india

img

நாட்டு மக்கள் அனைவரும் பிணைக்கைதிகளைப் போல இருக்கின்றனர்.... பிரதமர் மோடியால் இந்திய அரசு அமைப்பே சரிந்து விட்டது.... விமர்சனக் கணைகளால் துளைத்தெடுத்த சர்வதேச ஊடகங்கள்....

புதுதில்லி:
ஒருநாளைக்கான கொரோனா தொற்றுப் பாதிப்பு எண்ணிக்கையில், உலக நாடுகளை இந்தியா பின்னுக்குத் தள்ளியிருக்கும் நிலையில் சர்வதேச ஊடகங்களின் பார்வை இந்தியா பக்கம் திரும்பியுள்ளது.

உலக நாடுகள் பலவற்றில் தடுப்பூசி வெற்றிகரமாக செயல்படத் துவங்கி கொரோனா பரவல் வெகுவாக குறைந்திருக்கும் வேளையில், அந்த நாடுகளுக்கெல்லாம் தேவையான தடுப்பூசியை உற்பத்தி செய்து விநியோகித்து வரும் இந்தியாவில் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவிவருவது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.மருத்துவ ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை, கொத்துக் கொத்தாக இறக்கும் மக்கள், எங்கு பார்த்தாலும் புதைகுழிகள், தகனமேடைகள் என நாளுக்கு நாள் இந்திய மக்களின் துயரம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் என்னதான் நடக்கிறது, அரசாங்கம் என ஒன்று இருக்கிறதா? என்று உலகின் பல்வேறு முன்னணி நாளிதழ்கள் பலவும் கேள்விகளை எழுப்பியுள்ளன. மேலும், மோடியின் திறமையின்மையால் இந்திய அரசு ஸ்தம்பித்து இருப்பதாகவும் அரசு அமைப்பே சரிந்து போயிருப்பதாகவும் குற்றம்சாட்டியிருக்கும் செய்தி ஊடகங்கள் நாட்டின் தலைநகரம் பிணைக் கைதி நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளன.இங்கிலாந்தைச் சேர்ந்த ஆங்கில நாளிதழான ‘தி கார்டியன்’ (The Guardian) - ‘நிர்வாகம் சீரழிந்து விட்டது : கொரோனா நரகத்தில் இந்தியர்கள்’ என்ற தலைப்பில் ஏப்ரல் 21 அன்று செய்திக்கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

“எனது வாழ்நாளில் இதுபோன்ற ஒரு கூட்டத்தை எந்த தேர்தல் பிரச்சாரத்திலும் பார்த்ததில்லை” என்று மேற்குவங்க தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரையைத் தொட்டு ஆரம்பிக்கும் அந்த கட்டுரை, இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு வெளியே ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரிசை வரிசையாக நிற்கின்றன; ஆனாலும், தங்களின்கட்சி உறுதியாக வெற்றிபெறப் போகிறது என்றுகருதும் மேற்கு வங்கத்தில் பாஜக தனது தேர்தல் பொதுக்கூட்டங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவில்லை. பிரதமர் மோடியும், அவரது உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், இந்த வாரத்தில்கூட பொதுக்கூட்டங்களையும் பேரணிகளையும் தொடர்ந்து நடத்தினர். கூட்டம் சேரவேண்டாம், தனி மனித இடைவெளி வேண்டும் என்ற மருத்துவர்களின் அறிவுறுத்தலுக்கு மாறாககூட்டம் சேர்ப்பதிலேயே இருவரும் கவனமாக இருந்தனர் என்று விமர்சித்துள்ளது.

சுகாதார வல்லுநர்களால் வழங்கப்பட்ட எச்சரிக்கையை, மோடி அரசாங்கம் புறக்கணித்ததே, கொரோனா நெருக்கடிக்குக் காரணம்என்று கூறியுள்ள ‘தி கார்டியன்’, குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற பாஜக ஆளும்
மாநிலங்களில் உண்மையான கொரோனா எண்ணிக்கை மறைத்து மோசடி செய்யப்பட்டி ருக்கலாம் என்று சந்தேகமும் எழுப்பியுள்ளது. ஏனெனில் அங்குள்ள மருத்துவமனைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பிணங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என்று கார்டியன் குறிப்பிடுகிறது. கொரோனா முதல் அலை விஷயத்தில் மோடி அரசு பல்வேறு மட்டங்களிலும் சுயதிருப்தி அடைந்து கொண்டதே தற்போதைய இரண்டாவது அலை மூலமான பேரழிவுக்கு காரணம் என்றும் விமர்சித்துள்ளது.
இங்கிலாந்தின் மற்றொரு நாளிதழான ‘டெய்லி மெயில்’ (Daily Mail) ஏடு, நாசிக் நகரில் ஆக்சிஜன் கசிவால் 22 பேர் உயிரிழந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, கொரோனா கட்டுப்பாடு களை மீறியதாக ஒருபுறம் மக்கள் மீது போலீசார் தடியடி நடத்துவதையும், மறுபுறம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறுவதையும் பதிவு செய்துள்ளது.‘நியூ யார்க் டைம்ஸ்’ (New York Times) இதழானது, தனது சிறப்புச் செய்திப் பிரிவில் பொருளாதார மற்றும் தொற்றுநோய் குறித்த விவகாரங்கள்குறித்த ஆய்வாளரான ரமணன் லஷ்மிநாரா யணன் என்பவரது கட்டுரையை பிரசுரித்துள்ளது. 

