india

img

வலுவடையும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை..... பெகாசஸ் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அவசியம்.....

புதுதில்லி:
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் வலுவாக சிக்கியுள்ள மோடி அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளும் அரசியல் வேறுபாடின்றி ஒன்றுபட்டுள்ளன.நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்கியதிலிருந்து தொடர்ந்து இந்தப் பிரச்சனை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இந்நிலையில் பெகாசஸ் வேவு மென்பொருளை மோடி அரசு, தனது இழிவான அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தியது குறித்து விவாதிக்க வும், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தவும் வலியுறுத்தி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் ஆவேசமிக்க போராட்டம் நீடித்து வருகிறது.இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் வேவு மென்பொருள் மூலம் இந்தியா வில் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதி, ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்ட 142 பேரின் செல்போன் பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. பிரான்ஸை சேர்ந்த ஃபர்பிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டிஇன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து இந்த ஒட்டுக் கேட்பைக் கண்டுபிடித்துள்ளனர். இச்செய்தியை சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டேஆகிய நாளேடுகள் வெளி யிட்டுள்ளன.பெகாசஸ் விவகாரத்துடன், தில்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் இடைவிடாமல் போராடிவரும் பிரச்சனையும் தீவிரமடைந்துள்ளது. வேளாண் சட்டங்களை முற்றாக ரத்து செய்யவலியுறுத்தியும் நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மக்களவையில் சு.வெங்கடேசன் ஒத்திவைப்பு தீர்மானம்
மக்களவையில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை வலியுறுத்தி காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு பிரச்சனையை எழுப்பி வருகின்றன.மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் இப்பிரச்சனை தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் அளித்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பு
இந்நிலையில் செவ்வாயன்று இப்பிரச்சனை தொடர்பாக மக்களவையின் அனைத்து எதிர்க்கட்சிகளும் முதல் முறையாக நேரில் சந்தித்து விவாதித்துள்ளனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, திமுக சார்பில் கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசன், ஏ.எம்.ஆரிப் மற்றும் சிவசேனா, என்.சி.பி., சமாஸ்வாதி உள்ளிட்டஅனைத்து எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள் ளனர். இக்கூட்டத்தில், நாடாளுமன்ற மக்களவையில் எத்தகையஒருங்கிணைப்புடன் செயல்படுவது என்று விவாதிக்கப்பட்டுள் ளது.

ஜனாதிபதிக்கு கடிதம்
இதனிடையே மாநிலங்களவையில் உள்ள ஏழு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் ஒன்றுபட்டு, பெகாசஸ் மற்றும் விவசாயிகள் பிரச்சனைகளை விவாதிக்க வேண்டும் என்றும் பெகாசஸ் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், இப்பிரச்சனையில் அரசுக்கு அறிவுரை வழங்குமாறு குறிப்பிட்டும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு கடிதம் அனுப்பியுள்ள னர். இக்கடிதத்தில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ், சிரோமணி அகாலிதளம், தேசியமாநாட்டுக் கட்சி, என்சிபிஉள்ளிட்ட கட்சிகளின் தலைவர் கள் கையெழுத்திட்டுள்ளனர். 

ஆறாவது நாளாக...
முன்னதாக மக்களவை செவ்வாய்க்கிழமையன்று காலை கூடியதும் சபாநாயகர் ஓம் பிர்லா,“நீங்கள் உங்கள் பிரச்சனைகளை எழுப்ப விரும்பினால் நான் அதற்கு வாய்ப்புதருகிறேன். அர சாங்கத்திடம் இதுதொடர்பாகப் பேசச் சொல்கிறேன்,” என்றார். அதனைத்தொடர்ந்து கேள்வி நேரம் தொடங்கியது. மக்களவையில் சிவசேனைக் கட்சியைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் பூபால் சிங் மழையின் காரணமாக பயிர்ச்சேதம் ஏற்பட்டிருக் கும் பிரச்சனையைக் கொண்டுவந்தார். இதற்குப் பதிலளித்த வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இழப்பீட்டைத் தீர்மானித்திட உரிய நடைமுறை பின்பற்றப்படும் என்றார். பின்னர்அவை 11.45 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.பின்னர் அவை 11.45 மணிக்குக் கூடிய பின்னர் சில நிமிடங்களுக்குப்பின் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 3 மணி, 3.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் புதன்கிழமையன்று வரை ஒத்தி வைக்கப்பட்டது.

