india

img

பிரதமர் மோடி அறிவுரைப்படி செயல்படும் தேர்தல் ஆணையம் - சந்திரபாபு நாயுடு விளாசல்

பிரதமர் மோடியின் அறிவுரைப்படி தேர்தல் ஆணையம் செயல்படுவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புகார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 11-ம் தேதி, ஆந்திராவில் உள்ள 25 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடைபெற்றது. 

இத்தேர்தல் வாக்குப்பதிவின் போது, சுமார் 400 வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தாமதம் ஆனது. இதனால் சில பகுதிகளில் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நீடித்தது. இதை அடுத்து, காலை 9.30 மணிவரை வாக்குப்பதிவு தொடங்காத இடங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில், சந்திரபாபு நாயுடு இன்று டெல்லிக்கு சென்று இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோராவை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். அதில், ஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிவர இயங்காதது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தேர்தலின்போது பிரச்சினை செய்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

பின்னர் செய்தியாளர்களை சந்த அவர் கூறியதாவது: “தேர்தல் ஆணையத்தின் திறமையற்ற செயல்பாடுகளால், வாக்காளர்கள் வாக்களிக்காமல் வீடு திரும்பினர். தேர்தல் ஆணையம், அதன் பிரதான கடமையின் மீது கவனம் செலுத்துவதற்கு பதிலாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் அற்பத்தனமான புகார்களை ஏற்று தேர்தல் அதிகாரிகளை மாற்றுவதில் மிகுந்த ஆர்வம் காட்டியது.

தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பு. ஆனால், பிரதமர் மோடியின் அறிவுரைப்படி செயல்படுகிறது.தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் மத்திய அரசு தலையிடுகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறு குறித்து புகார் மனு அளித்தோம்.” இவ்வாறு சந்திரபாபு கூறினார்.


;