india

img

மோசமான ஏற்பாடு - செஸ் தொடரிலிருந்து வீராங்கனைகள் விலகல்

ஏற்பாடுகள் மிக மோசமாக உள்ளதால், தில்லியில் நடைபெறும் மகளிர் கிராண்ட் பிரிக்ஸ் சதுரங்க தொடரில் இருந்து விலகுவதாக கஜகஸ்தான் மற்றும் ஜெர்மனி வீராங்கனைகள் அறிவித்துள்ளனர்.

தில்லியில் கடந்த 24ஆம் தேதி தொடங்கி மார்ச் 6 வரை சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு சார்பில் மகளிர் கிராண்ட் பிரிக்ஸ் சதுரங்க போட்டி நடத்தப்படுகிறது.

இந்தப் போட்டியில் கலந்து கொள்ள தில்லிக்கு வந்த 12 வீராங்கனைகள் கவனிக்க ஆள் இல்லாமல் தவித்துப் போனார்கள்.

தில்லி வந்ததும் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. தங்கும் விடுதியில் அவர்களுக்கான அறைகள் தயாராகவில்லை. உணவு ஏற்பாடு செய்யப்படவில்லை. விமான நிலையத்திலிருந்து அதிகாரப்பூர்வ போக்குவரத்தும் ஏற்பாடு செய்யப்படவில்லை. எங்கே போகிறோம் என்று தெரியாமல் 12 வீராங்கனைகளும் தாங்களே வாடகை வாகனம் பிடித்து சென்றனர்.

இந்த மோசமான நிலையைப் பார்த்து வெகுண்டெழுந்த கஜகஸ்தான் நாட்டு செஸ் வீராங்கனை ஜன்சயா, தில்லி விமான நிலையத்துக்கு வந்ததிலிருந்து தங்களை யாருமே சந்திக்க வில்லை என்று சமூக ஊடகத்தில் வேதனையுடன் பகிர்ந்துள்ளார். போட்டியில் பங்கேற்க முடியாது என்று அவர் திரும்பிச் சென்று விட்டார். இதே போல் ஜெர்மனி நாட்டை சேர்ந்த எலிசபத் பேட்ஸ் என்ற வீராங்கனையும் அதிருப்தி அடைந்துள்ளார்.

இதுகுறித்து கஜகஸ்தான் வீராங்கனை ஜன்சயா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த ஆண்டு சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

கடந்த ஆண்டு சென்னையில் ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கு பெற்ற போட்டியை நடத்த முடிந்த குழுவால், தில்லியில் 12 பேர் கொண்ட போட்டியை நடத்த முடியவில்லை என்பது ஆச்சரியம்.

சென்னையில் இனிமையான நினைவுகள் எனக்கு கிடைத்தன. சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர். அது எங்களுக்கு உற்சாகத்தை அளித்தது. ஆனால், தில்லியில் எங்களை கவனிக்கவோ, கண்டுகொள்ளவோ ஆள் இல்லை.

செஸ் விளையாட்டில் எனது திறமை குறித்து அனைவரும் அறிவார்கள். காரணம் இல்லாமல் இந்த போட்டியிலிருந்து நான் வெளியேறவில்லை.’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

;