india

img

2022-இல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 4% அதிகரிப்பு - என்.சி.ஆர்.பி தகவல்

கடந்த 2022-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 4% அதிகரித்துள்ளதாக என்.சி.ஆர்.பி அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. 
கடந்த 3 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 2020இல் 3.71 லட்சம் வழக்குகளும், 2021இல் 4.28 லட்சம் வழக்குகளும், 2022இல் 4.45 லட்சம் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் காணப்படும் மாநிலமாக உத்தரப்பிரதேசம் (65,743 வழக்குகள்) முதல் இடத்திலும், மகாராஷ்டிரா (45,331 வழக்குகள்) இரண்டாம் இடத்திலும், ராஜஸ்தான் (45,058 வழக்குகள்) மூன்றாம் இடத்திலும் உள்ளன.
மெட்ரோ நகரங்களில் தில்லியில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் காணப்படுகின்றது. 2022-இல் 14,158 வழக்குகளும், 2021-இல் 13,982 வழக்குகளும், 2020-இல் 9,782 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
பெண்களுக்கு எதிராக கணவர் அல்லது அவரது உறவினர்கள் கொடுமை, பெண்கள் கடத்தப்படுவது மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற குற்ற வழக்குகள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
2022-இல் கணவர் அல்லது அவரது உறவினர்கள் கொடுமை தொடர்பாக 1.4 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 3% அதிகமாகும்.
அதேபோல், பெண்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 88,273 வழக்குகள் பதிவாகியுள்ளன. 31,516 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. பாலியல் வன்கொடுமை வழக்குகள் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 3,692 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதைத் தொடர்ந்து, மத்தியப்பிரதேசத்தில் 3,092 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 2,904 வழக்குகளும் பதிவாகியுள்ளன. அதேபோல் தலைநகர் தில்லியில் 1,212 வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது என்.சி.ஆர்.பி அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. 
 

;