politics

img

ஆர்வத்தை தூண்டும் கடிதங்கள்

“நான் ஏன் உங்களுக்கு வாக்களிக்கப் போவதில்லை’’ என்ற தலைப்பில் ஆசிரியர் இரா. எட்வின் வித்தியாசமான நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 48 பக்கங் கள் கொண்ட அந்த புத்தகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி, திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ், மருத்துவம் படிக்கும் மகள் கீர்த்தி ஆகியோருக்கு பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் எழுதிய கடிதங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த கடிதங்கள் நலம் விசாரிக்கும் கடிதம் மட்டுமல்ல, நாடு அரசியல், கலை, மாற்று மருத்துவம், புத்தக வாசிப்பு என பல விஷயங்களை பேசுகிறது. மொழி, மொழி வளர்ச்சி, மொழிச் சீர்திருத் தம், மொழி வளர்ச்சிக்கும் மொழி சீர்திருத்தத் திற்கும் இடையிலான வேறுபாடு, மத சகிப்புத்தன்மை, பெண்ணுரிமை குறித்து விவாதிக்கின்றன. 


திமுக ஆட்சிக்கு வந்தால் இனி நூலகங்கள் அமைத்தால் அதனுடன் கூட்ட அரங்குகளையும் அமைக்கவேண்டும் என்கிற நல்ல ஆலோசனையை மு.க.ஸ்டாலினுக்கு வழங்கியிருக்கிறார். அன்பான அறிவுரையாக அது பார்க்கப்படவேண்டும். மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த விதவைகள் மறுவாழ்விற்கான தனிநபர் மசோதாவை பாஜக தோற்கடித்ததை சுட்டிக்காட்டியுள்ளார். உத்தரபிரதேசத்தில் பிருந்தாவனம் என்றொரு ஆதரவற்ற விதவைகளுக்கான அமைப்பு இருக்கிறது. அதில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் விதவைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஆறு ரூபாயை அரசு செலவு செய்கிறது. இதனால் பலர் பிச்சையெடுக்கிறார்கள். சிலர் பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்தப்படுகிறார்கள். அவர்களை பாதுகாக்க கொண்டுவரப்பட்ட மசோதாவை பாஜக எம்பிக்கள் ஆதரவு அளிக்க மறுத்துவிட்டனர். பாரத் மாதா கீ ஜெய் என்று மூச்சுக்கு 300 தடவை முழங்குவோரின் முகமுடியை கிழிக்கிறது இந்த கடிதம். முஸ்லீம் பெண்களின் திருமண உரிமையை பாதுகாக்கவே முத்தலாக் சட்டத்தை கொண்டு வந்ததாக கூறும் மோடி, லட்சக்கணக்கான இந்து விதவைகளை பாதுகாக்க வேண்டாமா? ஏன் இந்த மசோதாவை அவரது கட்சியினர் எதிர்க்கிறார்கள். உண்மையில் இவர்களுக்கு முஸ்லீம் பெண்கள் மீதும் அக்கறை இல்லை, இந்து பெண்கள் மீதும் அக்கறை இல்லை என்பதே உண்மை. முஸ்லீம் களை எந்த வழியிலாவது பழிதீர்த்துக் கொள்ள முடியாதா என்று எந்நேரமும் சிந் தித்துக்கொண்டிருக்கும் கூட்டத்தாரிடம் இதைத்தானே எதிர்பார்க்க முடியும். 


“அப்புறம் இவனை மட்டும் ஏன் தடுக்கிறிங்க” என்ற தலைப்பில் இயக்குனர் மாரி செல்வராஜூக்கு எழுதியுள்ள கடிதத்தில் பரியேறும் பெருமாள் திரைப் படத்தை சிலாகித்து பல்வேறு விஷயங்களுடன் விவாதிக்கிறார். சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக தற்கொலை செய்வதை விட போராடி மடிவது சிறந்தது என்று படத்தின் ஒரு காட்சியை இதில் சுட்டிக்காட்டியுள்ளார். மத வாதத்தை எதிர்க்க காங்கிரஸ் கட்சி இன்னும் பல மதசார்பற்ற சக்திகளுடன் உறவை கெட்டிப்படுத்த வேண்டும் என்று ஒரு கடிதத்தை ராகுல் காந்திக்கு எழுதி இருக்கிறார். மாற்று மருத்துவத்தின் அவசியம் குறித்து மருத்துவம் படிக்கும் மகள் கீர்த்திக்கு கடிதம் எழுதியுள்ளார். அலோபதி மருத்துவம் அதிக செலவு வைப்பதாக இருக்கிறது நாளுக்கு நாள் ஏழைகளுக்கும் மருத்துவத்திற்கும் இடையேயான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்கு அலோபதி மருத்துவம் வேண்டாம் என்று வறட்டுத்தனமாக பேசாமல் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத் திருக்கிறார் ஆசிரியர் எட்வின். உண்மையிலேயே இதுபோன்ற கடிதங்கள் படிப் போருக்கு பல்வேறு விஷயங்கள் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளன.


வெளியீடு: வெற்றிமொழி வெளியீட்டகம், திண்டுக்கல். 

செல்: 9715168794, 8526665056 போன்: 0451-2424794

விலை: ரூ. 40/- பக்கம்: 48

;