india

img

ஒரே ஆண்டில் ஏழைகளான 3.2 கோடி நடுத்தர மக்கள்.... கொரோனா கால வேலை- வருவாய் இழப்பால் தலைகீழாகிப் போன வாழ்க்கை...

புதுதில்லி:
கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில், எந்தவித முன்னேற்பாடுகள், பொருளாதார பாதுகாப்புகளையும் செய்யாமல் மத்திய பாஜக அரசு, கடந்த 2020 மார்ச் 25 அன்று திடீரென நாடு தழுவிய பொதுமுடக்கத்தை அறிவித்தது.

சுமார் 2 மாதங்களுக்கு மேல் நீடித்த இந்த பொதுமுடக்கத்தால், சாதாரண வியாபாரிகள் முதல் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். கோடிக்கணக்கான ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு அளித்து வந்த கட்டுமானம் உள்ளிட்டமுறைசாரா தொழில்கள் முடங்கியதால், இதனை நம்பியிருந்தவர்கள் ஸ்தம்பித்துப் போயினர். அன்றாடங் காய்ச்சிகளான அவர்கள், வேலைக்கு செல்ல முடியாமலும், வருமானம் ஈட்ட முடியாமலும் ஒவ்வொரு நாளும் வறுமையில் செத்துப் பிழைத்தனர். மோடி அரசு 5 கிலோ கோதுமையையும், அரிசியையும் கொடுத்ததோடு மக்களை கைகழுவியது. இதனால் நாடு முழுவதும் பட்டினிச் சாவுகள் அரங்கேறின. சொந்த ஊருக்குத் திரும்ப வாகனங்கள் இல்லாமல், பலர் கால்நடையாக நடந்தே உயிரை விட்டனர். 

நாட்டின் பொருளாதாரமும் மைனஸ் 23 சதவிகிதம் என்ற அளவிற்கு முன்னெப் போதும் இல்லாத வீழ்ச்சியைச் சந்தித்தது. தொடர்ந்து 3 காலாண்டுகள் ஜிடிபி வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக, வரலாற்றில் முதன்முறையாக பொருளாதார மந்தநிலை
யை இந்தியா சந்தித்தது. ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் அடிவாங்கியது. நிதிப்பற்றாக் குறை பல மடங்கு அதிகரித்தது. பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு ஓராண்டாகியும் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. கொரோனாவின்போது மூடப்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பல இப்போதும் திறக்க முடியாத நிலையில் உள்ளன. கோடிக்கணக்கானோர், இழந்த தங்களின் வேலையை மீண்டும் பெற முடியவில்லை. தொடர்ந்து வறுமையின் பிடியில் வாழ்வா, சாவா? போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்தான், கொரோனா பொதுமுடக்கத் தொழில் பாதிப்புக்களால், இந்தியாவில் ஒரே ஆண்டில் சுமார் 3 கோடியே 20 லட்சம் பேர் புதிதாக ஏழைகளாகி இருப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையகமாக கொண்ட ‘பியூ ஆய்வு மையம்’ ( Pew Research Center ) என்ற லாபநோக்கமற்ற அமைப்பானது, உலக வங்கிஅறிக்கையிலிருந்து கிடைத்த தரவுகளைவைத்து, இந்த முடிவுகளை வெளியிட்டுள் ளது. அதில், “கொரோனா பொதுமுடக்கக் காலத்தில், இந்தியாவில் மூன்றில் ஒரு நடுத்தரக் குடும்பத்தினர், பொருளாதாரத்தில் நலிவடைந்து ஏழைகள் ஆகியிருக்கின்றனர். அன்றாடம் ரூ. 145-க்கும் கீழ் தினக்கூலி பெறுவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும்மேலாக அதிகரித்துள்ளது” என்று கூறியுள்ளது.

அதாவது, கொரோனா பொதுமுடக்கத் திற்கு முன்பு, இந்தியாவில் நடுத்தர வர்க்கப்பிரிவில் 9 கோடியே 90 லட்சம் பேர் இருந்தநிலையில், தற்போது இப்பிரிவு மக்களின் எண்ணிக்கை 6 கோடியே 60 லட்சம் பேர்களாக குறைந்துள்ளது என்று தெரிவித் துள்ளது.இந்தியாவில் கடந்த 2011 முதல் 2019 வரை 8 ஆண்டுகளுக்கு இடையே சுமார் 5 கோடியே 70 பேர் நடுத்தர வர்க்கப் பிரிவில் இணைந்திருந்தனர். ஆனால், இப்போது ஒரே ஆண்டில் 3 கோடியே 20 லட்சம் நடுத்தரவர்க்கப் பிரிவிலிருந்து வெளியே தள்ளப்பட்டுஏழைகளாகி உள்ளனர்.நாளொன்றுக்கு, ரூ. 700 முதல் ரூ. 1450 வரை வருவாய் ஈட்டுவோரையே நடுத்தரவர்க்க குடும்பங்கள் என்று அழைக்கிறார்கள் என்ற நிலையில், இவர்களில் சுமார் 3 கோடியே 20 லட்சம் பேர் வறுமைக்கும்- ரூ. 145 முதல் ரூ. 700 வரை வருமானம் ஈட்டும் ஏழைகள் பிரிவுக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.இதேபோல அன்றாடம் ரூ. 145 அல்லதுஅதற்கும் குறைவாக ஊதியம் ஈட்டும் மக்களின் எண்ணிக்கையும் இந்தக் காலத்தில், இரண்டு மடங்கு அதிகரித்து, 7 கோடியே 50 லட்சம் பேர்களாக அதிகரித்துள்ளது. இதுஉலக வறுமை அதிகரிப்பில் 60 சதவிகிதம் என்பது பியூ ஆய்வு மையம் தெரிவிக்கிறது.நடுத்தரக் குடும்பங்கள், ஏழைகளின் நிலைதான் இதுவென்றால்,  அன்றாடம் ரூ. 1500-க்கும் மேல் சம்பாதிக்கும் பணக்காரர்களின் எண்ணிக்கையும் 30 சதவிகிதம் வரை சரிந்துள்ளது. இவர்களின் எண்ணிக் கையும் 1 கோடியே 80 லட்சம் பேர்களாக குறைந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் இந்தியாவில் வறுமை இரட்டிப்பாகியுள்ள அதேநேரத்தில், கொரோனா தொற்று உருவான இடமாக கூறப்படும் சீனாவில் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை; மக்களின் வாழ்க்கை தரங்களின் வீழ்ச்சி தீவிரமானதாக இல்லை: மிதமானதாகவே இருந்தது; வறுமை நிலைகளும் பெரியளவில் மாறவில்லை என்று பியூ ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.சீனாவில் நடுத்தர வர்க்கத்தினரின் சரிவு வெறும் 1 கோடி பேர் (2 சதவிகிதம்) என்ற அளவிலேயே இருந்துள்ளது. 10 லட்சம் பேர் மட்டுமே புதிதாக ஏழைகள் ஆகியுள்ளனர்.உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கை இந்தியாவும் சீனாவும் ஒன்றாகக் கொண்டிருப்பதால், பியூ ரிசர்ச் அமைப்பானது, இரு நாடுகளையும் ஒப்பீடுசெய்து- ஆய்வு விவரங்களை வெளியிட்டுள்ளது.

;