india

img

மூத்த வழக்குரைஞர்கள் ஆனந்த் குரோவர், இந்திரா ஜெய்சிங் இல்லங்களில் சிபிஐ ரெய்டு

உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர்களும், ‘லாயர்ஸ் கலெக்டிவ்’ அமைப்பின் தலைவர் ஆனந்த் குரோவர் மற்றும் அவரது மனைவியும் மூத்த வழக்குரைஞருமான  இந்திரா ஜெய்சிங் ஆகியோர் இல்லங்களில் இன்று (வியாழக்கிழமை) மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) ரெய்டு மேற்கொண்டிருப்பதற்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பாக அவர்கள் கையெழுத்திட்டு பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:
இன்று (11ஆம் தேதி) காலை மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மூத்த வழக்குரைஞர்களான ஆனந்த் குரோவர் – இந்திரா ஜெய்சிங் ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்று ரெயிடு மேற்கொண்டிருப்பதற்கு எங்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவர்களுக்குச் சொந்தமான மும்பை மற்றும் தில்லி ஆகிய பெருநகரங்களில் உள்ள இவர்களின் இல்லங்களில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவ்வாறு ஆனந்த் குரோவரையும், இந்திரா ஜெய்சிங்கையும் மிரட்டிப் பணியவைத்திடும் விதத்தில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இது அரசாங்கத்தின் மிருகத்தனமான மிரட்டல் நடவடிக்கை மற்றும் அதிகார துஷ்பிரயோகமே அன்றி வேறல்ல. இவ்விரு வழக்குரைஞர்களும் மனித உரிமைகள் மீறல் தொடர்பான வழக்குகளில் ஆஜராகிறவர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவர்கள் தங்கள் லாயர்ஸ் கலெக்டிவ் அமைப்பின் சார்பில் சிபிஐ மேற்கொள்ளும் புலனாய்வு விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிவந்தபோதிலும், இவர்களின் இல்லங்களில் இவ்வாறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இத்தகைய மிரட்டல் நடவடிக்கைகளை அதிகாரிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று உரிய அறிவுரைகளை இந்த அரசாங்கம் அளித்திட வேண்டும் என்று நாங்கள் வலுவாக வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு மாநிலங்களவை உறுப்பினர்கள் அந்தக் கடிதத்தில் கோரியுள்ளார்கள். இதில் மாநிலங்களவை உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், து. ராஜா, கபில் சிபல், ஆனந்த் சர்மா, உட்பட பலர் கையொப்பமிட்டிருக்கின்றனர்.

அறிஞர் பெருமக்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம்

இதேபோன்று ஒரு கடிதத்தை பிரபாத் பட்நாயக், இர்பான் ஹபிப், சி.பி. சந்திரசேகர், ஜெயதி கோஷ் உட்பட சுமார் நூறு அறிஞர் பெருமக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் கண்டனக் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மூத்த வழக்குரைஞர்களான ஆனந்த் குரோவர் – இந்திரா ஜெய்சிங் ஆகியோரின் லாயர்ஸ் கலெக்டிவ் அமைப்பு ஒரு மனித உரிமைகள் ஸ்தாபனமாகும். இது மும்பையில் பதிவு அலுவலகத்தைப் பெற்றிருப்பதுடன் புதுதில்லியில் அடிப்படையாக இயங்கி வருகிறது. 1986இல் திருமதி ஜெய்சிங், பம்பாய் உயர்நீதிமன்றத்தில் முதல் பெண் மூத்த வழக்குரைஞரானார். 2009இல் இந்தியாவின் கூடுதல் சொலிசிடர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட முதல் பெண் வழக்குரைஞருமாவார். திருமதி ஜெய்சிங், பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் ஒழிப்பு தொடர்பான ஐ.நா.ஸ்தாபனத்தில் ஓர் உறுப்பினராகவும் இருந்தார். 2005இல் பத்மஸ்ரீ பட்டம் பெற்றிருக்கிறார். இவரது சேவைகளுக்காக இவர் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

திரு குரோவர் 2008-2014 ஆண்டுகளுக்கிடையே ஐ.நா. ஸ்தாபனத்தின் சுகாதார உரிமைகளுக்கான அமைப்பில் சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருந்தார். இவர்களுடைய லாயர்ஸ் கலெக்டிவ் அமைப்பின் இடைவிடா முயற்சிகளின் காரணமாகத்தான் இந்தியாவில் எய்ட்ஸ் ஒழிப்புக்கான திட்டம் தீட்டப்பட்டது. இந்திய சமூகத்தில் விளிம்புநிலையில் வாழும் மக்களின் உரிமைகளுக்காக எண்ணற்ற வழக்குகளை லாயர்ஸ் கலெக்டிவ் மேற்கொண்டிருக்கிறது.

எனவே, இவ்வாறு ஆனந்த் குரோவர்  - இந்திரா ஜெய்சிங் ஆகியோரை மிரட்டி பணியவைத்திடக்கூடிய விதத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், பம்பாய் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நிலுவையிலிருப்பதால், லாயர்ஸ் கலெக்டிவ் மீது புனையப்பட்டுள்ள கிரிமினல் குற்றச்சாட்டுகளை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும், நாட்டின் சட்டங்களையும் அரசு எந்திரத்தையும் துஷ்பிரயோகம் செய்வதற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்றும், இந்த விஷயத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தன் கைகளில் எடுத்துக்கொண்டு, மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும், நாட்டின் குடிமக்களாகிய நாங்கள் கோருகிறோம் என்று அவர்கள் கையொப்பமிட்டிருக்கின்றனர்.

(ந.நி.)
 

;