india

img

தொழிலாளி வர்க்க தொப்புள்கொடி உறவு - சு.பொ.அகத்தியலிங்கம்

100 ஆண்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சில சாட்சிகள் - 7

ஜவஹர்லால் நேரு

கம்யூனிஸ்ட்டுகளும் சோஷலிஸ்ட்டுகளும்தான் வர்க்கங்களாகப் பிரித்து கசப்புணர்வைப் பிரச்சாரம் செய்கிறார்களா? தனது கொள்கை, நடைமுறை மூலம் மனித குலத்தின் பெரும்பகுதியினரை– பழங்கால அடிமையினும் மோசமான கூலியடிமையாய் ஆக்கியது யார்? முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் அல்லவா?”

 

லாலா லஜபதி ராய்

என் சொந்த அனுபவத்தில் அமெரிக்க ஐரோப்பிய அனுபவத்தில் ஏகாதிபத்தியத்தைவிட முதலாளித்துவத்தைவிட  உண்மையானது நம்பத் தகுந்தது – எல்லா நாட்களிலும் போல்ஷ்விக்
கூறும் உண்மையே!”

“வர்க்கப் போராட்டத்தைப் பிரச்சாரம் செய்கிறோம் என்றும், வர்க்கங்களுக்கு இடையிலான இடைவெளியை மேலும் அகலப்படுத்துகிறோம் என்றும் நம்மீது அடிக்கடி குற்றம்சாட்டப்படுகிறது. முதலாளித்துவத்தினாலேயே இந்த இடைவெளி மேலும் ஆழமாகிறது. அந்த வகையில் முதலாளித்துவத்தின் சாதனையை வேறெதனாலும் முறியடித்துவிட முடியாது. ஆயினும் நம்மைக் குறை கூறுபவர்களோ  எதையும் கிஞ்சிற்றும் ஏறெடுத்துப் பார்க்காதவர்களாகவும், தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிய முயலாதவர்களாகவுமே உள்ளனர். கம்யூனிஸ்ட்டுகளும் சோஷலிஸ்ட்டுகளும்தான் வர்க்கங்களாகப் பிரித்து கசப்புணர்வைப் பிரச்சாரம் செய்கிறார்களா? தனது கொள்கை, நடைமுறை மூலம் மனித குலத்தின் பெரும்பகுதியினரை – பழங்கால அடிமையினும் மோசமான கூலியடிமையாய் ஆக்கியது யார்? முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் அல்லவா?”

இப்படி ஆவேசமாய் கேள்வி எழுப்புவது யார்? கம்யூனிஸ்ட் தலைவரா? அல்ல, அல்ல. பண்டித ஜவஹர்லால் நேருவேதான். 1928ல் டிசம்பர் 1 ல் நாக்பூரில் நடந்த ஏஐடியுசி மாநாட்டின் தலைமையுரையில் இப்படி முழக்கமிட்டார். மேலும் சொன்னார்; “இந்த வர்க்கப் போராட்டம் நம்மால் உருவாக்கப்பட்டதல்ல; அது முதலாளித்துவத்தினால் உருவாக்கப்பட்டது; முதலாளித்துவம் நீடிக்கும் வரை அதுவும் நீடிக்கும். நெருப்புக் கோழி மணலில் தலையை புதைத்துக் கொள்வதுபோல அதை ஒதுக்கிவிடுவதின் மூலம் நாம் விடுபட்டுவிட முடியாது. இதற்கான காரணங்களை அகற்றுவதன் மூலம் மட்டுமே நம்மால் அமைதியைக் கொண்டுவர முடியும்”. பின்னர் ஒரு கட்டத்தில் [1947 மே மாதம்] வர்க்க சமரசத்தை தேர்ந்தெடுத்து ஐஎன்டியுசி எனும் தனி அமைப்பை காங்கிரஸ் உருவாக்கியது தனிக்கதை. தொழிலாளி வர்க்கக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தொழிற்சங்க இயக்கத்துக்கும் இடையிலான தொப்புள் கொடி உறவு வலுவானது.

