india

img

தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கை - 2019 : அமெரிக்க ஐவி லீக் பள்ளிகளின் தரம் ஏற்றுக் கொள்ளத் தக்கதா?

தேசிய கல்விக் கொள்கை வரைவு - 2019

உயர்கல்வி தொடர்பாக உள்ள பரிந்துரைகளின் மீதான கருத்துக்கள்

 

அமெரிக்க ஐவி லீக் பள்ளிகளின் தரம் ஏற்றுக் கொள்ளத் தக்கதா?  

உயர்கல்வியில் தரத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் தாராள கலைக் கல்வியைப் பற்றி புகழ் பாடுகின்ற இந்த வரைவறிக்கை, நாளந்தாவின் புகழ் பாடிய பிறகு, அமெரிக்க ஐவி லீக் பள்ளிகள்/கல்லூரிகள் மீது தன்னுடைய கவனத்தைத் திருப்பி ஆர்வம் காட்டுகின்றது. இந்த வரைவறிக்கைக்குள் மூன்று இடங்களில் இந்த ஐவி லீக் பள்ளிகள் குறித்த குறிப்புகள் காணப்படுகின்றன.

 

image.png

”இருபத்தோராம் நூற்றாண்டின் நவீன வேலைவாய்ப்புகளுக்கு இந்திய வகையிலான தாராள கலைக் கல்வி மிக முக்கியமானதாக இருக்கிறது.  இத்தகைய தாராள கலைக் கல்வி இன்று அதிக அளவில், எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் உள்ள ஐவி லீக் பள்ளிகளில், வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பாரம்பரியத்தை மீட்டெடுத்து தோன்றிய இடத்திற்கு இந்தியா கொண்டு வருவதற்கான நேரமிது” (பக்கம் 224) என்பதாக வரைவறிக்கை குறிப்பிடுகிறது. பண்டைய இந்தியாவில் வழங்கப்பட்டு வந்த தாராள கலைக்கல்வி இப்போது அமெரிக்க ஐவி லீக் பள்ளிகளில் வழங்கப்பட்டு வருவதாகக் கூறும் வரைவறிக்கை, அதனை இந்தியாவிற்கு மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

 

image.png

வரைவறிக்கையில் 231ஆம் பக்கத்தில், ”ஐவி லீக் கல்வி நிறுவனங்களில் தரப்படுகின்ற தாராள கலைக் கல்வி பல ஆண்டுகளாக அமெரிக்க வளர்ச்சியில் மிகப் பெரும் பங்காற்றி இருக்கின்றது. அதே போல அண்மைக் காலங்களில் சீனாவின் வளர்ச்சியில் சிங்குவா மிக முக்கிய பங்கை ஆற்றி வருகிறது. பல நூற்றாண்டுகளாக உயர்தர அறிஞர்களை உருவாக்கி வந்த நாளந்தாவைப் போன்று இவ்வாறான பல எடுத்துக்காட்டுகள் வரலாறு முழுக்க இருந்திருக்கின்றன.  அவற்றில் பலவும் உலக வரலாற்றை மாற்றி அமைத்திருக்கின்றன” என்று உலக வரலாற்றை மாற்றியமைத்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை நாளந்தாவில் தொடங்கி, ஐவி லீக் வழியாக சிங்குவாவில் இந்த வரைவறிக்கை முடித்து வைக்கிறது. 

 

image.png

”உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இருக்கின்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் செயல்படுவதற்கு அனுமதிக்கப்படும். அந்த நிறுவனங்கள் இநுதியாவில் நுழைவதற்குத் தேவையான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனைத்து ஒழுங்குமுறை, நிர்வாகம், உள்ளடக்கம் குறித்த விதிகள் இந்தியப் பல்கலைக்கழகங்களைப் போன்று இந்த பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தும்” என்று இந்தியாவிற்குள்ளாக அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் தங்களுடைய வளாகங்களைத் திறந்து கொள்ளலாம் என்று அளிக்கப்பட்டுள்ள இந்தப் பரிந்துரையோடு, ஐவி லீக் பள்ளிகளில் வழங்கப்படுகின்ற தாராள கலைக் கல்வி குறித்த வலியுறுத்தல் மிக எளிதாக இணைந்து கொள்கிறது.

