india

img

தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் சூரிய மின்தகடுகள் பொருத்தி மின் உற்பத்தி.... மக்களவையில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி தகவல்....

புதுதில்லி:
தேசிய நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இடங்களில் சூரிய மின்தகடுகள் பொருத்தி,மின் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
மக்களவையில் வெள்ளிக்கிழமை யன்று அமைச்சர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்  கூறியிருப்பதாவது:

தேசிய நெடுஞ்சாலைகளுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் கட்டிடங்களில், டோல் பிளாசாக்களின்  மேற் கூரைகள் ஆகியவற்றில் சூரிய மின்தகடுகளை பொருத்தி, அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, போக்குவரத்து, நெடுஞ்சாலை சேவைகளுக்கு பயன்படுத்த ஒன்றிய சாலை போக்குவரத்து- நெடுஞ்சாலை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.இதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்ய  இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஒன்றிய மின்துறை அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான இஇஎஸ்எல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. நாக்பூர் பைபாஸ், சோலாப்பூர் யெட்ல்ஷி ஆகிய இடங்களில் டோல் பிளாசாக்களின் கூரைகள், சத்தீஸ்கர் எல்லையில் உள்ள வைகங்கா பாலம் ஆகியவற்றில் சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.திரவ நிலை இயற்கை எரிவாயுவின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம், 2030 ஆம் ஆண்டுக்குள், முக்கிய எரிபொருளில் திரவ எரிவாயு கலப்பு 15 சதவீதம் வரை அதிகரிக்கப்படும்.

மின் வாகனங்களின் பதிவு அதிகரிப்பு
கடந்த 2018ம் ஆண்டில் 124 ஆக இருந்த, மின்சார வாகனங் களின் பதிவு, தற்போது 1356 ஆக அதிகரித்துள்ளது. சரக்கு போக்குவரத்துக்கான மின்சார வாகனங் களின் எண்ணிக்கை கடந்த 2018 ஆம் ஆண்டில் 6246 ஆக இருந்தது. அது தற்போது 27,645 ஆக உள்ளது. வாகனங்களின் டயர்களுக்கு ஸ்டார் மதிப்பீடு கொண்டுவரவும் மற்றும் சி1, சி2, சி3 என்ற பிரிவுகளில் வகைப்படுத்தவும் மோட்டார் வாகன சட்டத்தின் 95வது பிரிவில் திருத்தம் கொண்டு வருவதற்கான அறிவிப்பை ஒன்றிய  சாலை போக்குவரத்து அமைச்சகம் 2021 மே 17 அன்று வெளியிட்டுள்ளது. இந்த மதிப்பீடுகள் டயர்கள் உருளும் போது ஏற்படும் எதிர்ப்பு, ஈரப் பிடிப்பு, உருளும் போது ஏற்படும் ஒலி அளவு, பிரேக் பிடிக்கும்போது நிற்கும் திறன் போன்ற தேவைகளை நிறைவேற்றுவதாக இருக்கும். அதிக மதிப்பீடு உள்ள டயர்கள் எரிபொருள் சேமிப்பு மற்றும் சொகுசான பயணத்துக்கு உதவும்.கொங்கன் மற்றும் மேற்கு மகாராஷ்டிராவில் வரலாறு காணாத மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது., இவற்றில் ரூ. 52 கோடி தற்காலிக சீரமைப்புக்கும், ரூ.48 கோடி நிரந்தர சீரமைப்புக்கும் பயன்படுத்தப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;