india

img

அரசு ஊழியர்களின் அனைத்துவிதமான போராட்டங்களுக்கும் தடை! - அரசின் ஆணவப்போக்கிற்கு சிஐடியு கண்டனம்

புதுதில்லி, மார்ச் 23- அரசு ஊழியர்களின் அனைத்துவிதமான கிளர்ச்சிப் போராட்டங்களுக்கும் தடை விதித்திடக் கோரும் அரசின் ஆணவப்போக்கிற்கு சிஐடியு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிஐடியு-வின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் தபன்சென் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

அரசு ஊழியர்கள் எவ்விதமான கிளர்ச்சி நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என ஒன்றிய அரசாங்கம் ஆணவத்துடன் எச்சரித்துத் தடை விதித்திருப்பதற்கு, சிஐடியு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. இதுதொடர்பான அறிவுறுத்தல்களை பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மார்ச் 20ஆம் தேதியன்று ஒன்றிய அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்திக் கோருகிறது.

மேற்படி அறிவுறுத்தலில், அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம், ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு, தர்ணா போன்று கூட்டு வெளிப்பாட்டைத்  தெரிவித்திடும் எவ்விதமான வடிவத்தையும் மேற்கொண்டு அதில் அரசு ஊழியர்கள் பங்கேற்பதற்குத் தடை கோரியிருக்கிறது. இவை அனைத்தும் ஜனநாயக ரீதியான கிளர்ச்சி நடவடிக்கைகளாகும். இதுபோன்ற கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குக்கூட அரசாங்கம் எச்சரிக்கை விடுத்து அச்சுறுத்தியிருக்கிறது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் வழங்கியுள்ள உரிமைகள் மற்றும் பணி நிலைமைகளின் அடிப்படையில் அரசு ஊழியர்கள், தங்கள் நியாயமான உரிமைகளுக்காக ஜனநாயக ரீதியாகப் போராடுவதை தடை செய்வதற்கான எதேச்சாதிகார முயற்சியே தவிர வேறல்ல.

மோடி அரசாங்கம் பின்பற்றிவரும் தொழிலாளர் விரோத, அரசு ஊழியர் விரோத நாசகரக் கொள்கைகளை எதிர்த்து ஒன்றிய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசு ஊழியர்களும், தொழிலாளர்களும் நாட்டின் அனைத்துப்பகுதிகளிலும் பல்வேறுவிதமான போராட்ட நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதால் விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீளவும் அமல்படுத்த வேண்டும், என்னும் கோரிக்கை குறிப்பாக அரசு ஊழியர்கள் மத்தியில் இன்றையதினம் முன்னுக்கு வந்துள்ளது. இது மோடி அரசாங்கத்திற்கும், பல்வேறு மாநிலங்களில் ஆளும் பாஜக-வின் மாநில அரசாங்கங்களுக்கும் ஓர் அரசியல் சவாலாக எழுந்துள்ளது. இதன் காரணமாகத்தான் அரசு ஊழியர்களின் ஜனநாயக ரீதியான கிளர்ச்சிப் போராட்டங்களின் அனைத்து வடிவங்கள் மீதும் தடை விதித்திட வேண்டும் என்று  இவ்வாறு ஆணவத்துடன் ஓர் அறிவுறுத்தலை அது வெளியிட்டிருக்கிறது.  பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்ப விரும்பும் மாநில அரசுகளிடம், புதிய ஓய்வூதியத் திட்டத்திற்காக, ஊழியர்களிடம் இருந்து வசூலித்த தொகையை மீண்டும் அவர்களிடம் திருப்பித்தராமல் கொடூரமான முறையிலும், சட்டத்திற்குப் புறம்பான விதத்திலும் நிலையினை எடுத்திருக்கும் பின்னணியில்தான் மோடி அரசாங்கம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.

தேசிய கூட்டு நடவடிக்கைக் குழு (NJCA-National Joint Coucil of Action), பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீளவும் அமல்படுத்த வேண்டும் என்று கோரி, நாட்டின் மாவட்டத் தலைநகர் அனைத்திலும் பேரணி/போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கும் நிலையில் அதனை முறியடித்திட வேண்டும் என்ற முறையில்தான் மோடி அரசாங்கம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ள ஆவேசப் போராட்ட அலைகளை இத்தகைய உத்தரவுகளால் தடுத்து நிறுத்திட முடியாது. இவர்களின் போராட்டத்தின் விளைவாக நாட்டில் சில மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீளவும் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீளவும் பெற்றிட அரசு ஊழியர்கள் தங்கள் ஒன்றுபட்ட போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும், அவ்வாறு போராடும் ஊழியர்களுக்கு சிஐடியு தன் முழுமையான ஒருமைப்பாட்டை அளித்திடும் என்றும், சிஐடியு தெரிவித்துக்கொள்கிறது.

அரசு ஊழியர் – தொழிலாளர் ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் ஆட்சியாளர்களின் எதேச்சாதிகார ஆணவப் போக்கை முறியடித்திடுவோம். இவ்வாறு தபன்சென் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

(ந.நி.)

;