 

image.png

”உலக வரலாற்றில் நாளந்தா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஐவி லீக் பள்ளிகளைப் போன்று தாராள கலைக் கல்வியைத் தரும் விதத்தில், பலதுறை சார்ந்த கல்வி மற்றும் ஆய்வு பல்கலைக்கழகங்கள் (சிறிய எண்ணிக்கையில் - ஐந்து) வரும் ஐந்தாண்டுகளில் இந்தியாவில் உருவாக்கப்படும். அனைவரையும் கவர்கின்ற இடத்தில் 2000 ஏக்கர் நிலம், பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான நிதியில் 50 சதவிகிதம் ஆகியவற்றைத் தரக்கூடிய மாநில அரசுகளின் திறனைப் பொறுத்து இந்த பல்கலைக்கழகங்களுக்கான இடம் தேர்வு செய்யப்படும்” (பக்கம் 231,232) என்று வரைவறிக்கை மீண்டுமொரு முறை நாளந்தா, ஐவி லீக் புராணம் பாடுகிறது. 2000 ஏக்கர் நிலம், 50% நிதி ஆகியவற்றை மாநில அரசுகள் கொடுத்தால் மட்டுமே அவ்வாறான உலகப் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் அமைக்கப்படும் என்று கூறி மாநிலங்களைத் தவிர்த்து விட்டு, அயல்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கவே இந்த வரைவறிக்கை பரிந்துரைப்பதாகத் தெரிகிறது.

இந்த வரைவறிக்கை தயாரிப்புக் குழுவால் போற்றிப் பாடப்படுகின்ற இந்த ஐவி லீக் பள்ளிகள் என்றால் என்ன? அவை எங்கே இருக்கின்றன? அவை ஆற்றி வருகின்ற கல்விப் பணிகள்தான் என்ன? பார்க்கலாம். . .

 

image.png

ஐவி லீக் என்பது வடகிழக்கு அமெரிக்காவில் உள்ள எட்டு தனியார் கல்வி நிறுவனங்களின் விளையாட்டு அணிகளை உள்ளடக்கிய அமெரிக்க கல்லூரி தடகளக் குழுவாகும். ஐவி லீக் என்ற சொல் இப்போது விளையாட்டு சூழலுக்கு அப்பாற்பட்டு, அந்த எட்டு பள்ளிகளும் இணைந்த மேல்தட்டு மக்களுக்கான கல்லூரிகளின் குழு என்பதாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரவுன் பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம், கார்னெல் பல்கலைக்கழகம், டார்ட்மவுத் கல்லூரி, ஹார்வர்ட் பல்கலைக்கழகம், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம் ஆகிய எட்டு கல்வி நிறுவனங்கள் இந்த ஐவி லீக்கில் இருக்கின்றன. 1933இல் இருந்தே இந்த வார்த்தை புழக்கத்தில் இருந்து வந்தாலும், 1954ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் தேசிய கல்லூரி தடகள மாநாட்டின் போதுதான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. விளையாட்டிற்காக உருவாக்கப்பட்ட இந்த குழு, பின்னர் கல்லூரிகளைக் குறிப்பதற்கான சொல்லாக மாறிப் போனதுதான் உண்மை.

