india

img

வேளாண் சட்டங்களை ரத்து செய்து பட்ஜெட் தொடரில் அறிவித்திடுக.... மத்திய அரசுக்கு இடதுசாரிக் கட்சிகள் கோரிக்கை....

புதுதில்லி:
இந்த வாரம் தொடங்கவுள்ள  நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை ரத்துசெய்திட மத்திய அரசு முன்வர வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் து.ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்)பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் தேவபிரத பிஸ்வாஸ், புரட்சி சோசலிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பதைக்கைவிட்டு, இந்த வாரம் தொடங்க விருக்கும் நாடாளுமன்றத்தின் பட்ஜெட்கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யப்படும் என்றுபோராடும் விவசாயிகளுக்கு உடனடியாகத் தெரிவித்திட வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் கோருகின்றன. இந்தச் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாக தன் விருப்பத்தினை ஏற்கனவே மத்திய அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

பகுத்தறிவுடன் நடந்து கொள்க!
நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப் பட்டு, குடியரசுத் தலைவர் கையொப்ப மிட்டு, அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுவிட்டால் அது நாட்டின் சட்டமாக மாறிவிடுகிறது. அவற்றை நிறுத்தி வைத்திட முடியாது. அவை ரத்துசெய்யப்படாத வரை அவை நடைமுறைப்படுத்தப்படக் கூடியவை களே. எனவே, அரசாங்கம் பகுத்தறி வுடன் நடந்துகொள்ள வேண்டும். இந்தச்சட்டங்களை ரத்து செய்திடவேண்டும், வேளாண் சீர்திருத்தங்கள் சம்பந்தமாக விவசாயிகளுடனும், மற்றவர்களுடனும், மாநில அரசாங்கங்களுடனும் விவாதங்கள் நடத்திட வேண்டும். அதன்பின்னர் ஏதேனும் முன்மொழிவுகள் இருப்பின் நாடாளுமன்றத்தின் முன் பரிசீலனை செய்வதற்காகவும், விவாதங்கள் நடத்துவதற்காகவும்  கொண்டுவர வேண்டும்.

இடதுசாரிக் கட்சிகள், கடும் குளிரிலும் தில்லியின் எல்லைப் பகுதியிலும் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் அமைதியான முறையில் உறுதியுடனும், ஒற்றுமையுடனும் போராடிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகள் காட்டிவரும் நெஞ்சுறுதியையும் வீரத்தையும் பாராட்டுகின்றன.இப்போராட்டத்தில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தியாகிகளாகி இருக்கிறார்கள். நாடு முழுவதும் நடைபெற்றுவரும் எதிர்ப்பியக்கங்கள் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றன. இச்சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், நாட்டின் மதச்சார்பின்மை, ஜனநாயக அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திடவும் குடியரசு தினத்தன்று நடத்தவிருக்கும் டிராக்டர்கள் அணிவகுப்பின் மூலம் அவர்கள் காட்டிடும் தேசப்பற்று உறுதியையும் பாராட்டுகிறோம்.இடதுசாரிக் கட்சிகள், நமக்கு உணவு படைத்திடும் உழவர்களின் வரலாறு படைத்திடும் இப்போராட்டத் திற்கு தங்களுடைய ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் மீண்டும் தெரிவித்துக்கொள்கின்றன.இவ்வாறு அறிக்கையில் தெரி வித்துள்ளனர். (ந.நி.)
 

;