internet

img

விண்டோஸ் கணினிகளுக்கு பயனுள்ள 5 இலவச மென்பொருள்கள்

விண்டோஸ் கணினிகளில் பணிபுரிபவர்களுக்கு உடல்நலம், பிடிஎப் மற்றும் படக் கோப்புகளின் அளவைக் குறைக்க, காப்பி பேஸ்ட் பயன்பாட்டில் கூடுதல் வசதிகள், ஸ்கிரீன்ஷாட் செய்ய எனப் பல வகையிலும் உதவக்கூடிய புதிய இலவச மென்பொருள்கள் சிலவற்றை இவ்வாரம் பார்ப்போம்.

கணினியை விட்டு விலகுவோம்
கணினியில் காலம் நேரம் பார்க்காமல் தொடர்ச்சியாக அமர்ந்து  பணிபுரிபவர்களுக்கு மூட்டுவலி, இடுப்பு வலி, முதுகுத்தண்டு பலவீனமடைதல், கண் பாதிப்பு மட்டுமல்லாமல் உள்ளுறுப்புகளான சிறுநீரகம், ஜீரண மண்டலம் முதலியவற்றிலும் பிரச்சனைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குறைந்தது 30 நிமிடங்களுக்கு ஒருமுறை 5 நிமிடம் எழுந்து நடத்தல், கண்களை மூடி தியானித்தல் ஆகியவற்றை செய்வது அவசியம் என்று பரிந்துரைக்கின்றனர். வேலை செய்யும்போது நேரம் போவதே தெரியவில்லை என்பவர்களுக்கு உதவும் வகையில் வந்திருப்பதுதான் டெஸ்க் ரிலீஃப் மூவ் மோர் (Desk Relief Move More) என்ற இந்த மென்பொருள். இம்மென்பொருளை கணினியில் பதிந்து கொண்டால் 25 நிமிடங்களுக்கு ஒருமுறை உங்களுக்கு நினைவூட்டல் திரை தோன்றி எழுந்து செல்லும்படி தகவல் கூறும். டிபால்ட்டாக அமைக்கப்பட்ட 25 நிமிடங்களை கூடுதலாக வேண்டும் என்பவர்கள் மாற்றி அமைக்க வண்ணமயமான பட்டையில் ஒரு பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை அதிகபட்சம் 60 நிமிடங்கள் வரை நகர்த்திக் கொள்ளலாம். உடல் நலனில் அக்கறை உள்ளவர்களுக்கு இந்த மென்பொருள் ஒரு நல்ல துணையாக இருக்கும்.இம்மென்பொருளை பதிவிறக்கம் செய்ய: https://deskrelief.co.uk/

பிடிஎப் அளவைக் குறைக்க
பிடிஎப் வகைக் கோப்புகள் அதிக கொள்ளளவு கொண்டதாக இருந்தால் அதனை விரைவாக பார்ப்பதற்கும், டவுன்லோட் செய்வதற்கும் சிரமம் ஏற்படும். அதிக ரெசல்யூசன் கொண்ட படங்களால் இதுபோன்ற நிலை ஏற்படலாம். எனவே, பிடிஎப் கோப்பை எளிதாக பார்ப்பதற்கு அதன் அளவைக் குறைத்து அனுப்புவது பயனளிக்கும். இதனை செய்ய உதவும் இலவச மென்பொருள்தான் பிடிஎப் கம்பரசர் (PDF Compressor). இம்மென்பொருளில் அளவைக் குறைக்க விரும்பும் பிடிஎப் கோப்பை தேர்வு செய்து, Screen, eBook, Printer, Prepress, Default என்கிற 5 தேர்வுகளில் உங்களுக்கு விருப்பமானதைத் தேர்வு செய்து கம்ப்ரஸ் பட்டனை கிளிக் செய்தால் போதும்.இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய: http://www.freepdfcompressor.com/

படக்கோப்பு அளவைக் குறைக்க
அதிக அளவு கொண்ட படங்களின் அளவைக் குறைக்க பல்வேறு மென்பொருள் இருக்கின்றன. இம்மென்பொருளும் அந்த வரிசையில் வந்திருக்கிறது. இதில் Drag & Drop முறையில் படங்களை இழுத்து மென்பொருளின் திரை மீது விட்டாலே போதும். தேவைப்படும் அளவு, தரம் ஆகியவற்றை நிர்ணயம் செய்து கன்வர்ட் கொடுத்தால் போதும். படங்கள் உள்ள அதே ஃபோல்டரில் பெயர் மாற்றி சேவ் செய்துவிடும். தேவைப்பட்டால் வேறு ஃபோல்டருக்கு மாற்றும் வகையில் செட்டிங் அமைக்கலாம். படங்களை 180 டிகிரி வரை திருப்பிக் கொள்ளும் வசதியும் உள்ளது. இம்மென்பொருளை பதிவிறக்கம் செய்ய: https://singularlabs.com/software/bzzt-image-editor/

கிளிப் போர்ட் மேனேஜர்
விண்டோஸ் கணினிகளில் காப்பி பேஸ்ட் கட்டளை கடைசியாக பயன்படுத்தியது மட்டுமே நினைவில் வைத்திருக்கும். முந்தைய காப்பி கட்டளைகளை விண்டோசின் கிளிப்போர்ட் நினைவில் வைத்திருக்காது. முந்தைய காப்பி டெக்ஸ்ட் மற்றும் படங்களை நினைவில் கொள்ளும் வகையில் அமைந்த மென்பொருள்தான் ரிமெம்பர் (Remember). பல காப்பி கட்டளைகளை பதிவேற்றிக் கொள்ளும் இம்மென்பொருள் உங்களுக்கு மறுமுறை தேவைப்படும்போது இங்கிருந்து எடுத்துக் கொள்ளலாம். ஒரே சமயத்தில் பல டாக்குமெண்ட்களில் இதுபோன்ற காப்பி வேலைகளைக் கையாள்பவர்களுக்கு இம்மென்பொருள் உதவியாக இருக்கும்.இம்மென்பொருளை பதிவிறக்கம் செய்ய: https://singularlabs.com/software/remembr/

கணினித் திரையை படமாக மாற்றித் தர
நம் கணினித் திரையில் உள்ள காட்சியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்புவதற்கு உதவும் மென்பொருள் கிரீன்ஷாட் (greenshot). இம்மென்பொருளை பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொண்ட பிறகு உங்கள் திரையில் செய்யும் வேலைகளை குறிப்பிட்ட பகுதியையோ முழுமையாகவோ படக் கோப்புகளாகப் பதிவு செய்ய உதவுகிறது. இணையப் பக்கங்கள், புராஜக்ட் வேலைகள், தொழில்நுட்பப் பிரச்சனைகள் ஆகியவற்றின் போது உதவக்கூடியது இம்மென்பொருள். படங்களை கணினியில் சேமிக்கவும், மின்னஞ்சலில் அனுப்பவும், சமூக வலைத்தளங்களில் பகிரவும் இம்மென்பொருளில் வசதி உள்ளது.  ஓப்பன்சோர்ஸ் முறையில் அமைந்த இலவச மென்பொருளான இதை பதிவிறக்கம் செய்யவேண்டிய முகவரி: https://getgreenshot.org/

;