அமெரிக்காவில் உள்ள இந்த எட்டு கல்வி நிறுவனங்களைத் தவிர, வேறு மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களே இல்லையா? என்ற கேள்வி உடன் எழுகின்றது. நியாமான கேள்விதான். இதற்கான பதில் 2019ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கான குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (QS) உலகத் தரவரிசை பட்டியலில் இருந்து கிடைக்கின்றது. இந்த தர வரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் ஐவி லீக் பல்கலைக்கழகமான ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மட்டுமே மூன்றாவது இடத்தைப் பெற்றிருக்கின்ற நிலையில், மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் முதலிடத்தையும், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்தையும், கால்டெக் நிறுவனம் நான்காவது இடத்தையும், சிகாகோ பல்கலைக்கழகம் ஒன்பதாவது இடத்தையும் பெற்று ஐவி லீக் சாராத நான்கு பல்கலைக்கழகங்கள் இந்த முதல் பத்து பல்கலைக்கழகங்களின் பட்டியலுக்குள் இருக்கின்றன. முதல் 50 இடங்களுக்குள் வருகின்ற அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஹார்வர்ட், பிரின்ஸ்டன், கார்னெல், யேல், கொலம்பியா, பென்சில்வேனியா என்று இந்த ஐவி லீக் பட்டியலில் உள்ள ஆறு பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றிருந்த போதிலும், மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், கால்டெக் நிறுவனம், சிகாகோ பல்கலைக்கழகம் உள்ளிட்டு மிக்சிகன் பல்கலைக்கழகம் (20), ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் (21), ட்யூக் பல்கலைக்கழகம் (26), கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்ளி (27), வடமேற்கு பல்கலைக்கழகம் (34), கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சலெஸ் (32), கலிபோர்னியா பல்கலைக்கழகம், சாண்டியாகோ (41), நியூயார்க் பல்கலைக்கழகம் (43) கார்னெகி மெல்லன் பல்கலைக்கழகம் (46) என்று 13 அமெரிக்க பல்கலைக்கழகங்களும் தங்களுடைய இடத்தைப் பிடித்திருக்கின்றன. எனவே தரம் குறித்து வெளியிடப்பட்டு வருகின்ற தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் பார்த்தால் இந்த ஐவி லீக் பல்கலைக்கழகங்கள் தவிர உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள் அமெரிக்காவிலேயே ஏராளமாக உள்ளன என்ற உண்மை தெரிய வருகிறது. 

இந்த ஐவி லீக் கல்வி நிறுவனங்கள் ஆற்றி வருகின்ற கல்விப் பணிகள் என்ன? ஐவி லீக் பள்ளிகள்/கல்லூரிகள் குறித்து அவற்றில் தரமான தாராள கலைக் கல்வி வழங்கப்படுவதாக கட்டியெழுப்பப்பட்டிருக்கும் இந்த சித்திரம் உண்மையானதுதானா? இந்த கேள்விகளுக்கான பதில்கள் சில மாதங்களுக்கு முன்பாக, 2019 மார்ச் 23 அன்று கிரேக் ஸ்மித் என்ற மாணவரால் யூடியூபில் (https://www.youtube.com/watch?v=REVmODOCMSU) வெளியிடப்பட்ட காணொளியில் இருந்து கிடைக்கப் பெறுகின்றன. உயர்தரத்தில் இருப்பதாக கூறிக் கொள்ளும் எந்தவொரு கல்வி நிறுவனமும் மாணவர்களின் மனநலம் குறித்த அக்கறையற்றவையாகவே இருக்கின்றன என்று குறிப்பிடும் கிரேக் ஸ்மித், குறிப்பாக இந்த ஐவி லீக் பள்ளிகளில் சேர்ந்து பயில்வது குறித்து மாணவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை கலந்த அறிவுரை வழங்குகிறார்.

யூடியூப் போன்ற தளங்களில் சொல்லப்படாத, சொல்ல வேண்டிய விஷயங்களை தன்னுடைய வீடியோவில் சொல்லப் போவதாக கூறும் கிரேக் ஸ்மித், யாராவது எனக்கு இதைப் போன்ற வீடியோவை தயாரித்துக் கொடுத்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும் என்று வருத்தப்படுகிறார். ஒரு வாரத்தில் கிடைக்கின்ற 40 மணி நேரத்தில் வகுப்பு மற்றும் பிற வேலைகளுக்காக மட்டும் 35 மணி நேரம் செலவிட வேண்டியிருப்பதால், தனிப்பட்ட முறையில் தனக்கென்று சிறிது நேரம்கூட ஒதுக்கி கொள்ள முடிவதில்லை. ஒவ்வொரு வகுப்பிற்காக தரப்படுகின்ற வீட்டுப் பாடங்கள் அபத்தமானதாக இருப்பதாகக் கூறும் கிரேக் ஸ்மித், வீட்டுப் பாடங்களை எழுதுவதற்கு சராசரியாக ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் தேவைப்படுவதாகவும், இதனையும் சேர்த்தால் வகுப்பறை மற்றும் பிற செயல்பாடுகள் அனைத்துக்குமாக வாரத்திற்கு 70 மணி நேரம், அதாவது நாளொன்றுக்கு பத்து மணி நேரம் தேவைப்படுவதாகவும், படிப்பிற்காக மட்டும் இந்த அளவிற்கான நேரத்தை தினமும் செலவிடுவது கல்லூரி மாணவர் ஒருவருக்கு இயலாத காரியமாக இருப்பதாகவும்,  ஐவி லீக் தருகின்ற இத்தகைய வேலைப் பளு மாணவர்களை மனதளவில் முழுமையாகப் பாதிக்கும் விதத்தில் இருப்பதாகவும் குற்றம் சுமத்துகிறார்.

