india

img

சென்ட்ரல் விஸ்டா பணிகளுக்கு தடை விதிக்க இயலாதாம் !

சென்ட்ரல் விஸ்டா பணிகளுக்கு தடை விதிக்க இயலாது என்று  தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 94 ஆண்டுகள் பழமையானது. இதை கட்டும்போது ரூ.83 லட்சம் செலவானது. இந்த கட்டிடத்தை இடிக்காமல் அதனையொட்டி 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் முக்கோண வடிவில் கட்டப்பட உள்ளது. இதற்காக ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மத்திய தலைமை செயலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன.
அதி நவீன வசதிகளுடன் கட்டப்படும் புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தின் மதிப்பு ரூ.971 கோடியாகும். 21 மாதங்களில் அதாவது 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75-வது சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றில் நாட்டு மக்கள் சிக்கி தவிக்கும் நிலையிலும் மோடி தலைமையிலான பாஜக அரசு சென்ட்ரல் விஸ்டா திட்ட பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த பணிகளை ஒத்திவைத்து விட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான நடவடிக்கைகளுக்கு அந்த நிதியை தற்போது பயன்படுத்த வேண்டும் என்று  சமூக ஆர்வலர்கள்  வலியுறுத்தி  வருகின்றனர்.  மேலும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இரண்டு வாரங்களுக்கு முன் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில்,  டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றம் உள்ளடங்கிய சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணிகளுக்கு எந்தவிதமான தடையும் விதிக்க முடியாது என  நீதிபதிகள் தெரிவித்தனர். இது ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாவசிய பணி என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், மனுதார் மனு தொடர்ந்ததில் உள்நோக்கம் உள்ளது என கூறி அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பல்வேறு தரப்பினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 

;