‘இந்தியாவில் இரண்டாவது அலை கட்டுப்பாட்டை மீறி விட்டது’ என்ற தலைப்பிலான அந்தகட்டுரையில், கும்பமேளா கொண்டாட்டம், திரளான தேர்தல் திருவிழா ஆகியவற்றை பதிவு செய்துள்ள லஷ்மிநாராயணன், மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆங்காங்கே கொரோனாவால் இறந்தவர்களின் பிணங்கள் எரிக்கப்படும் சம்பவங்களை விவரித்துள்ளார். மேலும் இந்த துயரத்தை, 1984-ஆம் ஆண்டுபோபாலில் நடந்த- யூனியன் கார்பைட் நிறுவனம் சம்பந்தப்பட்ட விஷவாயு விபத்துடன் அவர்ஒப்பிட்டுள்ளார். “ஊடகங்களால் உற்சாகப்படுத்தப் பட்டு, தொற்றுநோய்க்கு எதிராக முன்கூட்டியே மோடி வெற்றியை அறிவித்து விட்டார். இதனால் இரண்டாவது அலை பற்றி அவரிடம் எந்தமுன்யோசனையும் திட்டமும் இல்லை. கொரோனாவை எதிர்கொள்ளவும் அவர் ஆயத்தம் ஆகவில்லை. அதுவே இவ்வளவு பெரிய பாதிப்புக்கு காரணம் என்று லஷ்மிநாராயணன் கூறியுள்ளார்.  உலகின் தினசரி கொரோனா தொற்றில் 40 சதவிகிதம் இந்தியாவில்தான் ஏற்படுகிறது என்ற புள்ளிவிவரத்தையும் ‘நியூயார்க் டைம்ஸ்’ குறிப்பிட்டுள்ளது.

‘லே மோண்டே’ (Le Monde) எனும் பிரெஞ்சு நாளிதழானது நாட்டின் தலைநகர் தில்லியில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து பதிவிட்டிருப்பதோடு, இதுபோன்ற ஒரு நிலையை தங்கள் வாழ்நாளில் கண்டதில்லை என்று அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.கொரோனா தொற்றில் முன்னணியில் இருக்கும் மற்றொரு நாடான பிரேசில் நாட்டின் ‘ஓ குளோபோ’ (O Globo) நாளிதழ் இந்தியாவில் பரவிவரும் புதுவிதமான கொரோனா வைரஸ் குறித்து விளக்கியுள்ளது. ‘ஜப்பான் டைம்ஸ்’ (Japan Times) நாளிதழும் இந்தியாவில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாமல் இருப்பது ஆகியவற்றை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியா-வின் சிட்னி மார்னிங் ஹெரால்ட் (Sydney Morning Herald) பத்திரிக்கை, ‘இந்தியாவில் நடந்த கும்பமேளா, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், மோடி அரசின் முன்னுக்குபின்னான அறிவிப்புகள், பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுகள் குறித்து விளக்கமாக பதிவிட்டுள்ளது. அதாவது, மோடியின் தேர்தல் பிரச்சாரம், ஆயிரக்கணக்கானோர் கூடிய அவரது பொதுக்கூட்டங்கள், கொரோனா தொற்றுப் பரவல் சூப்பர்ஸ்ப்ரெடராக மாறுவதற்கு காரணமான லட்சக்கணக்கானோர் கூடிய இந்து திருவிழாவான கும்பமேளாவிற்கு மோடி அரசாங்கம் அளித்த ஒப்புதல் ஆகியவற்றைக் கொண்டு, கொரோனா தொற்றுப் பரவலில் இந்தியா ஒரே நாளில் உலக சாதனைகளை முறியடித்து விட்டது என்றும் சாடியுள்ளது.‘கல்ப் டைம்ஸ்’ நாளிதழானது இந்தியாவில் கொரோனா தொற்று புதிய உச்சம் தொட்டிருப்பது குறித்து செய்தி வெளியிட்டிருப்பதுடன், இந்தியா செல்வதற்கு, ஓமன் அரசு விதித்திருக்கும் தடை குறித்தும் தெரிவித்துள்ளது.

;