டைகர் கன்பெஷன்ஸ் என்ற தனியார் முகநூல் பக்கத்தில் பிரின்ஸ்டன் மாணவர்கள் சிலர் தங்களுக்கு ஏற்பட்டுள்ள துயரங்களைப் பகிர்ந்து கொண்டிருப்பதாகவும், தங்களை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாத இந்த மாணவர்கள் ’திருப்தியில்லை’, ’வாயடைத்துப் போய் இருக்கிறேன்’, ’சோகமாக இருக்கிறேன்’, ’மனச்சோர்வுடன் இருக்கிறேன்’, ’தனிமையை உணர்கிறேன்’, ’வேலைப்பளு அதிகமாக இருக்கிறது’ என்பது போன்று தங்களுடைய உனர்வுகளை ஒப்புதல் வாக்குமூலங்களாகப் பதிவு செய்திருப்பதாகவும் கூறுகிறார்.

ஆடம்பர உடைகளை அணிந்து கொண்டு தங்களுடைய நிறுவனத்தில் பணி புரிவதற்கான மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக வருகின்றவர்கள், அருமையான இரவு உணவை அளித்து விட்டு, கல்லூரியில் இருந்து வெளியேறியதுமே பெறப் போகின்ற ஆறு இலக்க ஊதியத்தைப் பற்றி மாணவர்களிடம் பேசும் போது மிக முக்கியமான நபராக, வெற்றி பெற்று விட்ட ஒருவராகவே மாணவர்கள் தங்களை உணர்கின்றார்கள். ஆனால் உண்மையில் செயல் நோக்கம் குறித்த ஊக்கமளிக்கப்படாதவர்களாகவும், படைப்பாற்றல் மற்றும் விமர்சன சிந்தனை திறனற்றவர்களாகவும் இந்த மாணவர்கள் இருப்பதைக் காரணம் காட்டி சராசரியை விட மிகக் குறைந்த ஊதியம் தரும் வகையிலேயே அவர்களது விண்ணப்பங்களை நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளும் போது, அதே மாணவர்கள் தங்களுடைய ஆற்றலை இழந்து, வாழ்க்கைக்கான குறிக்கோளைச் சரியாகப் பின்பற்றவில்லை என்பதாக உணர்கிறார்கள் என்கிறார்.

பணம் சம்பாதிப்பதைத் தவிர, யாருக்குமே உதவாத மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள் உலகிலேயே ’தலைசிறந்த’ அறிவாளிகளை தங்களுக்குள் இழுத்து வைத்துக் கொள்வது குறித்து ஆச்சரியமடையும் கிரேக் ஸ்மித், வாழ்க்கையில் தாங்கள் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதையே சரியாகக் கண்டுபிடிக்க நேரமில்லாத இந்த மாணவர்களிடம் தொழில் நிறுவனங்கள் இத்தகைய தொழில்வாய்ப்பைத் தள்ளி விடுவதை ஐவி லீக் கல்வி நிறுவனங்கள் மிகவும் எளிதாக்கித் தருகின்றன என்கிறார்.

ஐவி லீக் பள்ளிகளின் நடைமுறைகள் மாணவர்களின் நேரத்தை எவ்வாறு ஆக்கிரமித்துக் கொள்கின்றன, மாணவர்களின் மனநலம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது பற்றி கிரேக் ஸ்மித் தெளிவாக இந்த வீடியோவில் விளக்கி, மேல்தட்டுக் கல்வி, தரம், வேலை வாய்ப்பு என்று ஏமாந்து விட வேண்டாம் என்று மானவர்களைக் கேட்டுக் கொள்கிறார். ஐவி லீக் பற்றி இதே போன்ற கருத்துக்களைக் கொண்ட தகவல்கள் இணையதளத்தில் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. 

