india

img

சிவப்பு மைதானம் - இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்

1933  மாஸ்கோ சிவப்பு மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் அக்டோபர் புரட்சி தின அணிவகுப்பு (கோப்பு படம்)

மாஸ்கோவில் கிரெம்ளின் மாளிகைக்கு முன்னால் ஒரு பெரிய மைதானம் உண்டு. அதன் பெயர் ‘சிவப்பு மைதானம்’. அந்தப் பெயரை அர்த்தப்படுத்தும் விதத்தில் மே 1 அன்றும், நவம்பர் 7 அன்றும் அது ஒரு சிவப்புக் கடலாக மாறும். இராணுவ வீரர்களும் மக்களும் சின்னக் குழந்தைகளும் முதியவர்களும் என  எல்லோரும் அங்கே நடந்து செல்லுகிற காட்சி மிக எழுச்சிமயமாக இருக்கும்.

இந்த நவம்பர் 7 (1991) அது ஒரு சிவப்பு மைதானம் ஆகாமலிருந்தது. கோர்பச்சேவின் ‘சீர்திருத்தங்கள்’ அமலுக்கு வர ஆரம்பித்தபோது, ‘நவம்பர் புரட்சி ஆண்டு விழா கொண்டாட வேண்டியதில்லை’ என்று  முடிவு செய்யப்பட்டது. என்றாலும் மாஸ்கோ மக்களில் ஒரு பகுதியினர் அன்று முடிந்த வரைக் கொண்டாடினர். அதற்கு எதிராக ஒரு  பிரிவினரின் ஊர்வலமும் அன்று நடை பெற்றது. இந்தச் செய்தியைப் பத்திரிகைகளில்  நான் வாசித்தபோது இரண்டு நவம்பர் தினக் கொண்டாட்டங்கள் என் நினைவுக்கு வந்தன. 1960-ஆம் ஆண்டும், 1987-ஆம் ஆண்டும் நடைபெற்ற நவம்பர் தினக் கொண்டாட்டங்கள் அவை.

1960 நவம்பர் 7-க்குப் பிறகு மூன்று வாரங்களுக்கு மேல் நீண்ட உலக கம்யூனிஸ்ட் மாநாடு நடைபெற்றது. சீன-சோவியத் கம்யூ னிஸ்ட் கட்சிகளுக்கிடையே கடுமையான மோதல் ஏற்பட்ட மாநாடாக அது இருந்தது. உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிளவு பூர்த்தி யாவதன் முன்னோடியாக அது இருந்தது. 1987ஆம் ஆண்டிலோ,  நவம்பர் புரட்சியின் 70-ஆம் ஆண்டைக் கொண்டாடுவதற்காகக் கூட்டப்பட்ட உலக மாநாட்டுக்குப் பிறகு புரட்சித் தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. இரண்டு நாட்களும் புரட்சி தின ஊர்வலம் நடைபெறுகிற ஆறேழு மணிநேரம் வரை நான் நின்றவாறு ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நவம்பர் முதல் வாரம் மாஸ்கோ எவ்வாறு இருக்குமென்பதை இந்தியர்களாகிய நமக்கு  – ஊகிக்கக்கூட முடியாது. “மரம் கோச்சுன்ன மஞ்சு”(மரம்போல் உடலை விறைக்கச் செய்யும் பனி) என்கிற மலையாளப் பழமொழி முற்றிலும் அதற்குப் பொருந்தும் விதத்தில் கொடும் பனி. அந்தப் பனியில் ஆறேழு மணி நேரம் நான் திறந்தவெளி மைதானத்தில் நின்றாக வேண்டியிருந்தது. உள்ளாடைகள் உள்பட ஐந்தோ ஆறோ கோட்டுகளும் கால் உறைகளும் அணிந்து (இவை அத்தனையும் ரோமத்தால் நெய்யப்பட்டவை.) அந்தக் கொடும் பனியில் பயன்படுத்த வேண்டிய பூட்ஸ் மற்றும் ரோமத்தாலான கையுறை ஆகிய வற்றை மாட்டிக்கொண்டுதான் நான் நின்றி ருந்தேன்.

