india

img

பிசிசிஐ தலைவர் கங்குலியை விளாசும் நெட்டிசன்கள்!

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை குறித்த தனது மகளின் பதிவை பெரிது படுத்த வேண்டாம் என்று ட்வீட் செய்த பிசிசிஐ தலைவர் கங்குலியை, நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டதுக்கு எதிராகவும், ஜமியா மிலியா மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராகவும், நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான கங்குலியின் மகள் சனா கங்குலி பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

அதில் “நம்மில் இன்று முஸ்லிம் இல்லை, கிறுஸ்தவரில்லை ஆகவே நமக்கு பயமுமில்லை நாம் இங்கே பாதுகாப்பாக இருக்கிறோம் என நினைத்துக்கொண்டிருப்போர் தெரிந்துகொள்ளுங்கள், நாம் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை. நாளை பெண்களுக்கு எதிராக அநியாயம் நடக்கலாம், இறைச்சி உண்ண தடை வரலாம், வருடாந்திர புனித யாத்திரைகள் போக தடைவிதிக்கப்படலாம், ஆங்கில மருத்துவம் வேண்டாம் நாட்டு வைத்தியம் போதும் என நம்மை தடுத்து நிறுத்தலாம், அத்தனை ஏன், டூத்பேஸ்டுக்கு பதிலாக பல்மஞ்சனத்தை தேய்க்க கட்டாயப்படுத்தலாம். ஹாய் ஹலோ சொல்லி கைகுலுக்க தடை விதித்து ஜெய் ஸ்ரீ ராம் என கூறச்சொல்லி நிர்பந்திக்கப்படலாம். இங்கே நாம் பாதுகாப்பாக இல்லை என்பதை உணர்ந்து மதபாகுபாடு பார்க்கும் சட்டங்களை புறக்கணித்து இந்தியாவை ஜீவனுள்ளதாக்குங்கள்" என குறிப்பிட்டிருந்தார். இந்த வரிகள் குஷ்வந்த் சிங் எழுதிய “தி எண்ட் ஆஃப் இந்தியா” என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார். 

சனா கங்குலியின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில், தயவுசெய்து இந்த எல்லா பிரச்சினைகளிலிருந்தும் சனாவை ஒதுக்கி வைக்கவும். இந்த பதிவு உண்மையல்ல. அரசியலில் எதையும் பற்றி தெரிந்து கொள்ளும் வயது அவருக்கு இல்லை“ என்று பதிவிட்டார். 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில் கங்குலியின் இந்த பதிவு அவர்களுக்கு மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, சனாவின் தைரியத்தை பாராட்டியும் உங்களின் அரசியலுக்காக அவரின் பதிவை கொச்சப்படுத்த வேண்டாம் என்றும் கங்குலியை விமர்சித்து வருகின்றனர். மேலும் உங்கள் பெண்ணுக்கு 18 வயதாகி விட்டது. உங்கள் பெண்ணிடமிருந்து ஒன்று அல்லது இரண்டு நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர். 

;