இந்த ஐவி லீக் பள்ளிகள் குழந்தைகளை எவ்வாறு உருவாக்குகின்றன, இந்த பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் அதிகாரத்திற்கு அடிபணிந்து போகின்றவர்களாக, சமூக உணர்வற்றுப் போனவர்களாக எவ்வாறு மாறி விடுகிறார்கள் என்பதையும், இவ்வாறு மாற்றமடைவது பற்றி எந்தவொரு குற்ற உணர்வும் இல்லாது அமைப்பு சார்ந்து மட்டுமே செயல்படுகின்றவர்களாக இந்தக் குழந்தைகள் மாற்றப்படுவது குறித்து ’அமைப்பு சார்ந்திருக்கும் குழந்தைகள்’ என்ற தலைப்பில் நீண்ட கட்டுரையொன்றை அட்லாண்டிக் இதழில் டேவிட் புரூக்ஸ் என்பவர் 2001ஆம் ஆண்டிலேயே எழுதியுள்ளார்.

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திற்குச் சென்று அங்கிருக்கும் மானவர்களுடன் சில நாட்களாக நேரடியாக உரையாடிய புரூக்ஸ், அந்த மாணவர்கள் தினமும் விடியற்காலையில் குழுப்பயிற்சி, காலையில் வகுப்புகள், விடுதி ஆலோசகருக்கான கடமை, மதிய உணவு, குழுவாக இருந்து படிப்பது, பிற்பகல் வகுப்புகள், ட்ரெண்டனில் உள்ள பின்தங்கிய குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தல், கேப்பெல்லா பயிற்சி, இரவு உணவு, படிப்பு, அறிவியல் ஆய்வகம், வழிபாடு, உடற்பயிற்சி, மேலும் சில மணிநேரங்கள் படிப்பு என்று அதிகாலை முதல் நள்ளிரவு வரை படிப்பிற்காக தங்களுடைய நேரத்தைச் செலவிடுவதைக் கண்டறிந்தார். பத்திரிக்கை படிக்கின்ற, அரசியல் அறிந்திருக்கின்ற, போராட்டங்கள் தேவையென்று கருதுகின்ற மாணவர்களை வளாகத்திற்குள் காண முடியவில்லை என்பதை அறிந்து திடுக்கிடுகிறார்.

குழுவாகச் செயல்பட விரும்புகின்ற, ஆனாலும் நெருங்கிய நட்புடன் பழகாதவர்களாக, சாப்பாட்டு மேசைகளில் விவாதங்களுக்கு இடம் அளிக்காதவர்களாக, அதிக ஊதியம் என்ற கேரட்டின் பின்னால் ஓடுவதற்காக கடுமையாக உழைப்பவர்களாக, மாணவராக இருப்பதையே தொழில்முறை நேர்த்தியுடன் செய்பவர்களாக, சுயமுன்னேற்றம், தன்னுடைய தகுதிகளை அதிகரித்துக் கொள்வது ஆகியவையே  அறிவு செறிவூட்டலுக்கான வழி என்று கருதுபவர்களாக, ஆசிரியர்கள் உள்ளிட்ட யாரையும் எதிர்த்துப் பேசாதவர்களாக, அதிகாரத்திற்கு அடிபணிந்து போகின்றவர்களாக, அடிமை என்று வெளியே இருப்பவர்கள் சொல்லக் கூடிய வகையில் கேள்விகளின்றி எதையும் செய்து முடிப்பவர்களாக, ஒட்டு மொத்த அமெரிக்க இளைஞர்களைப் பிரதிபலிக்காதவர்களாக, விளையாட்டு, தொலைக்கட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் நேரம் செலவழிப்பதைக் குறைத்து படிப்பதற்கான நேரத்தை அதிகரித்துக் கொண்டிருப்பவர்களாக, சுயநலம் கொண்டவர்கள், சட்டம் மற்றும் அதிகாரிகளை மதிக்காதவர்கள், தவறு செய்யும் அரசியல்வாதிகள், கண்டிக்காத பெற்றோர்கள், குற்றவாளிகளின் உரிமைகள் குறித்து அதிகம் அக்கறை செலுத்துகின்ற நீதிமன்றங்கள் போன்ற ஐந்து விஷயங்கள் குறித்து அதிகம் கவலைப்படுபவர்களாக, பொதுநலனுக்காக தெருவில் அணிவகுத்துச் செல்வதை குற்ற உணர்ச்சியுடன் அணுகுபவர்களாக, கல்லூரி வாழ்க்கை திணறச் செய்வதை அறிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கின்ற அந்த மாணவர்கள் மகிழ்ச்சியும், ஆர்வமும் கொண்டவர்களாக வளாகத்தில் இருப்பதைக் கண்டு புரூக்ஸ் அதிர்ச்சி அடைகிறார்.  அடுத்த தலைமையை வளர்த்தெடுக்கும் பள்ளிகள், கல்லூரிகளில் இனிமேல் கோபம் கொண்ட புரட்சியாளர்கள், நம்பிக்கையற்று சோர்வுற்றிருப்பவர்கள் அல்லது வெறுப்பு மனப்பான்மை கொண்டவர்களைக் காண முடியாது. இவ்வாறான அமைப்பு சார்ந்து இயங்குகின்ற குழந்தைகளை மட்டுமே பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இனி காண முடியும் என்கிறார்.