இரண்டாம் முறை நவம்பர் புரட்சி தினக் கொண்டாட்டத்தில் அவ்வாறு நான் நின்ற போது எனக்கு வயது 78 ஆகியிருந்தது. இனி  ஒருபோதும் நவம்பர் புரட்சி தின கொண்டாட்டத் தில் என்னால் பங்கேற்க இயலாது என்று தோழர் களிடம் சொன்னேன். அது நான் உத்தேசித்த அர்த்தத்தில் அல்ல. அது எனது கடைசி நவம்பர் தின கொண்டாட்டமாக முடிந்தது என்று இப்போது நினைக்கிறேன்.

“வரலாற்றுக்கு ஏற்பட்ட ஒரு பிழை” என்று நவம்பர் புரட்சியைப் பற்றி கம்யூனிஸ்ட்டின் எதிரிகள் கூறுகிறார்கள்.  நடக்கக் கூடாத ஒரு சம்பவம் 1917 நவம்பர் 7 அன்று மாஸ்கோவிலும் லெனின் கிராடிலும் நடந்தது என்பது அவர்களின் கருத்து. அந்தப் ‘பிழையை’ வரலாறு இப்போது திருத்திவிட்டது என்று, நவம்பர் புரட்சிக்கு எதிராக  அவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். அந்தப் பல்லவியை ஏற்றுப் பாடுவதற்குச் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின்  பொதுச்செய லாளராக இருந்த கோர்ப்பச்சேவும் முன் வந்தார் என்பதைத்தான் 1991 நவம்பர் 7 சுட்டிக்காட்டுகிறது.

ஆனால், கோர்பச்சேவும் அவரது கூட்டாளி களும் எவ்வளவுதான் நிராகரித்தாலும் நவம்பர் புரட்சி என்பது உலகெங்கும் உள்ள - முற்போக்கை விரும்புகிறவர்களின் இதயத்தில் மறையாமல் நிற்கும். எவ்வா றென்றால், அன்று தான் ஒரு புதிய மனித நாகரிகம் துளிர்த்து வளர ஆரம்பித்தது. வேலையின்மை, அன்றாடப் பொருள்களின் விலை உயர்வு முதலான - முதலாளித்துவச் சமுதாயத்தில் சர்வ சாதாரணமாக நிலவும் சாபங்கள் எதுவும் இல்லாததும், கல்வி,  மருத்துவ உதவி, குடியிருப்பு ஆகியவற்றுக் கான வசதி  முதலானவற்றை மக்கள் அனை வருக்கும் வழங்குவதுமான ஒரு புதிய நாகரிகமாக அது இருக்கும். ரஷ்யப் புரட்சிக்கு அடுத்து கிழக்கு ஐரோப்பாவிலும் சீனாவிலும் மற்ற சில நாடுகளிலும் புரட்சி தொடர்ந்தது. மனிதனை மனிதன் சுரண்டாத ஒரு சுதந்திர சமுதாயம் உருவானது.

ரஷ்யாவில் நவம்பர் புரட்சி நடைபெறும்போது எனக்கு எட்டு வயது. புரட்சியின் கதைகளைக் கூடக் கேட்க முடியவில்லை. நான்கைந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஒரு தேர்தல் சமயத்தில் வாக்கு சேகரிப்பதற்காகச் சிலர் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் பேசிக்கொண்டதிலிருந்துதான் ‘ரஷ்யா’வைப் பற்றி நான் முதன்முறையாகக் கேள்விப் பட்டேன். 

