்ளது.

                                                         ************************

வேலைவாய்ப்பு எங்கே?

மின்துறை உள்ளிட்ட பல துறைகளில் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கான அறிவிப்பு எதுவும் இல்லாதது, இளைஞர்களின் வேலைவாய்ப்பை பற்றிஇந்த அரசுக்கு எந்தவித அக்கறையும் இல்லை என்பதை இந்த பட்ஜெட் எடுத்துரைக்கிறது.மொத்தத்தில் இந்த இடைக்கால நிதி நிலை அறிக்கைகடந்த ஐந்தாண்டு காலத்தில் அதிமுக அரசு தமிழக பொருளாதாரத்தை திவாலாக்கிவிட்டது என்பதையே உணர்த்துகிறது.

                                                         ************************

நகர்ப்புற வேலைத்திட்டத்திற்கு உடனே நிதி ஒதுக்குக!

கிராமப்புற வேலை உறுதித்திட்டம் போல் நகர்ப்புற மக்களுக்கு வேலை அளிக்கும் நகர்ப்புற வேலை வாய்ப்புத்திட்டத்தை உருவாக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளது. கொரோனா காலத்தில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட ரங்கராஜன் குழுவிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. தற்போது நிதிநிலை அறிக்கையில் நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கதாகும். எனினும் காலதாமதம் செய்யாமல் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கி உடனடியாக செயல்படுத்திட வேண்டும்.

                                                         ************************

அம்மா கிளினிக்-தேர்தல் திட்டமா?

தமிழக அரசினால் படாடோபமாக விளம்பரப்படுத்தப்படும் அம்மா மினி கிளினிக் திட்டத்திற்கு 144 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு நிரந்தர மருத்துவர்கள், பணியாளர்கள் நியமிக்கப்படாததோடு, நிதி ஒதுக்கீடும் செய்யப்படாத நிலையில் தேர்தலுக்கான தற்காலிக திட்டமாகவே இதை அரசு அறிவித்துள்ளது என்றே கருத வேண்டியுள்ளது.

                                                         ************************

அரசு ஊழியர் கோரிக்கை என்னாயிற்று?

கோவிட் பெருந்தொற்று காலத்தில் பொறுப்புடன் செயலாற்றிய அரசு ஊழியர்களுக்கு நிதிநிலை அறிக்கையில் நன்றி கூறப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர பரிசீலிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை என்பது மட்டுமல்ல; பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிக் கொண்டிருக்கும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள், அங்கன்வாடி - சத்துணவு ஊழியர்கள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் ஆகியோரின் கோரிக்கைகள் குறித்து இந்த அறிக்கையில் எதுவும் இல்லை.