india

img

வருமான வரித்துறை சோதனைகள் குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை

வருமானத் வரித்துறை சோதனை தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் மற்றும் வருவாய் துறை செயலாளர் ஆகியோரை தேர்தல் ஆணையம் நேற்று நேரில் அழைத்து முக்கிய ஆலோசனை நடத்தியது.

கடந்த மார்ச் 10-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதைத் தொடர்ந்து டெல்லி, மத்திய பிரதேசம், கர்நாடகா, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து சோதனை நடத்தப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் வருவாய் துறைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதில், "பாரபட்சமின்றி நடுநிலையாக செயல்பட வேண்டும். வருமான வரிச் சோதனைக்கு முன்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்தப் பின்னணியில் தேர்தல் ஆணையத்தின் அழைப்பின்பேரில் மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் பி.சி.மோடி, வருவாய் துறை செயலாளர் ஆஜய் பூஷண் பாண்டே ஆகியோர் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு நேற்று சென்றனர். தற்போது நாடு முழுவதும் நடைபெறும் வருமான வரிச் சோதனைகள் தொடர்பாக இருவரிடமும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தினர்.


;