இவ்வாறான எதிர்வினையாற்ற முடியாத குழந்தைகளையே திட்டமிட்டு உருவாக்கி ஐவி லீக் போன்ற பள்ளிகள் தொழில் நிறுவனங்களிடம் ஒப்படைத்து வருகின்றன. மற்றெந்த வகையிலும் பிற கல்வி நிறுவனங்களைக் காட்டிலும் தரத்தில் உயர்ந்ததாக இல்லாத இந்த பள்ளிகள் மாணவர் சேர்க்கையில் பாரபட்சம் காட்டுபவையாக, ஊழல் நடவடிக்கைகளில் திளைத்தவையாக இருப்பதும் கண்கூடாகத் தெரிய வந்திருக்கிறது. அண்மைக் காலங்களில் திறனறி தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு, விளையாட்டு ஒதுக்கீட்டின் மூலம் கல்லூரிகளில் நுழைவதற்கு என்று லட்சக்கணக்கான டாலரில் லஞ்சம் கொடுத்த பெற்றோர்களை ஊக்குவித்த நிகழ்வுகளும் இத்தகைய பள்ளிகளில் நடந்தேறி இருக்கின்றன. அதிக ஊதியம் பெறலாம் என்ற ஒரே காரணத்தைக் காட்டி அதிகம் செலவு செய்து தங்கள் குழந்தைகளை இந்த கல்வி நிறுவனங்களுக்குள் சேர்த்து விடுவதற்கான போட்டிகளில் இத்தகைய கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களை இறக்கி விட்டிருக்கின்றன. மூன்று வயதிலேயே தங்கள் குழந்தைகளை மழலைப் பருவ பள்ளிகளில் சேர்ப்பதற்கான கடும் போட்டியில் இறங்கிய நியூயார்க் பெற்றோர்களைப் பற்றிய ஆவணப் படமாக 2008ஆம் ஆண்டு வெளியான  ’நர்சரி யுனிவர்சிட்டி’ என்ற திரைப்படமே இதற்கு தகுந்த சாட்சியாக நிற்கிறது.

ஐவி லீக் பள்ளிகளை முன்மாதிரியாகக் கொண்டு இங்கே நடத்தப்படப் போகின்ற பள்ளிகள் யாருக்கானவையாக இருக்கப் போகின்றன என்பதும், அவை யாரையெல்லாம் கட்டம் கட்டி வெளியே நிறுத்தி வைக்கப் போகின்றன என்பதும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக வேதக் கல்வி, குருகுலக் கல்வி என்று பிதற்றுகின்ற வேலையையும் இந்தக் கல்விக் கொள்கை வரைவு மறைமுகமாக முன்வைப்பது ஏதோ உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கிறது. இத்தகைய கல்வி நிறுவனங்களை முன்மாதிரியாக காட்டி இந்திய எதிர்காலக் கல்வியை கட்டமைக்கப் போவதாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த வரைவறிக்கை உண்மையில் வேதனை அளிப்பதாகவே இருக்கிறது.

கட்டுரையாளர்: முனைவர் தா.சந்திரகுரு,

விருதுநகர்.

 

 

;