மலபார் பிரதேசத்தில் ஜமீன்தார்கள் மீது சில கட்டுப்பாடுகளை விதிக்கிற மசோதாவை தயாரித்தவரை தோல்வியுறச் செய்து ஜமீன்தாரின் நலனைப் பாதுகாக்க வேண்டு மென்று அவர்கள் கருதியிருந்தனர். அதற்கிடையேதான் ரஷ்யாவைப் பற்றிய அவர்களின் பேச்சு இருந்தது. ஜமீன்தார்கள் மீது கட்டுப்பாடு விதிப்பதன் மூலமும், விவசாயி களுக்கு அதிகார வாய்ப்புகள் வழங்குவதன் மூலமும் நமது நாட்டை “ஒரு ரஷ்யாவாக மாற்று வதற்கு” எதிர்  வேட்பாளர் முயற்சிக்கிறார் என்பதாக அவர்களின் பேச்சு இருந்தது.

அது முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு ஜவஹர்லால் நேரு எழுதிய “சோவியத் ரஷ்யா” என்ற சிறு நூல் ஒன்றை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சிறிய நூல்தான் என்னைச் சோசலிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் இட்டுச்சென்றது. இந்தியா சுதந்திரம் பெற்றால் எதிர்காலத்தை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்கிற விசயத்தில் மட்டுமல்ல, சுதந்திரம் பெறுவதற்கான வழி என்னவென்பதிலும் அன்று ஓர் இளைய காங்கிரஸ்காரனாக இருந்த எனக்கு வழிகாட்டியது சோவியத் ரஷ்யாவின் உதாரணம்தான். நாளடைவில் நான் 1936-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் அதிகாரப்பூர்வ உறுப்பினராக ஆனேன்.

அன்றுமுதல் இன்றுவரையும் நான் ஒரு கம்யூனிஸ்ட்டாகத் தொடர்கிறேன். நான் கட்சி உறுப்பினராகி 23 ஆண்டுகளுக்குப் பிறகு  (1959) முதன்முறையாக  சோவியத் யூனிய னுக்குச் சென்றேன். அதற்குப் பிறகு பலமுறை அங்குச் சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அந்தச் “சிவப்பு மைதானம்” வழியே காரில் சென்றிருக்கிறேன். ஒவ்வொரு பயணத்தின்போதும், லெனின் உடலைப் பதப் படுத்திப் பாதுகாத்து வைத்துள்ள இடத்திற்குச் சென்றிருக்கிறேன். ஒருமுறை மனைவியுடன் நான் இரண்டு மாதங்கள்வரை சோவியத் யூனியனில் இருந்துள்ளேன். அருங்காட்சி யகம், நாடக அரங்கம் முதலான காட்சிக் கூடங்களுக்குப் பலநேரங்களைச் செலவழித் திருக்கிறேன். சோவியத் கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் உள்படப் பல தோழர்களுடன் கருத்துப் பரிமாற்றம் நடத்தி யிருக்கிறேன். சோவியத் யூனியனுடன் அவ்வாறு உணர்ச்சிப்பூர்வமான உறவு எனக்கு  ஏற்பட்டிருந்தது.

இந்த நீண்டகால உறவுக்குப் பிறகு சோவியத் யூனியன் என்ற தேசமோ, அதன் புரட்சி தினக் கொண்டாட்டங்களோ இல்லாத ஒரு வருடம் கடந்துபோய்விட்டது. அதற்காக நான் அவநம்பிக்கை அடையவில்லை. ஏனென்றால், 74 ஆண்டுகள் சோவியத் யூனியன் நிலைப்பெற்றிருந்தது என்பதே முற்றிலும் மகத்தான ஓர் அனுபவமாகும். இந்த எழுபது ஆண்டுகளுக்கு மேல் சோவியத் மக்கள் காட்டிய அழிக்க முடியாத முன்மாதிரியாகும் அது. இன்றில்லை யென்றால் நாளை, அதுவும் இல்லையென் றால் அது முடிந்து, உலகம் முழுவதும் பின்பற்ற விருக்கும் ஒரு முன்மாதிரி அனுபவமாக சோவியத் ஒன்றியம் உள்ளது.

