நடுவானில் பறந்த கொண்டிருந்த விமானத்தின் கேபினில் திடீரென புகை வந்ததை தொடர்ந்து அவசரமாக தரையிறக்கப்பட்டது.
தலைநகர் தில்லியிலிருந்து மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூருக்கு இன்று காலை எஸ்ஜி-2862 ஸ்பைஸ் ஜெட் விமானம் புறப்பட்டது. விமானம் சுமார் 5,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று கேபினில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால், விமானம் மீண்டும் தில்லிக்கு சென்று அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு பயணிகளை வெளியேற்றப்பட்டனர். விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பயணிகள் அனைவரும் நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து ஸ்பெஸ் ஜெட் நிறுவனம் விரிவான அறிக்கை தர வேண்டும் என கோரியுள்ள விமான போக்குவரத்து ஆணையம், தொழில்நுட்ப கோளாறு தான் இந்த சம்பவத்துக்கு காரணமாக இருந்திருக்கும் என கூறியுள்ளனர்.
முன்னதாக இதேபோல் கடந்த ஜூன் 19 ஆம் தேதி, பாட்னாவில் இருந்து டெல்லி கிளம்பிய விமானத்தில் திடீரென ஏற்பட்ட தீயால் விமானம் மீண்டும் பாட்னாவில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.