பி.ஆர்.நடராஜன் திருத்தம்
மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், 2021 அத்தியாவசியப் பாதுகாப்பு சேவைகள் சட்டமுன்வடிவு (Essential Defence Services Bill,2021)க்கு சில திருத்தங்களைத் தாக்கல் செய்தார்.

மாநிலங்களவையில்...
இதே போன்றே மாநிலங்களவையில் அவைத்தலைவர் வெங்கய்யா நாயுடு முன்னாள்உறுப்பினர் வாசிம் அகமது, மொரிசியஸ் முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அனிருத் ஜகனாத், ஜாம்பியாவின் நிறுவனத் தந்தை என அழைக்கப்படும் டாக்டர் கென்னத் டேவிட் புச்சிஸ்யா கவுண்டா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசித்தார். இதன்பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெகாசஸ் விவகாரம், வேளாண் சட்டங்கள் ரத்து தொடர்பாக கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி, முழக்கங்கள் எழுப்பினர். “இவ்வாறு காட்டக்கூடாது” என்று அவைத்தலைவர் கூறினார். பின்னர் அவையை 12 மணி வரையில் ஒத்தி வைத்தார்.

மறுபடியும் 12 மணிக்கு மாநிலங்களவை கூடியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் தொடர்ந்ததால் அவை மீண்டும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.  பின்னர் அவை 3 மணிக்குக் கூடியபோது அரசுத்தரப்பில் பாஜக உறுப்பினர் ஜக்லாசிங் லோகன்வாலா கடல் உதவிகள் ஊடுருவல் சட்டமுன்வடிவு (Marine Aids Navigation Bill) மீது உரையாற்றி விவாதத்தை முடித்து வைத்தார். இந்தச் சட்டமுன்வடிவுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர் ஆதரவு தெரிவித்தார்.பின்னர் அவை 3 மணி வரைஒத்திவைக்கப்பட்டது. பின்னர் கடல் உதவிகள் ஊடுருவல் சட்டமுன்வடிவு மீதான விவாதத்தை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தொடர்ந்தார். பின்னர் இந்தச்சட்டமுன்வடிவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கங்களுக்கிடையே நிறைவேற்றப் பட்டது. பின்னர் அவை 4 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மறுபடியும் அவை 4 மணிக்குக்கூடியபோது, இளம் சிறார் நீதி (சிறார் நலம் மற்றும் பாதுகாப்பு) திருத்தச் சட்டமுன்வடிவு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதம்இன்றி, எதிர்க்கட்சி உறுப்பினர் களின் எதிர்ப்புகளுக்கிடையே நிறைவேற்றப்பட்டது. பின்னர் அவை புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. 

பாஜக எம்.பி.க்கள் கூட்டம்
இதனிடையே பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கூட்டினார். அதில் பேசிய அவர், நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு முடக்கச் செய்கிறார்கள் என்றும் எந்தப் பிரச்சனையையும் அவையில் விவாதிப்பதற்கு அரசு தயாராக இருக்கிறது என்றும் கூறிக் கொண்டார்.

மம்தா சந்திப்பு
இதனிடையே பிரதமர் மோடியை புதுதில்லியில் செவ்வாயன்று நேரில் சந்தித்துப் பேசியமேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பெகாசஸ் உள்ளிட்ட விவகாரங் களில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்பது தன்னியல்பாகவே உருவாகிவிட்டது என்று கூறினார். 

;