சீனாவிலும் மற்ற சில நாடுகளிலும் அந்த முன்மாதிரி இன்றும் தொடர்கிறது. இந்தியா உள்ளிட்ட இதர பல நாடுகளில் அந்த முன்மாதிரியின் மீது நம்பிக்கையை அர்ப்பணித்துள்ள பல லட்சக்கணக்கான தோழர்கள் உள்ளனர். அவர்களில் நானும் ஓர் ஆள் என்று உரத்தக் குரலில் அறிவிக்கிறேன்: “கோர்பச்சேவ் கைவிட்டாலும் நான் சோவியத் யூனியனைக் கைவிடவிடமாட்டேன்! என் தேசம் உள்பட உலகம் முழுவதும் எதிர்காலத்தில் உருவாகவிருக்கிற சமுதாயம்தான் 74 ஆண்டுகள் சோவியத் யூனியனில் நிலை பெற்றிருந்தது.”

சோவியத் யூனியன் சோசலிச சமூக நிர்மாணத்தில் யாதொரு தவறுகளும் ஏற்படவில்லையென்று இதற்கு அர்த்தமல்ல. பல தவறும் ஏற்பட்டுள்ளன. அதன் விளை வாக அந்த நாட்டின் ஆட்சியாளர்கள் மக்களிட மிருந்து தனிமைப்பட்டனர். அந்தத் தவறு களைத் திருத்துவதற்குக் குருஷ்சேவ் முதல்  கோர்பச்சேவ் வரை சோவியத் கட்சித் தலைவர்கள் முயன்றார்கள் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால், சோசலிச சமுதாய நிர்மாணத்தில் ஏற்பட்ட தவறும் இல்லாமற் செய்வது என்கிற பேரில்  கோர்பச்சேவ் ஆரம்பித்துவைத்த ‘சீர்திருத்தங் கள்’ சோசலிசத்தையே நிராகரிப்பதில் போய் முடிந்தது.

சோவியத் யூனியனில் நடந்தது போலவே  சீனாவிலும் சோசலிச சமுதாய நிர்மாணத் தில் தவறுகள் ஏற்பட்டன. அவற்றைத் திருத்து வதற்கு அந்நாட்டின் கட்சித் தலைவர்கள் நடவடிக்கைகள் மேற்கொண்டனர். அதே சமயம், சோசலிசத்தின் சாதனைகளை உறுதி யுடன் நிலைநாட்டிக் கொண்டே, ஏற்பட்ட தவறுகளை இல்லாமற் செய்வதற்கு அவர்கள் முயற்சிகள் மேற்கொண்டனர். அதனால்தான் அங்கு எதிர்ப்புரட்சி முயற்சி தோல்வியுற்றது. சோசலிசப் பாதையிலிருந்து கடுகளவுகூட விலகமாட்டோம் என்று சீனத் தலைவர்கள் உறுதிபடக் கூறினர்.

 கொரியா, வியட்நாம், கியூபா ஆகிய சோசலிச நாடுகளின் தலைவர்களும் அதையே உறுதி செய்கிறார்கள். சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் சீனாவிலும் மற்றும் எல்லா நாடுகளிலும் நடைபெற்ற சோசலிச சமுதாய நிர்மாணத்தின் அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டு இந்தியாவில் அதன்  பிரத்யேகத் தன்மைகளுக்கு ஏற்ப சோசலிச சமுதாய நிர்மாணத்தை நாங்கள் வடிவமைப்போம்.

தோழர் இ.எம்.எஸ்.அவர்கள் மலையாளத்தில் எழுதிய “காலத்தின்றெ நேர்க்குப் பிடிச்ச கண்ணாடி” என்ற கட்டுரைகள் தொகுப்பு நூலிலிருந்து.

தமிழில்: தி.வரதராசன்

;