india

img

கொரோனா தடுப்பூசி குறித்த விவரங்களை பகிரக்கூடாது... மாநில அரசுகளுக்கு தடைவிதித்த ஒன்றிய அரசு....

புதுதில்லி:
கொரோனா தடுப்பூசி கையிருப்பு தரவுகளை பொதுத்தளத்தில் பகிரக்கூடாது என மாநிலஅரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதி யுள்ளது.மாநில அரசுகள் தங்களிடம் உள்ள அனைத்து தடுப்பூசிகளின் கையிருப்பு மற்றும் அவற்றின் விநியோகம் குறித்த தகவல்களை ஒன்றிய அரசிடம் தெரிவிக்க வேண்டும். 

2012-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவின் (Improving the Efficiency of Vaccinations Systems in Multiple States) இணையதள தடுப்பூசி நுண்ணறிவு வலைதள அமைப்பில்ஒன்றியம் முதல் மாவட்டம் வரையில் அனைத்துமட்டத்திலும் உள்ள தடுப்பூசி கையிருப்பு, அவைசேமித்து வைக்கப்பட்டிருக்கும் தட்பவெப்ப நிலை போன்ற தரவுகள் இடம்பெற்றுள்ளது. ஒன்றிய அரசுக்குச் சொந்தமான இவின் (eVin) இணையதள பக்கத்தில் உள்ள அந்தத் தரவுகளை பொதுவெளியில் அனைவரும் பார்த்துக்கொள்ளலாம். கொரோனா தடுப்பூசி தொடர்பான தரவுகளும் இவின் இணையதள பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த தரவுகள் மாநில அரசுகளால் தினசரி அப்டேட் செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், தடுப்பூசி கையிருப்பு தொடர்பான தரவுகளை பொதுவெளியில் வெளியிட வேண்டாம் என மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, மாநில, யூனியன் பிரதேசஅரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் (குழந்தைகள் ஆரோக்கியம் (ஆர்சிஎச்))ஆலோசகர் பிரதீப் ஹல்வார் ஜூன் 4-ஆம் தேதி எழுதியுள்ள கடிதத்தில், மின்னணு தடுப்பூசி நுண்ணறிவு வலையமைப்பில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு மற்றும் விநியோகத்தை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் தினசரி பதிவிட்டு வருகின்றன. ‘ஒன்றிய அரசுக்கு சொந்தமான இணைய தளபக்கத்தில் பதிவிடப்படும் கொரோனா தடுப்பூசி கையிருப்பு, விநியோக தரவுகளை மாநில அரசுகள் ஒன்றிய அரசின் ஒப்புதல் இன்றி வேறு எந்த அமைப்புடனோ, ஊடகத்திடமோ, இணையதளத்திலோ, பொதுவெளியிலோ வெளியிடக்கூடாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாநில அரசுகள் சேமித்து வைத்துள்ள தடுப்பூசிகளின் தட்பவெப்பநிலை, கையிருப்பு
அளவு உள்ளிட்ட தரவுகளை தனியார் அமைப்புகள், நிறுவனங்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், கொரோனா தடுப்பூசி அளவுகளின் எண்ணிக்கை 24 கோடியைத் தாண்டியுள்ளது என்று ஒப்புக்கொண்டுள்ள ஒன்றிய அரசு, வியாழக்கிழமை காலை ஏழு மணி நிலவரப்படி நாடு முழுவதும் 19,54,82,945 பேர் முதல் தவணை தடுப்பூசியும்  4,72,43,748 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் என மொத்தம் 24,27,26,693 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.“18-44 வயதுக்குட்பட்டவர்களில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 3.38 கோடி மக்கள் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாகவும்,  4.05 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பீகார், தில்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை 18-44 வயதுக்குட்பட்டவர்களில் தலா 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு  முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

;