புதுதில்லி:
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது அரசமைப்புச்சட்ட ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சீத்தாராம் யெச்சூரி மேலும் கூறியதாவது: மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்களின் டிவிட்டர் பதிவுடன் ஒருவர் ஒத்துப்போகிறாரா, இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் அதற்காக அவர்உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப் பட்டிருப்பது, பயங்கரமானது. (“alarming”.) அரசமைப்புச்சட்ட அதிகாரக்குழுமம் என்ற விதத்தில் உச்ச நீதிமன்றத்தின் பங்களிப்பினை நேர்மையாக விமர்சித்திருப்பதை (bona fide criticism), உச்சநீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு என்னும் வரம்புக்குள் கொண்டுவந்திருக்கிறது. அது இன்றைய உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகளையும் அணுகுமுறையையும் மெய்யாக விமர்சித்திருக்கிறது. இதுவரையில், இத்தகைய அறிக்கைகள் அரசமைப்புச் சட்டத்தின் 19(1)(a) பிரிவின்கீழ் பாதுகாக்கப்பட்ட உரையாக இருந்தது. அவை நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கருதப்படவில்லை. இந்தத் தீர்ப்பு இந்திய ஜனநாயகத்தில் உச்சநீதிமன்றத்தின் பங்களிப்பின் மீது வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விவாதத்தைத் தடுக்கும். இது,இந்திய அரசமைப்புச்சட்ட ஜனநாய கத்தைப் பலவீனப்படுத்திடும். இவ்வாறு யெச்சூரி தெரிவித்துள்ளார்.
து. ராஜா
“கருத்து வேறுபாடு கொள்வதும் ஒருவரின் கருத்துக்கு எதிராக நிலை எடுப்பதும் ஜனநாயகத்தின் ஓர் அங்கமாகும். உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகளைக் கேள்விக் குள்ளாக்கி, நான்குஉச்சநீதிமன்ற நீதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார்கள். இப்போதைய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அதுவும் அவமதிப்புஆகாதா? இடஒதுக்கீடு தொடர்பானசட்டங்களை நீர்த்துப்போகச் செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக பெரிய அளவில் கிளர்ச்சிகள் நடந்தபோது, அவையும் நீதிமன்றத்தை அவமதித்தது ஆகாதா?” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து. ராஜா கேள்விகளை தொடுத்துள்ளார். (ந.நி.)