india

img

இரத்தம் உறிஞ்சும் ஒட்டுண்ணிகள்.... மோடி அரசு மீது சீத்தாராம் யெச்சூரி கடும் தாக்கு...

புதுதில்லி:
மக்களின் அதிருப்தியையும் போராட்ட உணர்வையும் பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டு பின்னர் அதே மக்களுக்கு எதிராக திரும்புபவர்கள்தான்  இரத்தம்உறிஞ்சும் ஒட்டுண்ணிகள் என்று பாஜகஆட்சியாளர்களை மிகக்கடுமையாக சாடியிருக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி. 

மாநிலங்களவையில் திங்களன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளின் போராட்டத்தைப் பற்றி மிகவும்இழிவான முறையில் குறிப்பிட்டார்.போராட்ட ஜீவிகள் - அதாவது போராட்டங்களால் பிழைப்பு நடத்துபவர்கள் என்றுபுதிய வகை கூட்டம் நாட்டில் உருவாகியிருப்பதாகவும் எந்தவகைப் போராட்டம் எங்கு நடந்தாலும் அங்கு அவர்கள் சென்றுவிடுவதாகவும் மிகவும் இழிவான முறையில் பேசினார். இந்தப் பேச்சுக்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியிருப்பதாவது:

போராடும் விவசாயிகளை ‘அந்தோலன் ஜீவி’ அதாவது போராட்ட ஜீவிகள் - போராட்டங்கள் மூலம் பிழைப்பு நடத்துபவர்கள் என்று இழிவுபடுத்துகிறார் பிரதமர். மக்கள் தங்களதுவாழ்வாதாரத்திற்காக, பாதுகாப்புக் காக, வாழ்வு முன்னேற வேண்டும் என்பதற்காக, அதற்கான வாய்ப்பு களை பறிக்கப்படும்போதெல்லாம் வேறுவழியின்றி போராட்டத்தில் இறங்குகிறார்கள். போராடுபவர்கள் தேசபக்தர்களே தவிர ஒட்டுண்ணிகள் அல்ல.மாறாக, மக்களின் அதிருப்தியை யும் போராட்டத்தையும் பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிட்டு, பிறகு அதே மக்களுக்கு எதிராக திரும்புபவர்கள்தான் இரத்தம் உறிஞ்சும் ஒட்டுண்ணிகள்.பிரதமரின் நாடாளுமன்ற உரை பொய்களால் நிரம்பியது. 

நாம் எதற்காக விவசாய சீர்திருத்தத்தைக் கோரினோம்? இந்திய விவசாயத்தை வலுப்படுத்தவும், உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தவும், விவசாயிகளுக்கு நியாயமான வருமானம் கிடைக்கவும் - போன்ற காரணங்களுக்காகத்தான் சீர்திருத்தம்கோரினோம். ஆனால் இந்த ஆட்சியாளர்கள் செய்த சீர்திருத்தம் என்ன?தங்களது கூட்டுக்களவாணி முதலாளிகளுக்கு கொள்ளை லாபத்தை உருவாக்கிக் கொடுப்பதற்காக, இந்திய விவசாயத்தை அழிப்பதற்காக, விவசாயிகளையே ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டுவதற்காக அவர்களது சீர்திருத்தங்கள் முனைகின்றன. இத்தகைய கேடுகெட்ட சீர்திருத்தங்களை இந்த நாட்டின் எந்த விவசாயியும் கேட்கவில்லை. எனவே போராட்டத்தின் தீவிரத்தை கணக்கில்கொண்டு உடனடியாக மூன்று வேளாண் கருப்புச் சட்டங்களையும் திரும்பப் பெறுங்கள். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

;