1894ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவின் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 815. தொழிலாளர் எண்ணிக்கை சுமார் 3,50,000. ஆனால் 1914ல் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 3000 ஆகவும் தொழிலாளர் எண்ணிக்கை 9,50,000 ஆகவும் உயர்ந்தன. தூத்துக்குடி கோரல் மில் போராட்டம், பம்பாய் நெசவு ஆலைத் தொழிலாளர் போராட்டம், ரயில்வே தொழிலாளர் போராட்டம் என போராட்டங்கள் சீறி எழுந்தன.

வ.உ.சிதம்பரம் கைது செய்யப்பட்ட போது 1908 மார்ச் 14-19 நடைபெற்ற தூத்துக்குடி வேலைநிறுத்தமே முதல் அரசியல் வேலை நிறுத்தமாகும். திலகர் கைது செய்யப்பட்ட போது ஜூலை 23-28  பம்பாயில் நடை பெற்ற வேலைநிறுத்தம் அளவில் பெரியது. ஆனால் வட இந்திய வரலாற்று ஆசிரியர்கள் தமிழகத்தின் பங்கை அங்கீகரிக்காமலே வரலாற்றை வடிக்கின்றனர். 

ஆக, இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியில் புதிதாய் வரலாற்றில் தோன்றிய தொழிலாளி வர்க்கம் இந்திய மண்ணில் மெல்ல உருவாகி மேலெழுந்து ஓங்கி வளர்ந்ததும்; அதன் தொடர் வினையாய் தொழிற் சங்க இயக்கம் முளைவிட்டதும்; மகுடமாய் தொழிலாளி வர்க்கக் கட்சி உதயமானதும் மிக முக்கியமான வரலாற்றுச் செய்தியாகும். பள்ளி பாடப் புத்தகம் இதனை சொல்லித் தருவதில்லை. ஆயினும் வரலாற்றில் இதன் ஆழமான தடம் ஒரு போதும் மறைந்துவிடாது. 

1920 அக்டோபர் 31 ஆம் நாள் ஏஐடியுசி எனும் அகில இந்திய தொழிற் சங்கக் காங்கிரஸ் பிறப்பை அறிவித்த மாநாடு கூடியது. ஐந்து லட்சம் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப் படுத்திய  60 சங்கங்களின் சார்பில் 806 பிரதிநிதிகளும் 40 பார்வையாளர்களும் பங்கேற்றனர். தலைமையுரை ஆற்றிய லாலா லஜபதி ராய் குறிப்பிட்டார். “ராணுவமயமும் ஏகாதிபத்தியமும் முதலாளித்துவத்தின் இரட்டைக் குழந்தைகள். அதன் நிழல், சிரிப்பு, குரைப்பு எல்லாமே விஷமாகும். அதன் விஷ முறிவுக்கு ஒரேமருந்து திரட்டப்பட்ட தொழிலாளர்களே! அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய  தொழிலாளர்கள் ஒன்று திரளத் துவங்கிவிட்டனர். ரஷ்யாவில் அதற்கும் மேல் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எனும் நோக்கில் தலைமைக்கு வந்துள்ளனர்.

நாம் உண்மை என்று நம்புபவை நெடுநாள் அப்படியே இருக்கப்போவதில்லை. ஏகாதிபத்தியமும் முதலாளித்துவமும் ஒரு புறம், சோஷலிசம் மறுபுறம் என நெடுநாள் செல்ல முடியாது. என் சொந்த அனுபவத்தில் அமெரிக்க ஐரோப்பிய அனுபவத்தில் ஏகாதிபத்தியத்தைவிட – முதலாளித்துவத்தைவிட  உண்மையானது நம்பத் தகுந்தது – எல்லா நாட்களிலும் போல்ஷ்விக் கூறும் உண்மையே!” இதே லாலா லஜபதிராய் காங்கிரஸ் கட்சி மாநாட்டில் கம்யூனிசம் பெரும் சவாலாகிவிடும் என அச்சம் தெரிவித்தது தனிக்கதை. முன்பு பார்த்தோம்.

ஏஐடியுசியிலிருந்து 1947ல் ஐஎன்டியுசி பிரியும் முன்பு 1928ல் ஒரு சாரர் பிரிந்ததும்; 1931ல் இன்னொரு சாரார் பிரிந்ததும்; 1933ல் மீரட் சதி வழக்கு முடிந்து கம்யூனிஸ்டுகள் வெளிவந்த பின் மீண்டும் ஒன்றானதும் வரலாறு.

;