india

img

சிஏஜி அலுவலகமும் மோடி அரசின் பிடிக்குள் போனது? அரசின் செயல்பாடுகள் குறித்த அறிக்கைகள் 75 சதவீதம் குறைந்தது......

புதுதில்லி:
மத்திய அரசின் நிதி செலவினங்கள், திட்ட செயல்பாடுகளைக் கண்காணித்து, அவற்றைத் தணிக்கை செய்து அறிக்கை வெளியிடுவது, இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலகம் (Comptroller and Auditor General of India - CAG) ஆகும். மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அலுவலகம், அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு கொண்ட தன்னாட்சி அமைப்பு என்பதால், ஆட்சியாளர்களின் மோசமான நிர்வாகத்தை பல்வேறு சமயங்களில் துணிந்துவெளிப்படுத்தி வந்துள்ளது. ஊழல் முறைகேடுகளையும் தயவு தாட்சண்யமின்றி அம்பலப்படுத்தியுள்ளது.

மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல், நிலக்கரி ஊழல், ஆதர்ஷ்வீட்டு வசதி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் உள்ளிட்டவை, சிஏஜி அறிக் கைகள் மூலமே வெளியுலகுக்கு தெரியவந்தன. பின்னாளில் இந்த ஊழல் விவகாரங் களை பூதாகரப்படுத்தியே,  காங்கிரசை வீழ்த்தி, பாஜக ஆட்சிக்கு வந்தது. அன்னாஹசாரே, கிரண் பேடி, ராம்தேவ் போன்றவர்களை, ஊழலுக்கு எதிரான களத்தில் இறக்கிவிட்டு, பாஜக ஆதாயம் அடைந்தது.மோடி பிரதமரானார்.

இந்நிலையில்தான், நரேந்திர மோடி பிரதமரானதற்குப் பிறகு, கடந்த 7 ஆண்டுகளில், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து, சிஏஜி அறிக்கை அளிப்பதே 75 சதவிகிதம் குறைந்து விட்டது என்ற அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது.சிஏஜி-யின் ஆய்வறிக்கைகள் தொடர்பாக, ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேள்வி எழுப்பியிருந்த நிலையில்,அதற்கு மத்திய அரசாங்கத்திடமிருந்தே பதில் கிடைத்துள்ளது.அதில், கடந்த 2015 ஆம் ஆண்டு மத்தியஅரசின் நிதி மேலாண்மை குறித்து, மத்திய கணக்கு தணிக்கையாளர் அலுவலகம்55 அறிக்கைகள் தாக்கல் செய்துள்ளது. ஆனால் அதுவே 2020ஆம் ஆண்டில் வெறும்14 அறிக்கைகள் என்று குறைந்துள்ளது. இது 75 சதவிகிதம் குறைவு ஆகும்.அதிலும் குறிப்பாக, பாதுகாப்புத்துறை சார்ந்த தணிக்கை அறிக்கைகளை எடுத்துக் கொண்டால், இத்துறை தொடர்பாக 2017-ஆம் ஆண்டில் 8 தணிக்கை அறிக்கைகள்நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டநிலையில், அது 2020-ஆம் ஆண்டு பூஜ்ஜியமாக மாறியுள்ளது. அதேபோல ரயில்வேதுறை தொடர்பான தணிக்கை அறிக்கையை எடுத்துக் கொண்டாலும், 2017-ஆம் ஆண்டில், ஐந்து அறிக்கைகள் தயாரிக்கப்பட் டன என்றால், 2020-இல் மூன்றாக குறைந் துள்ளது.இது பரவலாக விவாதங்களை எழுப்பியுள்ளது.

பணமதிப்பு நீக்கம் போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்கள், அவை இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கம் போன்றவற்றை, சிஏஜி தணிக்கைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. பொதுப் பணத்தின் செலவைத் தணிக்கை செய்வதற்கான தனது முதன்மை கடமையைக் கூட சிஏஜி முறையாக நிறைவேற்றவில்லை. இது அசாதாரணமானது என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜவஹர் சிர்கார் தெரிவித்துள்ளார்.அதேபோல், மக்களவை முன்னாள் பொதுச்செயலாளர் பி.டி.டி. ஆச்சார்யா அளித்துள்ள பேட்டியில், “சிஏஜி பணத்தைநியாயமாகவும், விதிகள் மற்றும் சட்டங்களின்படி அவை செலவிடப்பட்டுள்ளதா? என்பதையும் சிஏஜி-தான் கண்டுபிடிக்க வேண்டும். அரசாங்கத்தின் இந்த பரிவர்த்தனைகள் அனைத்தையும் எடுத்து ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், தற்போதைய அறிக்கை குறைவு செய்தியைப் பார்க்கையில், ஒன்று, சிஏஜி குறைந்த எண்ணிக்கையிலான விஷயங்களை மட்டுமே தணிக்கைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது. அல்லது மத்திய அரசின் வரவு- செலவில் அது தவறு எதையும் காணவில்லை என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, “தணிக்கை அறிக்கைகளின் இணக்கம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் சில வீழ்ச்சிகள் ஏற்படக்கூடும்,ஏனெனில் இவை ஆய்வு அடிப்படையிலானவை மற்றும் இடர் மதிப்பீட்டைப் பொறுத்தவை” என்று பெயர் குறிப்பிட விரும்பாத சிஏஜி அதிகாரி சமாளித்துள்ளார். நிதிக் கணக்கு தொடர்பான அறிக்கைகள் ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கத்திற்கு அனுப்பப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.ஆனால், மத்தியப் புலனாய்வுக் கழகம், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற தன்னாட்சி அமைப்புகளின் வரிசையில் சிஏஜி-யும் தற்போது மோடி அரசின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

;