india

img

தமிழகத்தில் வேலைநிறுத்தம் - மறியல் வெற்றி... 25 கோடி தொழிலாளர் - விவசாயிகள் பேரெழுச்சி

புதுதில்லி/சென்னை:
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத - தொழிலாளர் விரோத - விவசாய விரோத கொள்கைகளை எதிர்த்து நவம்பர் 26 வியாழனன்று நாடு தழுவிய மாபெரும் பொது வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றது.

நவீன தாராளமயக் கொள்கைகள் இந்திய மக்களின் வாழ்வாதாரங்களை சூறையாடத் துவங்கிய போது அதற்கு எதிராக இந்திய தொழிலாளி வர்க்கம் நடத்தியுள்ள 20வது மாபெரும் வேலைநிறுத்தம் இது ஆகும்.அனைத்து மாநிலங்களிலும் பிரதான தொழிற்துறைகள் முற்றாக ஸ்தம்பித்தன. கோடிக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பங்கேற்ற இந்த வேலைநிறுத்தம் மற்றும் ரயில் மறியல், சாலை மறியல், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் 10 மத்திய தொழிற்சங்கங்கள், துறைவாரி ஊழியர் சம்மேளனங்கள், அகில இந்திய விவசாயிகள் சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு ஆகிய வற்றின் தலைவர்கள் பங்கேற்றனர். 
தில்லியில் சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் போராட்டம் நடைபெற்றது. தில்லியில் தொழிலாளர் போராட்டத் திற்கு ஆதரவாக சீத்தாராம் யெச்சூரி, து.ராஜா உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற பேரணியும் நடைபெற்றது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தொழிலாளர் மற்றும்விவசாயிகளின் இந்த மாபெரும் எழுச்சிக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ(எம்எல்) உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளும், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இயக்கங் களில் பங்கேற்றன. 

தமிழகத்தில் வேலைநிறுத்தம் வெற்றி
தமிழகத்தில் வேலை நிறுத்தம், மறியல்போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்தப்போராட்டங்களில் பங்கேற்ற தொழிலாளர் களுக்கு சிஐடியு வாழ்த்து தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசாங்கத்தின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும், முழு அடைப்பு காலத்தில் வருமானம்இழந்த தொழிலாளர்களுக்கு முழு அடைப்புநீடிக்கும் வரை மாதாமாதம் 7500 ரூபாயை நேரடியாக வழங்கிடவும், குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு நபர் ஒன்றுக்கு 10 கிலோ அரிசிவழங்கிடவும், கிராமப்புற 100 நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக மாற்றி; நாளொன்றுக்கு கூலியை 600 ரூபாயாக மாற்றிடவும், விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கும் நோக்குடன் கொண்டுவரப்பட்டுள்ள 3 அவசர சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், நீண்டகாலமாக போராடிப் பெற்ற 29 தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியதை திரும்பப் பெறக்கோரியும், பொதுத்துறைகளை தனியார்மயமாக்குவதற்கு எதிராகவும் நடைபெற்ற அகில இந்திய வேலைநிறுத்தம் தமிழகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த வேலைநிறுத்த காலத்தில், கடுமை யான புயல் தமிழகத்தை  தாக்கியதால், 13 கடலோர மாவட்டங்களில் வேலைநிறுத்தம் மறியலில் சற்று பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும், மத்திய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் இதர மாவட்டங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். சில இடங்களில் காவல்துறை அனுமதிக்காததால் அதையும் மீறி ஆர்ப்பாட்டங்களும், மறியலும் நடைபெற்றது.தமிழகத்தில் முக்கிய தொழிற்சாலைகளான சேலம் ஸ்டீல், பிஎச்இஎல் திருச்சி, பிஎச்இஎல்ராணிப்பேட்டை ஆகிய மத்திய பொதுத்துறைநிறுவனங்களில் முழுமையான வேலை நிறுத்தம் நடைபெற்றது. என்எல்சியில் 20 சதவீதமான தொழிலாளர்கள் பணிக்குச் செல்லவில்லை. வங்கிகள் இயங்கவில்லை. எல்ஐசி போன்றவற்றில் வேலைநிறுத்தத்தால் பணிகள் பெருமளவு பாதிக்கப்பட்டது. தனியார் நிறுவனங்களான எம்ஆர்எப், அசோக் லைலேண்ட், அம்பத்தூர் சிப்காட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களும் வேலை நிறுத்தத்தால் மூடிக் கிடந்தன.

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. கோவை மாவட்டத்தில் பிரிக்கால் உள்ளிட்ட அனைத்து தொழிற்சாலைகளும் மூடிக்கிடந்தன. சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத் தில் பங்கேற்றனர். திருப்பூர் பனியன் தொழிற்சாலைகள், விருதுநகர் பட்டாசு தொழிற்சாலைகள் அனைத்தும் இயங்கவில்லை. துறைமுகங்களில் அவசர சேவைகள் மட்டுமே இயங்கின.மொத்தத்தில் இந்த வேலைநிறுத்தம் அரசுக்கு எதிராக மக்களிடம் உள்ள கோபத்தைவெளிப்படுத்துவதாக இருந்தது. வேலைநிறுத்தத்திலும், மறியலிலும் பங்கேற்ற தொழிலாளர்களை சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு பாராட்டுகிறது; வாழ்த்துகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

;