india

img

தில்லி கலவர வழக்கில் போலீஸ் விசாரணை கேலிக்குரியதாக உள்ளது.... நீதிமன்றம் கடும் விமர்சனம்.... ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிப்பு...

புதுதில்லி:
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய இஸ்லாமியர்கள் மீது, கடந்த 2020 பிப்ரவரியில் சங்-பரிவார் அமைப்புகள் கொடூர வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டன. இதில் 53 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். 

இந்த வன்முறைச் சம்பவத்தின் போது, இஸ்லாமியர்களின் சொத்துக்கள் குறிவைத்துச் சூறையாடப்பட்டன. மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் தீவைக்கப்பட்டன. பலர் துப்பாக்கியால் சுடப்பட்டும், ஆயுதங்களால் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். இந்தச்சம்பவம் தொடர்பான பல்வேறு வழக்குகள் தில்லி அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.இவற்றில் முகமது நசீர் துப்பாக்கியால் சுடப்பட்ட வழக்கும் ஒன்றாகும். 2020 தில்லி வன்முறையின்போது முகமது நசீர் என்பவரை நோக்கி நரேஷ் தியாகி என்ற இளைஞர் துப்பாக்கியால் சுட்டதில், நசீர் நூலிழையில்உயிர் தப்பினார். எனினும் அவரது இடது கண்ணில்காயம் ஏற்பட்டு பார்வை பறிபோனது.தன்மீதான இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக நசீர் பலமுறை புகார் அளித் தும் தில்லி போலீசார் எப்ஐஆர் பதிவு செய்யவில்லை. இவ்வளவுக்கும் நசீர் தில்லி சட்டமேலவை உறுப்பினராக இருந்தவர்.

இதுதொடர்பாக அவர் தில்லி நீதிமன்றத்தை நாடிய நிலையில், நீதிமன்றமும் இதுதொடர்பாக தனியாகவழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிட் டது.ஆனால் இந்த சம்பவத்தில் போதியஆதாரம் இல்லை என்றும் சம்பவம் நடைபெற்ற நேரத்தில், குற்றம் சாட்டப்பட்ட நரேஷ் தியாகி தில்லியிலேயே இல்லை என்று போலீசார் கூறி விட்டனர். நசீரை,நரேஷ் தியாகி துப்பாக்கியால் சுட்டபோதுநேரில் பார்த்த சாட்சி யாரும் இல்லை என்பதும் அவர்களின் மற்றொரு வாதம்.இவ்வாறு கூறி, 6 பேர் துப்பாக்கிச் சூட்டில்காயம்பட்ட வேறொரு வழக்கில் நசீரின்பெயரை கூடுதலாக சேர்த்து கடமையைமுடித்துக் கொண்டனர்.இந்நிலையில்தான், இந்த வழக்கு கூடுதல் அமர்வு நீதிபதி வினோத் யாதவ்முன்னிலையில் மீண்டும் விசாரணைக்குவந்த நிலையில், அவர் தில்லி போலீசாரை கடுமையாகச் சாடியுள்ளார். இந்தச் சம்பவத்தில் போலீசாரின் விசாரணை மோசமானதாகவும் கேலிக்குரிய வகையிலும் இருக்கிறது என்று கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும்,போலீசாரின் அலட்சியமான செயல்பாட்டிற்காக ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தநீதிபதி வினோத் யாதவ், முகமது நசீர் அளித்த புகாரின் பேரில் தனியாக ஒரு எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்; இவ்வழக்கில் நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய நீதிமன்ற உத்தரவின் நகலை தில்லி காவல்துறை ஆணையருக்கு அனுப்ப வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளார்.

அசோக் நகரில் இருந்த மதீனா மஸ்ஜித் மசூதி தீவைத்து எரிக்கப்பட்ட வழக்கிலும், சில நாட்களுக்கு முன்பு இதேபோல தில்லி காவல்துறைக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து இருந்தது. “புகார் அளித்த ஹாஷிம் அலியையே கைது செய்தது தில்லி போலீசாரின் அபத்தமான நடவடிக்கை! இது விசாரணை அமைப்பின் மோசமான அலட்சியப் போக்கைக் காட்டுகிறது” என சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.இதனிடையே நீதிபதி வினோத் யாதவின் தீர்ப்பை எதிர்த்து, தில்லி காவல்துறை, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

;